Published : 25 Mar 2016 10:18 AM
Last Updated : 25 Mar 2016 10:18 AM
உலகின் மிகப் பெரிய கல்லறை லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஃபாரஸ்ட் லான்ஸ் என்று பெயர். அங்கு புதைக்கப்பட நிறையக் கட்டணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கோடீஸ்வரர்கள்தான் அங்கு உறங்க முடியும். ஹாலிவுட் அருகில் இருப்பதால் பல முந்தைய நட்சத்திர நடிகர்கள், நடிகை கள் அங்கு அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். சில கல்லறைகள் அடக்கமாக இருக்கின்றன.
அங்கும் இட நெருக்கடி. சின்ன கோடீஸ்வரர்கள் ஒரு மேஜை டிராயர் போல இருப்பதை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்குப் பெயர் ‘வால்ட்.’ பெரிய மேடையின் நான்கு பக்கங்களிலும் மேஜை டிராயர்கள். மூன்றடிக்கு ஓரடி. ஆழம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளவில்லை. பல அமெரிக்கர்கள் உயரமானவர்கள். ஆதலால் ஏழு அடியாவது இருக்கும் என்று நம்புகிறேன். உடலை டிராயரில் வைத்து உள்ளே தள்ளித் திறக்க முடியாதபடி ‘ஸீல்’செய்துவிடுவார்கள். இப்படியெல்லாம் உண்டா என்று நம்ப மறுக்கலாம். நான் என் கண்ணால் பார்த்தேன்.
இந்தக் கல்லறையின் விஸ்தீரணம் 200 ஏக்கர்கள் இருக்கும். ஒரு காவலாளி கண்ணில்படவில்லை. ஆனால் பாதை கள், புல்வெளி, பூச்செடிகள் கை படாமல் இருக்கின்றன. இந்தத் தோட்டத்தை அழகுபடுத்த சில சிலைகள் உள்ளன. அதில் ஒன்று மைக்கேல் ஆஞ்சலோவின் 17 அடி ‘டேவிட்’ சிலையின் பிரதி. என்னதான் உலக அதிசயமாக இருந்தாலும், ஒரு கல்லறையில் 17 அடி இளைஞன் பிறந்த மேனிக்கு நிற்பதைத் தங்கள் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்ய வருபவர்களுக்கு நெருடலாகவே இருக்கும். அது அரசு கல்லறையல்ல. ஆதலால் அதன் நிர்வாகக் குழுவிடம் மனு அளித்து அந்தச் சிலையில் சங்கடப்படுத்தும் இடத்தை ஒரு அத்தி இலை மறைப்பது போலச் செய்து விட்டார்கள். பார்வையாளர்கள் அதை ஆதாமின் சிலை என்று நினைத்துக் கொள்ளலாம்.
எல்லா இந்தியர்களையும் சங்கடப் படுத்திய சிலை ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் சிலையாகும். இந்த நீல் செய்த புண்ணிய காரியம் கொல்கத்தாவில் இருந்து டெல்லி வரை போகும் கிராண்ட் டிரங்க் சாலையில் ஒரு மரம் விடாமல் ஒவ்வொன்றிலும் இந்தியர்களைத் தூக்கிலிட்டதுதான். மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் பிளாசா வாசலில் இருந்த நீல் சிலையை ‘இந்திய மக்களை அவமதிக்கும் சின்னம்’ என்று சொல்லி, அகற்ற பல போராட்டங்கள் நடந்தன. 1937-ல் நடைபெற்ற தேர்தலில் சென்னை ராஜதானிக்கு ராஜாஜி பிரதம மந்திரியானபோது ஓர் இரவு எந்தச் சந்தடியும் இல்லாமல் இது சென்னை அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இன்றும் அங்கே இருக்கிறது. முன்பு நடுத் தெருவில் இருந்தபோது எவ்வளவு பேர் இதைப் பார்த்திருக்க முடியும்? இன்று அருங் காட்சியகம் செல்பவர்கள் எல்லோரும் ஆற அமரப் பார்க்கலாம். வெறும் சிலை என்று பார்த்தால் நீல் சிலை மிகுந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்டது.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாகச் சென்னைக் கடற்கரை ஓரமாகப் பல தமிழ் அறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. இவற்றைப் பார்ப்பதற்குச் சாலையைக் கடந்து போக வேண்டும். சுரங்கப் பாதை இருக்கிறதே எனலாம். ஆனால் வயது முதிர்ந்தவர்களுக்கு பத்துப் பன்னிரண்டு படிகள் இறங்கி ஏறுவது எளிதல்ல. சாலையில் எப்போதும் கனவேகத்தில் வண்டிகள் போய்க் கொண்டிருக்கும். இவை எல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு மேன்மை தேடித் தந்தவர்களின் சிலைகள்.
என்றுமே சென்னை அருங்காட்சியகம் செல்பவர்கள் அங்குள்ள காட்சிப் பொருட்களைக் கவனித்துப் பார்ப்பார் கள். இங்கு சிலைகளுக்கென்று ஒரு பிரிவு ஏற்படுத்தினால் அவற்றைப் பார்ப்பதோடு அதன் அடியில் உள்ள வாசகங்களையும் படித்து ஒரு சிலை மூலம் எப்படியெல்லாம் உண்மை திரிக்கப்படும் என்றும் உணர்வார்கள். சென்னை அருங்காட்சியகத்தின் அமரா வதிப் பிரிவு உலகப் புகழ் பெற்றது, இதைச் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார் என்பார்கள். ஓவியங்களுக்குத் தனி இடம் உள்ளது போல சிற்பங்கள், சிலைகளுக்கும் ஒரு தனி கூடம் ஏற்பாடு செய்யலாம்.
தென்னிந்தியாவின் மகத்தான சிலைகளில் ஒன்று தஞ்சாவூரில் உள்ள ஷ்வார்ட்ஸ் பாதிரியார் சிலை. இவர்தான் சரபோஜி மன்னரின் அறிவாற்றலை வளர்த்தவர் என்று சொல்வதுண்டு. இன்னொரு சிலை மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை. ஷ்வார்ட்ஸ் பாதிரியார் சிலை பிரச்சினை ஏற்படுத்தாது. ஆனால் கட்டபொம்மன் சிலை முச்சந்தியில் இருக்கிறது. சிலைகள் எல்லோராலும் வசதியாக பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். எந்த விதத்திலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை கடினமாக்கி விடக்கூடாது.
சென்னையில் முதலிலேயே காந்தி சிலையை உள்ளடக்கி வைத்துவிட்டார் கள். அதைப் பார்க்கவும் பார்க்கலாம், போக்குவரத்துக்கு இடையூறும் இல்லை. ‘காந்தி போலில்லை அந்த காந்தி சிலை; அதில் மூக்குக் கண்ணடி இல்லை’ என்றுசொல்லி ஒருவர் சத்தியாகிரகம் கூட நடத்தினார். அந்தச் சிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அது காந்தியின் நடை வேகத்தை உணர்த்துகிறது. காந்தியின் அதிகாலை நடைப்பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஓடுவார்களாம். சில வெளிநாட்டவர் காந்தியை ‘உடல்நலக் கிறுக்கன்’ என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், நடைப் பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர் எண்பது, தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தார். இன்று வைத்தியர்கள் நடைப் பயிற்சியை ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதுகிறார்கள்.
சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அன்று சென்னைக் கலைப் பள்ளியின் தலைவராக இருந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரி என்பவரால் உருவாக்கப்பட்டது. இவரது இன் னொரு சிற்பம்தான் சென்னைக் கடற்கரையில் உள்ள ‘உழைப்பாளர் சிலை. இச்சிலை தனித் தனி உருவங்களாகச் செய்யப்பட்டு ஒன்று சேர்த்தது என்கிறார்கள் நிபுணர்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ராய் சௌத்ரியின் இன்னொரு மிகச் சிறந்த சிலை சென்னை பிரம்ம ஞான சபையில் இருக்கும் டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாருடையது.
நான் சிறுவனாக இருந்த நாளில் சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் உயிர் காலேஜ் (மிருகக் காட்சிச் சாலை), செத்த காலேஜ் (அருங்காட்சியகம்) அப்புறம் பிரம்மஞான சபை ஆகியவை இருந்தன. சென்னையிலேயே இன்னொரு பெசண்ட் சிலை இருக்கிறது. இது கடற்கரைச் சாலையில் இருந் தாலும் யாரோ ஒளித்துவைத்தது போல் இருக்கும்.
சிலைகள் வரலாற்றைப் பதிவு செய்பவை. அவற்றின் முக்கியத்துவம் சரியான இடத்தில் பார்வைக்கு வைப்பதில்தான் உள்ளது!
- புன்னகை படரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT