Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கடந்த ஏப்ரல் 14 அன்று மலிவுப் பதிப்பாக வெளியான ‘எல்லோருக்குமானவரே’ நூல், இதுவரையில் இரண்டாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்த அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றி அசோக் தாவ்லே எழுதிய கட்டுரை, பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து பிருந்தா காரத் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் பேராசிரியர் க.கணேசன் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்திய அரசமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்டோரின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடவியல், சமூகவியல், மொழியியல், நீரியல், பொருளியல் உள்ளிட்ட துறைகளிலும் அம்பேத்கரின் பங்களிப்பையும் பார்வையையும் அறிமுகம்செய்கிறது இக்கட்டுரைத் தொகுப்பு. அவரைப் பற்றி வெளிவந்த முக்கியமான நூல்களையும் பரிந்துரைக்கிறது. அம்பேத்கர் முன்மொழிந்த அரசு சோஷலிஸ முறை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான அவரது விமர்சனங்கள், முதல் பொதுத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட அவருக்கிருந்த எண்ணம், பொதுவுடைமை இயக்கத்துடன் இணைந்து, அவர் நடத்திய போராட்டங்கள் என்று நீலத்துக்கும் சிவப்புக்குமான நெருக்கத்தைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
- புவி
எல்லோருக்குமானவரே
க.கணேசன்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, சென்னை-17
விலை: ரூ.20
தொடர்புக்கு: 94868 64990
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT