Published : 18 Dec 2021 11:28 AM
Last Updated : 18 Dec 2021 11:28 AM
ஜீவ கரிகாலனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. சிறுகதைகளும் குறுங்கதை களுமாக 13 புனைவுகள் இந்நூலில் உள்ளன. வழமையான கதைசொல்லும் பாணியிலிருந்து கதைஞன் தன்னை வெளியேற்றிக்கொள்ளக் கடும் பிரயத்தனம் எடுத்திருப்பதை இத்தொகுப்பினூடாக அவதானிக்க முடிகிறது. ஒரு கதைக்கும் அடுத்த கதைக்குமான உருவத்தைப் புதிதாகக் கட்டமைப்பதில் கூடுதல் பிரக்ஞையுடன் ஜீவ கரிகாலன் செயல்பட்டுள்ளார்.
ஆனால், புனைவாசிரியரையும் ஏமாற்றிவிட்டு, சில பொதுத்தன்மைகளைப் பிரதியின் பல கதைகள் பெற்றிருப்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நூலகம், இறப்பு, நட்சத்திரங்கள், தூக்க மாத்திரை, புத்தகம், மழை போன்ற பருப்பொருட்கள் கதாபாத்திரங்களின் நுண்ணுணர்வுகளைச் சித்திரிக்க உதவியிருக்கின்றன. அதிகப்படியாக நூலகம் பல கதைகளின் பின்னிருந்து புனைவை இயக்குகிறது. தன் பதிப்பகத்தையும் அதன்மீதான சிறு விமர்சனத்தையும்கூட ஓரிடத்தில் (ரஸகுல்லா காளி) உள்ளே இழுத்துவிட்டுள்ளார். புனைவைச் சமகாலத்துக்கு நகர்த்தும் முயற்சி இது.
யதார்த்தத்தை மாயத்துடன் இணைத்தெழுதும் தன்மை தற்போது பலரது சிறுகதைகளிலும் பொதுத்தன்மையாகி வருகிறது. இத்தகைய புனைவுகள் உருவாக்கும் வாசிப்புக் கிளர்ச்சி, வெகுசன எழுத்தையும் தீவிர எழுத்தையும் இணைக்கும் கண்ணியாகச் செயல்படுகிறது. ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு’ என்ற சிறுகதையில் இத்தன்மை அழகாகத் தொழிற்பட்டுள்ளது. ‘வீட்டிற்கு வாருங்கள் ஒரு தேநீர் சாப்பிடுவோம்’ என்ற பெரியவர் ஒருவரின் ஒற்றை வாக்கியத்தின் பலத்தில்தான் இக்கதை அடுத்தடுத்து நகர்கிறது. அப்பெரியவருக்குப் பின்னுள்ள மர்மம் வாசகனின் புலன்களைத் திறந்துவிடுகின்றன. பெரியவர் விட்டுச்செல்லும் கைத்தடி அவரைப் பற்றிய சுவாரஸ்யத்தைத் தீவிரப்படுத்துகின்றது.
பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்த மாணவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை எனப் பொதுப் பிரச்சினைகளைப் பேசும் கதைகளும் (எஞ்சியிருக்கும் துயில், தாமிரத் தழும்புகள்) தொகுப்பில் உள்ளன. ஆனால், எந்த இடத்திலும் இப்புனைவுகளில் பிரச்சாரத்தன்மை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் புனைவாசிரியர் கவனமுடன் இருந்திருக்கிறார். மரணங்கள் அக்குடும்பங்களில் ஏற்படுத்தும் வெற்றிடங்களில் இருந்து இக்கதைகளை எழுதியிருக்கிறார். இத்தன்மைதான் இரு துயர நிகழ்வையும் காத்திரமான புனைவுகளாக மாற்றித் தந்திருக்கிறது. ‘வளர்பிறை’ என்ற கதையும் துயரத்திற்குப் பின்னிருக்கும் பிரச்சினையைத் தீவிரத் தொனியில் பேசியிருக்கிறது.
எந்தத் துயரமும் முடிவானது இல்லை; அந்தத் துயரங்களில் முடிவில் எஞ்சியிருக்கும் உறவுகள்தாம் நம் ஒவ்வொருவரின் அடுத்தகட்ட வாழ்க்கைக்குத் தொடக்கமாகவிருக்கிறது என்பதை இம்மூன்று கதைகளின் மாந்தர்களும் உள்வாங்கிக்கொள்கிறார்கள். இதனைப் பேச ஜீவ கரிகாலன் எடுத்துக்கொண்ட களம் புறமாக இருந்தாலும் புனைவுகள் முழுக்க அகவயம் சார்ந்தே எழுதப்பட்டுள்ளன. பிரதி உருவாக்கியிருக்கும் இன்மை வாசகனின் பங்கேற்பை அதிகப்படுத்தியிருக்கிறது. உதிரி உதிரியான உரையாடலும் அந்த உரையாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள சிக்கனமான மொழியும் சிறுகதைகளுக்கு ஒரு தீவிர தொனியைக் கொடுக்கின்றன. ஆனால், இந்தத் தொனி அனைவருக்குமானது இல்லை.
எப்போதும் இல்லாத அளவிற்கு அயல்மொழிக் கதைகள் தற்போது தமிழில் அதிகளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதன் தாக்கம் தமிழ்ச் சிறுகதைகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜீவ கரிகாலனும் சில புதிய முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார். கவிமொழிக்கும் கதைமொழிக்கும் இடையேயிருக்கும் ஒரு மெல்லிய கோட்டை அழிக்கும் முயற்சிகளாக எழுதப்பட்டுள்ள குறுங்கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். எதிர்காலத்தில் சிறுகதைகளுக்கு நிகரான இடத்தைக் குறுங்கதைகள் பெறுமா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், ஜீவ கரிகாலனுக்குக் குறுங்கதைகளைவிட சிறுகதைகளே நன்றாகத் தொழிற்பட்டிருக்கின்றன.
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…
ஜீவ கரிகாலன்
யாவரும் பப்ளிஷர்ஸ்,
வேளச்சேரி, சென்னை- 42
தொடர்புக்கு – 90424 61472 / 98416 43380
- சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT