Published : 19 Dec 2021 07:30 AM
Last Updated : 19 Dec 2021 07:30 AM
தமிழ் அறிவுலகின் விவாதங்கள், சர்ச்சைகளின் களமாக சிற்றிதழ்கள் இருந்த நிலை மாறி இப்போது அந்த இடத்தைச் சமூக ஊடகங்கள் வகிக்கின்றன. தமிழ் அறிவுலகம் தொடர்பான சமீபத்திய சமூக ஊடக சர்ச்சை, ‘இடைநிலை சாதிகளிலிருந்து ஏன் நல்ல அறிஞர் பெருமக்கள் உருவாகவில்லை என்பது ஆய்வுக்குரிய விடயம்’ என்ற பதிவு. ‘அறிவின் மீது ஈடுபாடு இல்லாத கூட்டத்திலிருந்து ஒரு ரவிக்குமாரோ, ராஜ் கௌதமனோ, ஸ்டாலின் ராஜாங்கமோ, தர்மராஜோ இன்னும் நூறு வருஷத்துக்கு உருவாக வாய்ப்பில்லை’ என்கிறது அதற்கான மறுமொழி ஒன்று.
ரவிக்குமாரை நினைக்கும்தோறும் ‘நிறப்பிரிகை’யும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது. பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எனினும், ஒருபோதும் அவர்கள் தங்களை சாதிரீதியாக அடையாளப்படுத்திக்கொள்ளவே மாட்டார்கள். ரவிக்குமாரும் ராஜ் கெளதமனும் பணியாற்றிய அதே புதுச்சேரியில்தான் ம.இலெ. தங்கப்பா, க.பஞ்சாங்கம் இருவரும் பணியாற்றினார்கள். ரவிக்குமாரையும் ராஜ் கௌதமனையும் கொண்டாடுவோர் இவர்களை மறுப்பார்களெனின் அதன் நோக்கத்தை என்னவென்பது? அதே புதுச்சேரியிலிருந்துதான் வரலாற்றாளர் ஜெயசீல ஸ்டீபனும் இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரது வரலாற்றுத் துறை பங்களிப்புகளுக்கு நிகராகத் தமிழ் உலகில் யாருமுண்டா என்ற கேள்வியெழுந்தால் விரல்விட்டுத்தான் எண்ண வேண்டியிருக்கும். டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் இருவரும் பணியாற்றும் அதே மதுரையிலிருந்துதான் ந.முத்துமோகனும் அ.முத்துகிருஷ்ணனும் இயங்கிவருகிறார்கள். இடதுசாரிகளான இவர்களை சாதிய அடையாளத்துக்குள் அடைக்க முடியுமா?
தமிழ் இலக்கிய ஆய்வுகளில் தனக்கென்று தனி மாணவர் பட்டாளத்தையே உருவாக்கியவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ் இலக்கியத் துறைத் தலைவரான வீ.அரசு. தஞ்சையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி, சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தஞ்சையைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப் பேராசிரியரான ச.சுபாஷ் சந்திரபோஸ் தமிழிலக்கணத்தில் பெரும்புலமை பெற்ற அரிதான அறிஞர்களில் ஒருவர். இரா.கலியபெருமாள், பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களில் பேரறிஞர். ஒப்பீட்டு இலக்கியத்தில் நம்மிடம் உள்ள பெருஞ்சொத்து ப.மருதநாயகம். குறிப்பிட்ட ஒரு சில இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினால்தான் அறிஞர் என்று கற்பிக்கப்பட்டவர்கள் இந்தத் தமிழறிஞர்களின் பெயர்களைக்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைப் போன்று விளம்பரங்களை விரும்பாத அறிஞர்களின் பட்டியல் மிக நீளமானது. பத்திருபது பேர்களல்ல, நூற்றுக்கணக்கில் நீளும். இவர்கள் ஆற்றிய பெரும்பணிகளை நினைவுகூராது சாதிரீதியாக மட்டும் அடையாளப்படுத்துவது எவ்வளவு பெரிய இழிவைச் சுமத்துவதாக மாறும்? இந்த அறிஞர்களின் சமூகவியல் சார்ந்த கட்டுரைகள் தமிழில் உரிய கவனத்தைப் பெறாமல் போனதற்குப் பதிப்புத் துறை சார்ந்து நிலவும் மேலாதிக்கப் போக்கும் ஒரு காரணம். அதுவும் விவாதிக்கப்பட வேண்டும்.
நம்மிடையே வாழ்ந்து மறைந்த தொ.பரமசிவனுக்கு இணையாகத் தமிழ் அறிவுலகில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆய்வாளர்கள் யாருமுண்டா? இன்னும்கூட அவரை அடிக்குறிப்பிட்டு எழுதத் தெரியாத ஆய்வாளர் என்று விமர்சிக்கும் பேராசிரியர் பெருந்தகைகளும் இருக்கிறார்கள். இரா.இளங்குமரனார் செந்தமிழ் அந்தணர் எனப் போற்றப்பட்டவர். தமிழறிஞர்களது பெயர்களோடு சாதியையும் இணைத்துச் சொல்லும் வழக்கத்தைத் தவிர்த்த முன்னோடி. அவரைச் சாதியச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியுமா? சுயமான பார்வையுடன் சர்வதேசச் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த மார்க்சிய-பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு எவ்வளவு பெரியது! கோணங்கியின் குடும்பத்திலிருந்து ட்ராட்ஸ்கி மருது வரை கலை, இலக்கியத் துறைகளிலும் சொல்வதற்கு எவ்வளவோ உதாரணங்கள் உண்டு. ஆனால், இவர்களில் ஒருவர்கூட தங்களது சாதி அடையாளத்தை ஒருபோதும் பொதுவில் வைக்கமாட்டார்கள். இடதுசாரிகள் என்பதே அவர்களது ஒரே அடையாளம்.
இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் தமிழுக்கென்று தனிக் கல்லூரிகளைத் தொடங்கினர். ராமநாதபுரம் மன்னரும் பாலவநத்தம் ஜமீன்தாரும் அளித்த பொருளுதவியால்தான் சங்கத் தமிழே பதிப்பு கண்டது. திருமுறைகளே தமிழ் இலக்கியம் என்றிருந்த நிலையை மாற்றித் தமிழ் ஆய்வுத் துறையில் அரசியல் உணர்வுக்கும் நவீனத்துவ சிந்தனைகளுக்கும் வித்திட்டவை இடைநிலைச் சாதியினர் தொடங்கிய தமிழ்க் கல்லூரிகள்தான். மதுரையிலும் கரந்தையிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்களை நோக்கி, இன்று ‘உங்களில் அறிவுஜீவிகள் ஏன் உருவாகவில்லை?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. முனைவர் பட்டமும், கல்லூரிப் பேராசிரியர் பணியும்தான் ஆய்வறிஞருக்கான அடையாளங்கள் என்றால் அவற்றைச் சுமந்தபடி ஒவ்வொரு சாதியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
முனைவர் படிப்புக்கு இடைநிலைச் சாதியினர் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை கிடைப்பதில்லை. முனைவர் பட்டம் பெற்றாலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமில்லை. ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்துவிட்டு தமிழ்வெளியில் அறிவார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சிலர், விவசாயிகளாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த விவாதத்தின் கவனத்துக்குரிய மற்றொரு விஷயம், ஆதிக்கச் சாதிகள் என்ற வார்த்தைக்குப் பதிலாக இப்போது இடைநிலைச் சாதிகள் என்ற வார்த்தை புழக்கத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சாதிகளிலும் கணிசமானவை கடைநிலையில் வைத்து நடத்தப்பட்டவைதான் என்ற வரலாறும் வாசிப்புக்காகக் காத்திருக்கிறது. மேலும், பிறப்பின் அடிப்படையில் ஒதுக்குவதுதான் சாதியம் என்றால், ‘இடைநிலை சாதியில் பிறந்தவர்களில் அறிஞர்களே வர முடியாது’ என்ற பார்வையை என்னவென்று அழைப்பது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT