Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

நூல் வெளி: மொழியின் மாய ஓவியன் செகாவ்

மனித சுபாவங்களின் மீது மட்டுமல்லாமல் பொழுதுகள், வஸ்துகள், தாவரங்கள், இருப்பிடங்கள் மீதும் சாயலையும் குணங்களையும் ஓவியனாக, இசைஞனாக மொழியின் வழி ஏற்றிவிடும் மகத்தான கதைக் கலைஞன் ஆன்டன் செகாவ். கவிஞரும் நாவலாசிரியருமான எம்.கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் புதிதாக வெளியாகியிருக்கும் ‘ஆன்டன் செகாவ் கதைகள்’ நூல், அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. செகாவின் கதைகளைப் படிக்கும்போது, அவரது சம காலத்து ரஷ்ய எழுத்தாளர்களும் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுமான டால்ஸ்டாயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிடாமல் படிப்பது சுலபம் அல்ல.

மனிதர்களுக்குக் கடவுளையும் கடவுளுக்கு மனிதர்களையும் பொறுப்பாக்கி, அந்தப் பொறுப்பை ஒரு சுமைபோல நினைவுகூர்ந்துகொண்டே இருந்தவர்கள் அவர்கள். செகாவ் கதைகளிலும் கிறிஸ்துவும் கிறிஸ்துவப் பண்பாடும் ஆளுமை செலுத்தும், தேவாலயத்தின் நிழலுள்ள ஊர்களும் வீடுகளும் மனிதர்களும் வருகிறார்கள்தான். ஆனால், அவர்கள் கடவுளிடம் தங்களுக்கான பொறுப்பை விட்டுக்கொடுத்தவர்களோ, கடவுளைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களோ அல்ல. துன்மார்க்கம், துவேஷம், அன்பு, செம்மை, இழிவு, துரோகம், விளையாட்டுத்தனம் என எல்லா குணங்களோடும் சில சமயங்களில் தெய்விகத் தன்மையையும் வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாய் போலவோ, தஸ்தயேவ்ஸ்கி போலவோ நீதிபோதனைகளாக இல்லாமல், வாக்குமூலங்களாக இல்லாமல், வாழ்க்கையின் போக்கில் அநிச்சயத்துக்கும் எதிர்பாராமைக்கும் மாற்றங்களுக்கும் இடமளித்து, எளிய ஏழை மனிதர்களையும் ஓவியர் வான்கோ போல வலுவாகவும் கௌரவமாகவும் சத்தமேயில்லாமல் வரைந்திருக்கிறார் செகாவ். வாழ்க்கை எவ்வளவு துயர் மிக்கதாகவும் அவநம்பிக்கை கொண்டதாகவும் தெரிந்தாலும் கடவுள், மதத்தின் பிடிமானம் இல்லாமலேயே இயல்புணர்ச்சிகள் வழியாக வெற்றி, தோல்விகள் வழியாக இந்த மனிதர்கள் எப்போதைக்கும் சுவாரசியமானதொரு வாழ்க்கையை வாழத் தகுதியானவர்கள் என்பதுதான் செகாவின் நம்பிக்கையாக இருக்குமென்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையிலும் நுழையும் கதாபாத்திரங்கள், அந்தக் கதையை வாசிப்பவரின் மன அமைப்பு இரண்டுமே மாறுவதற்கான துல்லியமான விவரிப்பையும் சூழலையும் உருவாக்குவதில் செகாவ் வெற்றி அடைகிறார். ஒரு நல்லியல்பு கொண்ட ஏழை யுவதி, தலைகீழ் மாற்றத்தை ‘கழுத்தில் தொங்கும் அன்னா’ கதையில் அடைகிறாள். ‘ரோத்சீல்டின் பிடில்’ கதையில், எதன் காரணமாகவோ தன்னுணர்வில்லாமல் சிடுசிடுப்பானவனாகிவிட்ட ரோத்சீல்ட், மனைவியின் இறப்புக்குப் பிறகு கனிவானவனாக மாறுகிறான். ‘தூங்குமூஞ்சி’ கதையில், ஒரு குட்டிச்சிறுமி மீளமுடியாத பயங்கரக் குற்றத்தை நோக்கித் திரும்பும் தருணம் நிகழ்கிறது. அதற்கு அவள் பொறுப்பே அல்ல. ஆனால், அந்தத் தருணத்தை இந்த உலகம் அவளுக்குத் தருகிறது.

செகாவின் மேதைமை துலங்கும் கதைகள் என்று ‘குடியானவப் பெண்கள்’, ‘சம்பவம்’, ‘நலவாழ்வு இல்லம்’, ‘ஈஸ்டர் இரவு’ நான்கு கதைகளையும் சொல்வேன். ‘குடியானவப் பெண்கள்’ சிறுகதை, ‘அன்னா கரீனினா’வையும், ‘மேடம் பவாரி’யையும் ஞாபகப்படுத்துவது. திருமணத்துக்கு வெளியே தன் விருப்பத்துக்கு ஏற்றதொரு வாழ்வைத் தேடிக்கொண்ட மானெஷ்காவின் துயரக் கதை, இந்தக் கதையின் முதல் பகுதியில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தத் துயரக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த, அதையொத்த வாழ்க்கை நிலையில் உள்ள வார்வரோவோ, மானெஷ்காவைத் துயரத்தில் ஆழ்த்திய அதே சாகசத்தைத் துயர முடிவுக்கெல்லாம் சாத்தியமேயில்லை என்பதைப் போல அதே இரவில் தேர்ந்தெடுக்கிறாள். மதமும் நெறிகளும் சுதந்திர விருப்பு, சந்தோஷம் தொடர்பிலான வரையறைக்கு முன்னால் தோற்கும் இடத்தை அத்தனை மௌனமாக உரைத்துவிடும் சிறுகதை இது.

‘ஈஸ்டர் இரவு’ கதையிலும் பயிற்சித் துறவி, மாற்று ஆளே இல்லாமல் இரவு முழுவதும் படகை ஓட்டுகிறான். அவனுக்கு ஒரு பெண்ணின் அழகு முகமாக, தெய்விகம் எனத் தோன்ற வைக்கும் பரிசு அதிகாலையிலேயே கிடைத்துவிடுகிறது. அந்தப் பரிசு இந்தப் பூமியிலேயே கிடைக்கிறது. துருக்கிய இயக்குநர் லூயி பில்யே சேலானின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா’வில் அப்படியான, ஒரு அழகிய சிறுமியின் முகதரிசனம் கதாபாத்திரங்களின் நிலையையே மாற்றிவிடும் காட்சி ஒன்று உண்டு. சேலானும் செகாவால் பாதிக்கப்பட்டவர்தான்.

‘சம்பவம்’ சிறுகதை குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய எளிய கதைதான். கதையின் முடிவு பெரியவர்களுக்கானது. கேட்கும் குழந்தைகளையும், கதையில் வரும் குழந்தைகளையும் அந்தக் கடைசிச் சம்பவம் பெரியவர்களாக்குகிறது. தாங்கள் வீட்டில் பராமரிக்கத் தொடங்கிய பிஞ்சுப் பூனைக் குட்டிகளுக்குத் தந்தையாக, விருந்தினராக வீட்டுக்கு வரும் மாமாவின் நாய் நீராவை அந்தக் குழந்தைகள் நியமிக்கிறார்கள். அந்த நாயோ பிஞ்சுப் பூனைக் குட்டிகளைத் தனது விருந்தாக்கிக்கொண்டு எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் நாக்கைச் சுழற்றிக்கொண்டு படுத்திருக்கிறது. வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு அந்த நாயின் செய்கை சங்கடத்தைத் தரவில்லை. அந்தக் குழந்தைகள் அத்துயரத்தின் வழியாகப் பெரியவர்களின் வாழ்க்கைக்குள் வருகிறார்கள். பூனைக் குட்டிகளையும் அதைச் சாப்பிடும் நாயையும் தூரத்திலிருந்து பார்க்க முடிகிறது செகாவுக்கு.

வாசிப்பதற்கு இனிமையையும் அனுபவரீதியான நிறையையும் நம் ஆழத்தில் மாறுதலையும் ஏற்படுத்தவல்ல மொழி செகாவுடையது. தோத்திரப் பாடல்களின் வசீகரத்தோடு, தான் எழுப்ப விரும்பும் காட்சிகளை, வேளைகளை அமைதி குலையாமல் எழுப்புகிறார் செகாவ். சூழல் அவதானிப்பு, நுட்பமான சித்தரிப்புள்ள மொழி என்பதெல்லாம் அரும்பொருளாகிவிட்ட காலகட்டத்தில், செகாவ் இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள், திரைப்படக் கலைஞர்களுக்கு இன்னமும் ஒரு வலுவான ஆசிரியராகவே திகழ்வார். ‘ஆறாவது வார்டு’ உள்ளிட்ட பல கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் ஆன்டன் செகாவை ஆழமாக அறிந்துகொள்வதற்கு நல்ல கதைகளைத் தேர்ந்து, செம்மையாக மொழிபெயர்த்திருக்கும் எம்.கோபாலகிருஷ்ணனும், அழகிய முறையில் வெளியிட்டிருக்கும் நூல்வனம் பதிப்பகமும் நன்றிக்குரியவர்கள்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

ஆன்டன் செகாவ் கதைகள்

தமிழில் ; எம்.கோபாலகிருஷ்ணன்

நூல்வனம் வெளியீடு

விலை: ரூ. 230

தொடர்புக்கு: 91765 49991

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x