Published : 18 Dec 2021 07:18 AM
Last Updated : 18 Dec 2021 07:18 AM

நூல் வெளி: ஒரு ரொட்டித் துண்டை உண்ணும் தவம்!

நிஷா மன்சூர்

‘‘கடவுள் ஒரு காணாத மலர்

அம்மலரின் நறுமணமான காதல்

எங்கும் தெரிகிறது!’’

மௌலானா ரூமியின் தந்தை ஷைஃகு பஹாவுத்தீன் வலதின் ‘அல்-மஆரிஃப்’ என்கிற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டுமே இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரூமி மிகவும் நேசித்த பகுதிகள். தன் தந்தையின் ஆன்மிக அனுபவங்களாகப் பதியப்பட்ட இந்த நூலின் வாயிலாகவே அதுவரை ஞானப் பாதையில் நடந்துகொண்டிருந்த ரூமியை அதிலிருந்து விலக்கி மாபெரும் பிரபஞ்ச மூலத்துடன் இணைக்க வைத்த ரசவாதத்தை நிகழ்த்தினார் ரூமியின் குரு ஷம்ஸ் தப்ரீஸீ.

ஷைஃகு பஹாவுத்தீன் வலதின் இந்த நூலானது, அவரது தினசரி வாழ்வின் ஆன்மிக அனுபவங்களையும் ஞான தரிசனங்களையும் உடல், மனம், உணவு, பாலியல் உணர்வுகள் ஆகியவற்றின் மூலத்தைத் தேடிப் பயணிக்கும் பாதையையும் பதிவுசெய்திருக்கிறது. பாரசீக மொழியிலிருந்து ஜான் மொய்ன் மொழிபெயர்த்து, கோல்மன் பார்க்ஸ் செம்மையாக்கிய இந்த நூலை, ஆங்கிலத்திலிருந்து ரமீஸ் பிலாலி அழகாக மொழியாக்கம் செய்துள்ளார்.

இறைமறையுடனும் இறைத்தூதர் வாக்கு களுடனும் ஆத்மார்த்தமான உறவாட லோடு வளர்ந்த ஒரு மனிதர் தனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அந்த ஒளியின் தீற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். உலகத்தின் அதீத பாவனைகளுடனான உபசரிப்புகளையும் நவநாகரிகச் சாயம் பூசிய போலித்தனங்களையும் ஒருபோதும் அவர் உடலாலும் மனதாலும் அனுசரித்துச் செல்வதில்லை. அதேசமயம், ஒளிவுமறைவற்ற பரிசுத்தமான வாழ்வையே தனது பங்களிப்பாக இந்த உலகுக்கு நல்கிச் செல்வார்.

மனிதனின் சுயத்தை உணர்ந்து தெளிவதற்கான அழகிய பயணமாக மிளிர்கிறது இந்த நூல். நம் தமிழ் மண்ணின் ஞான ஆசானான குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா,

‘முட்டை பொரிப்பேன் முழுக்கோழி யும்பொரிப்பேன்

றட்டைப் பீங்கானிற் றருவேன் மனோன்மணியே’

என்று தன்னையே உணவாக ரட்சகன் முன் சமர்ப்பிக்கும் தொனியைப் போலவே,

‘கருவறை எனும் அடுப்பில் நீயொரு பச்சை மாவாக இருந்தாய், உலகின் நெடிய விருந்து மேசைக்கு இன்னும் வெந்துகொண்டிருப்பவனாக!’ என்று கடவுள் சுவைக்கும் வழிகளில் ஒன்றாகத் தானே ஆகிவரும் பேரின்ப சமர்ப்பணமாக ஷைஃகு பஹாவுத்தீன் வலது தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

‘நாம் புழுதியிலிருந்து எழுகிறோம், குறுகிய கஷ்டஜீவனம் செய்து வென்ற பின், மீண்டும் புழுதிக்குள் மறைகிறோம்’ என்கிற குறிப்பின் மூலம் மனித வாழ்வின் நிலையின்மையைச் சுட்டினாலும், அந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்து, ரட்சகனின் திருப்பொருத்தத்தில் திளைக்கும் வழிகளையும் சொல்லிக் காட்டுகிறார். ‘முட்களும் விஷச் செடிகளும் காட்டுத்தனமாகச் செழிக்கின்ற, ஆனால் கனி மரங்களும் ரோஜாக்களும் காய்கறிகளும் வளர்வதற்குக் கவனிப்புத் தேவைப்படுகின்ற உலகம் ஒன்றில் இருக்கிறோம் நாம்.’

‘உயிர்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார், நாம் நடைபோடும் இப்பூமி மரணத்தின் வயல்’ என்கிறார் ஷைஃகு பஹாவுத்தீன். ஒரு ரொட்டித் துண்டு அல்லது ஒரு கவளம் சோறு நம் சாப்பாட்டு மேசைக்கு வருவதற்குச் சூரியனும் சந்திரனும் அதனதன் பயணப் பாதையில் நேர்த்தியாகச் சுழல வேண்டியிருக்கிறது. பருவநிலை மாற்றங்கள் முறையாக நிகழ்ந்து, நிலம்-நீர்-காற்று-ஆகாயம்-நெருப்பு ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் பணியைத் துல்லியமாகச் செய்து முடித்து, மனிதனும் விலங்குகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினாலே அன்றி இது சாத்தியமில்லை. இச்சுழற்சியின் இறுதியில், உணவைச் சுவைக்கும் மனிதனின் நாவு இறைவனைப் புகழ்கிறது. பிரபஞ்சத்தின் அணுக்களில் ஒன்றாக, அல்லது அணுக்களின் தொகுப்பாக இருக்கும் மனிதன் தன்னுள் பிரபஞ்சத்தை உணர்ந்துகொள்ளும் ஆன்மிகப் பயணத்தைச் சாத்தியமாக்கும் பாலமாக விளங்குகிறது இந்நூல்.

வெறுமனே செயல்களின்றிச் சும்மா இருப்பதை அல்ல, முழு வீச்சுடன் இறுதி மூச்சு வரை செயல்படத் தூண்டும் மனிதச் சுயத்தின் பங்களிப்பின் அவசியத்தையே திரும்பத் திரும்பப் பேசுகிறார் ஷைஃகு பஹாவுத்தீன். ‘நீங்கள் கடலில் வீழ்வதாக வைத்துக்கொள்வோம்... நீங்கள் கைவிட்டு மூழ்கிப் போகலாம்; அல்லது முயன்று நீந்திக் கரைசேரலாம். ஈடேற்றம் என்பது நீங்கள் முடிவு செய்வதே’ என்பது போன்ற கறாரான முழக்கங்கள் நிறையவே இருக்கின்றன.

துயரம்தான் இதயத்தைத் திறக்கும் சாவி. வலியும் சிரமங்களும் மழைக்கால மின்முகில்கள். கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகம் உடலை வருத்தும் துயர்களின் வீடு. ஆனால், ஆன்மா இங்கே மேலும் உயிர்ப்படைகிறது. ‘வாழ்வின் துயரங்கள் எத்தகையவை, அவற்றைச் சமநிலையுடன் அணுகுவது எவ்விதம்’ என்கிற சூத்திரமே இந்நூலின் மையப்பொருளாகிறது.

ஒவ்வொரு மனிதரும் தன் உயிர்த் துடிப்பின் லயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. அந்த லயத்தை ஒழுங்குபடுத்திச் செம்மையாக்குவதுடன், ஆயிரத்தெட்டு இதழ்களால் மலர்ந்து மணம் வீசும் பிரபஞ்சம் எனும் மாயமலரின் இதழ்களில் ஒன்றாகக் கலந்துவிடும் ரசவாதத்தை இந்தப் புத்தக வாசிப்பு நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

நூல்: நீருக்குள் மூழ்கிய புத்தகம்
ஆசிரியர்: பஹாவுத்தீன் வலது (மெளலானா ரூமியின் தந்தை)
தமிழாக்கம்:
ரமீஸ் பிலாலி
விலை: ₹225;
பக்கங்கள்: 200 சீர்மை,
சென்னை -14.
தொடர்புக்கு: 80721 23326

- நிஷா மன்சூர், தொடர்புக்கு: nisha.mansur@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x