Published : 05 Mar 2016 09:34 AM
Last Updated : 05 Mar 2016 09:34 AM
புத்தக பட்ஜெட் போடும் குடும்பங்கள்!
திருச்சியின் புத்தகக் காதலர்களில் முக்கியமானவர் வீ.ந. சோமசுந்தரம். கலை, இலக்கிய அமைப்புகளில் தொடர்ந்து இயங்கிவரும் இவர் பதிப்புத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றியுள்ளார்.
“எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் கொண்ட ஊர் திருச்சி. திருச்சியில் வாசிப்புப் பழக்கம் முன்பைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. வருடத்துக்கு இவ்வளவு என்று பட்ஜெட் ஒதுக்கிப் புத்தகம் வாங்குபவர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் புத்தகத் திருவிழா ஒரு வரப்பிரசாதமாக அமையும். வாசகர்கள் அதிகரிக்க வேண்டும் என்றால், சிறுவர்களையும் பெண்களையும் புத்தகம் வாங்க ஊக்குவிப்பதோடு, அவர்களே அவர்களுக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
எல்லையில்லா ஆனந்தம்!
புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்த திருச்சி இயன்முறை மருத்துவர் ஆர். தமிழ்ச்செல்விக்கு ரொம்பவே சந்தோஷம். இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமே என்ற ஆதங்கமும் இருந்தது அவரிடம்.
“திருச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெஸ்ட்ரி பள்ளி மைதானம், தில்லை நகர் மக்கள் மன்றம் போன்ற இடங்களில் பெரிய அளவில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றன. ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக என்ன காரணத்தினாலோ புத்தகக் காட்சிகள் நடத்தவில்லை. இதனால் என்னைப் போன்ற வாசகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தோம். தற்போது மீண்டும் புத்தகத் திருவிழா தொடங்கியிருப்பது எல்லையில்லா உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்தக் கண்காட்சிக்குத் தினந்தோறும் குடும்பத்துடன் வரத் திட்டமிட்டுள்ளேன்.
ஆங்கில நாவல்கள், சரித்திர நாவல்கள், சுஜாதாவின் புத்தகங்களை அதிக அளவில் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அதேபோல, தெனாலிராமன் உள்ளிட்ட கதைப் புத்தகங்கள், ஓவியப் பயிற்சிப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று என் குழந்தைகள் ஆர்வமாக இருக்கிறார்கள். இக்கண்காட்சியை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் ‘பபாசி’யிடம் நான் வைக்க விரும்பும் வேண்டுகோள்!"
தம்பியின் பிறந்த நாள் பரிசு!
மாலை 6 மணிக்குத் தொடங்கிய புத்தகத் திருவிழாவுக்குப் பகல் 12 மணிக்கே வந்துவிட்டார் எட்டாம் வகுப்பு மாணவர் ஸ்ரீதரன். இவரது சொந்த ஊர் காட்டூர். மருத்துவப் பரிசோதனைக்காகத் தன் தந்தை விவேகானந்தனுடன் திருச்சி வந்த இவர், விளம்பரங்களைக் கண்டதும் அடம்பிடித்து அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்துவந்துவிட்டார். அரைமணி நேரத்தில் கட்டைப் பை நிறைய புத்தகங்களை அள்ளிவிட்ட அவரைச் சந்தித்தோம். “எனக்குக் கதைப் புத்தகங்கள்னா ரொம்ப உயிர். வீட்டுல 40 கதைப் புத்தகங்களுக்கு மேலே வச்சுருக்கேன். அடுத்த வாரம் தம்பி கோகுலுக்குப் பிறந்த நாள் வருது. அவனுக்குப் பரிசு கொடுக்கணும்னு நெறைய கதைப் புத்தகங்கள் வாங்கிருக்கேன். அவனுக்குப் பரிசா கொடுக்குறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் படிச்சிடுவேன்” என்றார் புன்னகையுடன்.
சலுகை விலையில் மகத்தான புத்தகங்கள்!
விடியல் பதிப்பகம் ஓர் சிறப்புப் புத்தகத் தொகுப்பை மலிவான விலையில் தருகிறது. பிரேம்நாத் பசாஸின் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’, தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’, டாக்டர் அம்பேத்கரின் ‘பார்ப்பனியத்தின் வெற்றி’, விடுதலை இராசேந்திரனின் ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’, பிரேமானந்தின் ‘அறிவியலா? அருஞ்செயலா?’ ஆகிய நூல்கள்தான் இவை. 1,700 பக்கங்கள், ரூ.1250 மதிப்பு கொண்ட இந்த புத்தகங்கள் ரூ.300-க்குக் கிடைக்கின்றன. வாசகர்கள் அள்ளிச்செல்கிறார்கள்! புத்தகக் காட்சிக்கு வரமுடியாதவர்கள் ரூ.400 அனுப்பி இவற்றைப் பெறலாம். தொடர்புக்கு: 9789457941.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT