Published : 30 Oct 2021 09:11 AM
Last Updated : 30 Oct 2021 09:11 AM
வரலாற்றாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியைப் பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்) தமிழ்நூல் வரிசையொன்றை வெளியிட்டுவருகிறது. அந்நூல் வரிசையின் சமீபத்திய வரவு, பொருளியல் பேராசிரியரும் வழக்கறிஞருமான எஸ்.நீலகண்டன் எழுதியுள்ள ‘நவசெவ்வியல் பொருளியல்’. ஏற்கெனவே அவர் எழுதிய ‘ஆடம் ஸ்மித் முதல் காரல் மார்க்ஸ் வரை: செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’ நூலின் தொடர்ச்சி இது. தமிழ் வழியே பொருளியலின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களின் தொடர் வாசிப்புக்குரிய நூல்கள் இவை.
செவ்வியல் அரசியல் பொருளியல் 19-ம் நூற்றாண்டில் கலையியலாகத்தான் இருந்தது. அதை, அறிவியல் துறைகளில் ஒன்றாக்கும் முயற்சிகளின் விளைவாகத் தோன்றியதுதான் நவசெவ்வியல் பொருளியல் (நியோ கிளாசிக்கல் எகனாமிக்ஸ்). நவசெவ்வியல் எனக் குறிப்பிடப்படும் காலம் 1860 தொடங்கி 1930 வரையிலானதாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த முதன்மையான பொருளியர்களின் வாழ்க்கைச் சுருக்கம், ஐரோப்பிய வரலாற்று நிகழ்வுகள் அவர்களது வாழ்விலும் சிந்தனையிலும் ஏற்படுத்திய தாக்கங்கள், அவர்களது பொருளாதாரக் கோட்பாடுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது இந்நூல். நவசெவ்வியல் பொருளியலின் மூலவர்களான ஜெவன்ஸ், வோல்ரஸ், மெங்கர் தொடங்கி மார்ஷல், பீகு வரையில் 17 பொருளியர்களின் கருத்துகள் இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நவசெவ்வியல் உருக்கொண்டபோது நிலவிய உலகப் பொருளியல் சூழலைக் குறித்த விரிவான அத்தியாயம், அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தொழில் முதலாளியம் சரிவுற்று, நிதி முதலாளியம் வளரத் தொடங்கிய காலம் அது. பொருளியல் நோக்கில், இந்தியாவின் காலனிய வரலாறும் அந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. மரபுவழித் தொழில்கள் அழிக்கப்பட்டு, காலனி நாடுகள் கச்சாப் பொருட்களை விளைவிக்கும் இடங்களாகவும் சந்தைகளாகவும் மாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் நவசெவ்வியல் பொருளியல் கோட்பாடுகள் விவாதத்துக்கு வரத் தொடங்கின.
நிதி முதலாளியம், பொருளியல் ஆய்வுகளின் மீதும் தனது தாக்கத்தைச் செலுத்தியது. நவசெவ்வியல், பொருளியர்களின் கருத்துகளின் நிறைகுறைகளைத் தவிர்த்து, அக்கருத்துகளை அறிமுகம் மட்டுமே செய்துள்ளார் என்றபோதும் தன்னை இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவராக முன்கூட்டியே சுய அறிமுகம் செய்துகொண்டுள்ளார் எஸ்.நீலகண்டன். சமூகவியல் நூலாசிரியர்கள் தங்கள் நிலைப்பாடுகளை முதலிலேயே அடையாளம் காட்டுவது அவசியம் என்ற குன்னார் மிர்டாலின் அறிவுறுத்தலே அதற்கான காரணம்.
பொருளாதார வளர்ச்சியால் முதலாளிகள் மட்டுமே பயனடைகிறார்கள் என்ற மார்க்ஸியப் பார்வைக்கு மாறாக தொழிலாளர்களுக்கும் அதனால் பயனுண்டு என்ற பார்வையை நவசெவ்வியல் பொருளியல் முன்வைத்தது. பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையே தொழில் முனைவோர்களின் முன்னறிவுதான் என்றும் நுகர்வோரின் விருப்பங்களே உற்பத்தியைத் தீர்மானிக்கிறது என்றும் அது வாதிட்டது. உழைப்பை விடவும் சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
முடிவுகளிலிருந்து காரணங்களை நோக்கிச் செல்லும் இந்த ஆய்வுப் பயணம், நுண்கணிதத்தைத் துணையாகக் கொண்டது. எனவே, பொருளியலை அறியாதவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாதவாறு கடினமாகவும் அது மாறியது. நவசெவ்வியல் காலகட்டத்தில், பொருளியல் மானுடவியல் துறைகளிலிருந்து விலகி, அறிவியலாக மாற்றம் கண்டது. சந்தை எப்படி இயங்குகிறது என்ற சூத்திரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கூலி எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற அறவியல் கேள்வி விடைபெற்றுக்கொண்டது.
நவசெவ்வியல் பொருளியலை மார்க்ஸியத்துக்கு எதிரானதாகவும் அடையாளப்படுத்திவிட முடியாது. அதனால் அறிமுகமான பல்வேறு ஆய்வுக் கருவிகள் மார்க்ஸியர்களாலும் பயன்படுத்தப்படும் பொதுத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்நூல், மார்க்ஸிய உழைப்பு மதிப்புக் கோட்பாட்டுக்கான எதிர்வினைகளை மட்டுமின்றி, அந்த எதிர்வினைகளுக்கான மாற்றுக் கருத்துகளையும் அறிமுகப்படுத்துகிறது. நவசெவ்வியல் பொருளியல் கோட்பாடுகள் விவாதிக்கப்பட்ட அதே காலத்தில், செவ்வியல் அரசியல் பொருளியலின் தொடர்ச்சியாக அரசின் பொருளியல் கொள்கைகள் குறித்த விமர்சனங்கள், புது ஏகாதிபத்தியம் (நியூ இம்பீரியலிசம்) என்ற பெயரால் வகைப்படுத்தப்பட்டன.
முதலீட்டாளர்களின் நலன்களுக்காக காலனிய நாடுகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே புது ஏகாதிபத்தியம் எனப்படுகிறது. இது குறித்து விமர்சனங்களை முன்வைத்த ஜான் அட்கின்ஸன் ஹாப்ஸன், ரோஸா லக்ஸம்பஃர்க், வி.ஐ.லெனின் ஆகியோரைப் பற்றியும் தனி அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பு. அறிவியலாக உருமாறிய பொருளியலை மீண்டும் அரசியலோடு பிணைத்தவை மேற்கண்டோரின் ஆய்வுகள். எழுதப்பட்டதற்கும் வெளியானதற்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வெளிவந்த புதிய வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளையும் இந்நூலில் உள்ளடக்கிக்கொண்டிருக்கிறார் சலபதி. பொதுப் பதிப்பாசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பணி இது. தமிழ்நூல் வரிசையுடன், எம்ஐடிஎஸ் சார்பில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளை உடனுக்குடன் தமிழிலும் கொண்டுவர அந்நிறுவனத்தின் இயக்குநர் ப.கு.பாபு எடுத்துவரும் முயற்சிகள் தொடரட்டும்.
நவசெவ்வியல் பொருளியல்
எஸ்.நீலகண்டன்
எம்ஐடிஎஸ் - காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.425
தொடர்புக்கு: 91 4652 278525
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT