Published : 27 Mar 2016 11:47 AM
Last Updated : 27 Mar 2016 11:47 AM

விடுபூக்கள்: திருநங்கை கல்கிக்கு விருது

திருநங்கை கல்கிக்கு விருது

சகோதரி என்னும் தன்னார்வ அமைப்பின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர் கல்கி சுப்பிரமணியம். திரைப்படத்தில் (‘நர்த்தகி’) கதாநாயகியாக நடித்த முதல் திருநங்கை என்னும் பெருமை பெற்றவர் இவர். ஆவணப் படம், எழுத்து, ஓவியம் எனப் பல வகைகளில் திருநங்கை, திருநம்பி ஆகியோரது உரிமைகளுக்காகப் பணியாற்றுகிறார் கல்கி. லோரியல் பாரிஸ் நிறுவனம் என்டிடிவியுடன் இணைந்து சாதனைப் பெண்களுக்கு வழங்கும் ‘உமன் ஆஃப் வொர்த் 2016’ விருதுக்காக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் திருநங்கை கல்கிதான். இவ்விருதுகள் மார்ச் 28 அன்று மும்பையில் வழங்கப்பட உள்ளன.

ரோபோ எழுதும் நாவல்

செயற்கை அறிவுத் திறன் தொழில்நுட்பம் அதன் உச்சத்தைத் தொடும்போது, மனிதரின் எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய திறன் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்படும் என்பது அறிவியலின் நம்பிக்கை. என்றாலும் மனிதர் தங்களது படைப்புத் திறன் பற்றிய பெருமிதம் கொண்டிருந்தனர். அதற்கும் ஆபத்து வந்து சேர்ந்திருக்கிறது. ஜப்பானில் ஒரு ரோபோ நாவல் எழுதியிருக்கிறது. நாவல் எழுதியது மட்டுமல்ல அந்நாட்டின் தேசிய இலக்கியப் பரிசுக்கான முதல் சுற்றிலும் தேர்வாகியிருக்கிறது. தேர்வுக்குழுவினருக்கு நாவல் மனிதர் எழுதியதா ரோபோ எழுதியதா என்பது தெரியாது. இறுதிச் சுற்றில் அது வெல்லப்போவதில்லை. இந்த நாவலையும் அது மட்டுமே எழுதவில்லை. ஜப்பானின் ஹகோடேட் நகரின் ப்யூச்சர் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் குழு ஒன்று கதைக்கான கரு, கதாபாத்திரங்களை முடிவு செய்ய, அதனடிப்படையில்தான் ரோபோ நாவலை எழுதியிருக்கிறது.

சாதியொழிப்பும் சன்னியாசமும்

‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ கட்டுரை நூல் மூலம் கவனம்பெற்ற விமர்சகர் ராமானுஜம், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ என்ற புதிய நூலை எழுதியுள்ளார். சமூக உருவாக்கத்தில் துறவுக்கிருக்கும் முக்கியத்துவத்தை இந்நூல் பேசுகிறது. சாதி ஒழிப்பில் பெரியார், அம்பேத்கர், காந்தி ஆகியோரின் பங்களிப்புகளை இந்நூல் பேசுகிறது. அதே வேளையில் சாதி ஒழிப்புக்கான சரியான வேலைத்திட்டம் என்பது இந்தியாவில் உருவாகவேயில்லை என்றும் அதுகுறித்த விவாதங்களை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் என்கிறார் விமர்சகர் ராமானுஜம். கன்னட தலித் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றியவரும் சிந்தனையாளருமான மறைந்த டி.ஆர்.நாகராஜின் ‘தீப்பற்றிய பாதங்கள்’ நூலையும் சாதத் ஹசன் மண்டோ கதைகளையும் மொழிபெயர்த்தது இவரது முக்கியமான பங்களிப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x