Published : 06 Mar 2016 01:21 PM
Last Updated : 06 Mar 2016 01:21 PM
கேளிக்கை எழுத்தாளரின் இலக்கு எண்ணற்ற வாசகர்களை எட்டுதல். இலக்கிய எழுத்தாளரின் இலட்சியம் எழுத்தாளர்கள் போற்றும் எழுத்தாளராதல்.
இதற்குப் பொருள் இரு தரப்புக்கும் மாற்றுத் தரப்பின் ஆசை அறவே இல்லை என்பதன்று. யாருக்கு எது முதன்மை என்பதுதான். கேளிக்கையாளருக்குத் தன் ஓரிரு படைப்புகளுக்காகவேனும் தானும் ஓர் இலக்கியவாதியாகப் பார்க்கப்படக் கூடாதா என்கிற ஏக்கமும் இலக்கியவாதிக்கு, வாசகக் கடலில் தன் காலும் கொஞ்சம் நனைந்தால் என்ன என்கிற புலம்பலும் உள்ளுக்குள் கிடந்து அலைக்கழிப்பவை.
சிந்தனையாழம் என்றால் படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தி ஜானகிராமன் சொன்னதற்கு எழுத்துருவம் கொடுத்தால் அது இவராகத்தான் இருக்கும் என்கிற அளவுக்கு ஆரம்ப வாசகருக்குக்கூட எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தாத கதைகளை எழுதியவர் கு. அழகிரிசாமி.
கதைக் கலை
கதை என்றால் கதையின் கருவுக்குத்தான் முதலிடம். மற்றபடி சொல்முறை, செய்நேர்த்தி, கச்சிதம் என்றெல்லாம் கவலைப்படாது, மெனக்கெடாது சொல்லவந்த விஷயத்தின் உள்ளார்ந்த வலிமையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு நிற்கும் கலை இவருடையது.
1944-ல் எழுதிய ‘முருங்கை மர மோகினி’ என்கிற தம் கதை பற்றி கு. அழகிரிசாமி காலகண்டி முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார்: “இதை எழுதிய பிறகுதான் எனக்குச் சிறந்த முறை யில் சிறுகதைகள் எழுத வந்துவிட்டதாக நண்பர்கள் சிலர் சரியாகவோ தவறாகவோ அபிப்ராயப் பட்டார்கள்”
தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ கதையின் சிறப்பே குற்றவுணர்வு என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு 400-450 பக்கங்கள் எழுதியது என்று சொல்வார்கள்.
சிரம தசையில் சிக்கனமாய் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், இரண்டணா விலையுள்ள ஆறு முருங்கைக் காய்களுக்கு ஆசைப்பட்டுத் திருடிவிட்டு ஒரு மனிதன் படும் அவஸ்தைதான் கு. அழகிரிசாமியின் இந்தக் கதை. இலக்கியம் என்பதே திக்குத் திசை தெரியாது கடலில் தத்தளிக்கும் கலங்களை, இதோ இருக்கிறது கரை, இங்கே வா என்று அழைக்கும் விளக்கு அல்லவா?
வெறும் முருங்கைக்காயைத் திருடும் ஆசை மட்டுமா கதையில் சொல்லப்படுகிறது. உடம்புக்கு முடியாமல் படுத்ததில், சாப்பாட்டுக் கடை நடத்தி, யார் கையையும் எதிர்பார்க்காது நன்றாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் கைச்சேமிப்பும் கரைந்து, பொருளாதார ரீதியில் இறங்கு முகத்துக்குச் செல்லத் தொடங்கிவிட்டதை அவர் கடை இட்லி, வடைகளின் அளவில் பிரதிபலிக்க வைக்கிறார் அழகிரிசாமி. இந்தக் காலத்தில் இரண்டணாவை யார் கொடுக்கிறார்கள் என்று முருங்கைக்காய்களைத் திருடச் சொல்லி மோகினியாக அவரைப் பிடித்து ஆட்டுகிறது வாழ்க்கைச் சூழல். தம் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாகத் தயங்குகிறார். போதாக்குறைக்கு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் செருப்பு வேறு பயமுறுத்துகிறது. கூடவே, சில முருங்கைக்காய்களைப் பறித்துக்கொள்வது அப்படி என்ன பெரிய குற்றமா, இதனால் என்ன தோட்டக்காரரின் சொத்தா பறிபோய்விடப் போகிறது எனத் தாம் செய்யத் துணியும் காரியத்துக்கு, தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு புறம் என்று முன்னும் பின்னுமான அலைக்கழிப்பு. ஆனாலும் அவர் சாதாரண மனிதர் என்பதால் இறுதியில் அந்தத் திருட்டுப் பொருளை அனுபவிக்க அவருக்கு மனம் வராமல் போகிறது.
நேரடி மொழி
வறுமையில் வாடும் கரிசல் பிரதேச மனங்களின் உணர்ச்சிகளை அப்பட்டமாகச் சொன்னாலும் அவற்றை அதீதமாக, நாடகீயமாக்காமல் சொல்வதன் காரணமாகவே இவை இலக்கியமாகின்றன. எல்லா வித மனிதர்களும் தத்தமது நிறை குறைகளுடன் வருகிறார்கள். ஒரு பாத்திரத்தை அனுதாபத்துடன் அணுகுவதால் பிறிதொன்றின் மீது வெறுப்பை உமிழாது மிதமாகக் கதை சொல்லிப்போவதும் பாதகம் செய்கிற பாத்திரத்தைக்கூட அதற்கான நியாயங் களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கருணையுடன் நடத்து வதும் கனிந்த மனத்துக்கே சாத்தியம். இது மனித வாழ்வை தீர்க்கமாய்ப் புரிந்துகொண்டமையால் விளைந்த கனிவு.
அலங்காரங்களற்ற நேரடி மொழியில், சுவாரசியமான திருப்பங்கள் ஏதுமற்ற அன்றாடம் காணக்கூடிய சம்பவங்களில் வாசகரைக் கட்டிப்போட்டு, பத்துப் பக்கங்கள் படிக்கவைப்பது எழுத்தாளர்களுக்கு ஆகப் பெரிய சவால். ஆனால் அழகிரிசாமி எந்தச் சிரமும் இல்லாமல் ரஷ்ய எழுத்தாளர்களைப் போல் தம் பாட்டுக்குக் கதை சொல்லிச் செல்கிறார்.
கம்மலை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் வாழ்வையே பாலம்மாள் (1951) கதையில் சொல்லிவிடுகிறார்.
குழந்தைகளை வைத்துக்கொண்டு பிரமிக்கவைக்கும்படி எழுதிச் சென்ற கதை அன்பளிப்பு (1951). இதைப் பற்றி, “மிக அற்புதமான சிறுகதை தந்த எழுத்தாளர். அப்படி ஒரு எழுத்தாளர் மொழிக்குக் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம் என்று இந்துவில் மதிப்புரை எழுதியிருந்தார் க.நா.சு.” என்கிறார் சுந்தர ராமசாமி கு. அழகிரிசாமி பற்றிய நினைவோடையில்.
இதற்கு கு.அழகிரிசாமியின் எதிர்வினை என்ன தெரியுமா? “அந்த மதிப்புரையைப் படித்தவுடன்தான் நான் ஒரு எழுத்தாளனானேன். நான் எழுதின சமயத்திலெல்லாம் ஒரு எழுத்தாளன் என்ற எண்ணமே எனக்கில்லை. என் மனசுக்குள்ளே வெட்கம் போய் ஒரு நிமிர்வு ஏற்பட்டதென்றால் அது இதுதான்.”
தம் கதைகளைப் போலவே கு. அழகிரிசாமி எளிமையான, வெளிப்படையான மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் போலும்.
- தொடர்புக்கு: madrasdada@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT