Published : 27 Mar 2016 11:52 AM
Last Updated : 27 Mar 2016 11:52 AM
இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில், காந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர் தரம்பால் (1922-2006). அவருடைய எழுத்துகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பான, ‘எஸென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் தரம்பால்’ (Essential Writings of Dharampal) சமீபத்தில் இந்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷனால் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றியும் தரம்பாலைப் பற்றியும் கடந்த 23-ம் தேதி சென்னை, நந்தனத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பேராசிரியர் ஜி. சிவராமகிருஷ்ணன் (ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்), பேராசிரியர் எம்.டி. னிவாஸ், எழுத்தாளர் து. ரவிக்குமார், எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, சி.என். கிருஷ்ணன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை சி.ஐ.கே.எஸ். நிறுவனத்தின் ஏ.வி. பாலசுப்ரமணியன் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல் தரம்பாலைப் பற்றி ஓர் அறிமுக உரையையும் நிகழ்த்தினார். தரம்பால் புத்தகத்தின் தொகுப்பாசிரியரும் அவருடைய மகளுமான கீதா தரம்பால் புத்தகத்தின் எட்டுக் கட்டுரைகளைப் பற்றி அறிமுகத்தை வழங்கினார்.
மையங்களும் விளிம்புகளும்
எழுத்தாளர் ரவிக்குமாரின் உரை தரம்பாலின் கருத்தியலுடன் மாறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தது. அவர் உரையின் சாரம் இது: “சமுதாயத்தின் தன்னிறைவுக்கு அதிகாரப் பரவலாக்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் முக்கியமானவை என்று தரம்பால் கருதினார். தரம்பால் முன்வைக்கும் கிராம சமுதாயம் என்பதும்கூடப் பல அதிகார மையங்களை உருவாக்கி அவற்றுக்கு மையங்களையும் விளிம்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. ஒரு அதிகார மையத்துக்குப் பதிலாகப் பல அதிகார மையங்கள். ஆதிக்கச் சாதியினர் அதிகார மையத்திலும், தாழ்த்தப்பட்ட மக்கள் விளிம்பு நிலையிலும் வைக்கப்படுகின்றனர். முந்தைய இந்தியச் சமுதாயத்தில் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான ஆதிக்கச் சாதியினரிடம் பெரும்பான்மையான நிலங்களும் இருந்தன. தங்கள் விவசாய நிலங்களில் வேலைகள் நடைபெறுவதற்கு அவர்கள் எண்ணிக்கைப் பெரும்பான்மையினராகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே நம்பியிருந்தார்கள். இந்த மக்களும் வேலைக்கு ஆதிக்கச் சாதியினரையே நம்பியிருந்தனர். இதில் அடிமைத்தனத்துடன் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதற்கு நிர்ப்பந்தமான இணக்கம் இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு பெரும்பாலான ஆதிக்கச் சாதியினர் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டனர். இப்போது நிலங்கள் இடைநிலைச் சாதியினரிடம் வருகின்றன. அவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் இல்லாமல் போகிறது. சமூக அமைப்பு மேலும் இறுக்கமடைகிறது. பஞ்சாயத் ராஜ் சட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கிடைக்கிறது. இப்போது நிலத்துடன் அதிகாரம், பணம் எல்லாம் இடைநிலைச் சாதிகளிடமே குவிகின்றன. இவையெல்லாம் சேர்ந்து கிராமங்களை மேலும் கொடூரமானவையாக, சாதிய வன்முறைகளின் மையங்களாக ஆக்கிவிட்டன. இதையெல்லாம் பார்க்கும்போது காந்தி, தரம்பால் ஆகியோர் கிராமங்களைப் பார்த்த பார்வை எனக்கு உவப்பானதாக இல்லை. மாறாக, கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் முன்வைத்த பார்வைகளை நோக்கித்தான் நான் உந்தப்படுகிறேன். அதே சமயத்தில் முந்தைய சமுதாயத்தைப் பற்றி, முக்கியமாக மதறாஸ் மாகாணத்தைப் பற்றி ஆய்வு செய்து நிறைய தரவுகளை தரம்பால் முன்வைத்திருக்கிறார். அவை கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டியவையே.”
அழகான மரம்தானா?
பி.ஏ. கிருஷ்ணன் தன்னுடைய உரையில் 18-ம் நூற்றாண்டின் கல்வி முறையைப் பற்றிய தரம்பாலின் ‘த பியூட்டிஃபுல் ட்ரீ’ என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசினார். அவரது உரையின் சாரம்:
“இந்தியாவின் மரபான கல்வி முறையை ‘த பியூட்டிஃபுல் ட்ரீ அதாவது ‘அழகிய மரம்’ என்றார் காந்தி. அப்போதைய கல்வி முறையையும் இப்போதைய கல்வி முறையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அப்போதைய கல்வி முறை காந்தியும் தரம்பாலும் சொல்வது போல் அவ்வளவு ‘அழகான மரம்’ போன்று எனக்குத் தெரியவில்லை. அப்போது பெரும்பாலும் பிராமணர்களே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். பழங்காலக் கல்வி முறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கோ பெண்களுக்கோ இடம் இல்லை.”
“மெக்காலேவை வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. ஆங்கிலக் கல்வி முறையை அவர் பரிந்துரைத்தபோது, ஒரு தரப்பில் ஆங்கிலமும், இன்னொரு தரப்பில் சம்ஸ்கிருதம், அரபி ஆகியவையும் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும், ஆங்கிலக் கல்விதான் வேண்டும் என்று ஒரு மனுவை எல்ஃபின்ஸ்டோன் பிரபுவுக்கு 1839-ல் 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு அனுப்புகிறார்கள். இவர்களெல்லாம் ஆதிக்கச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான். அவர்களே ஆங்கிலக் கல்வியைத்தான் நாடியிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஆங்கிலத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருதமோ அரபியோ பரிந்துரைக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்! அரபியைப் பயிற்று மொழியாக ஆக்கியிருக்கும் அரபி நாடுகள் நவீன உலகத்துடன் போட்டி போட முடியாமல் பின்தங்கியிருக்கும் நிலையை நாம் நினைத்துப் பார்க்கலாம். எனினும் ‘முன்பு என்ன இருந்தது, இப்போது என்ன இல்லை என்பதைத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் நமக்கு என்ன தேவையாக இருக்கும் என்பதைத் தேர்வுசெய்ய வசதியாக இருக்கும்’ என்று தரம்பால் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது”
மனிதர்களுடனான உறவு முக்கியம்
தரம்பாலுடன் பழகிய தருணங்களை ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். அதிலொரு சம்பவம்: ஒருமுறை சென்னையில் தரம்பாலைச் சந்திக்க ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் ஆட்டோவில் சென்றபோது ஆட்டோ கட்டணத்துக்காகச் சண்டை வருகிறது. தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார் தரம்பால். ஆட்டோ சென்றதும் ‘எல்லா ஊர் ஆட்டோகாரர்களுமே இப்படித்தான்’ என்றரீதியில் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் தரம்பாலிடம் சொல்லியிருக்கிறார். அப்போது தரம்பால், “ஆட்டோவில் வரும்போது ஆட்டோகாரரிடம் ஏதாவது பேசினாயா? அவரைப் பற்றி விசாரித்தாயா?” என்றெல்லாம் கேட்கிறார். “இல்லை” என்கிறார் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன். அதற்கு தரம்பால், “அவரிடம் நீ ஒரு உறவை ஏற்படுத்தியிருந்தால் இந்தச் சண்டையே வந்திருக்காது. அவர் ஒன்றும் இயந்திரமல்ல. அவரும் மனிதர்தான். மனிதர்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வது அவசியம்” என்று சொல்லியிருக்கிறார்.
பத்ரி சேஷாத்ரி பேசும்போது தன்னுடைய கருத்துகள் பெரிதும் பி.ஏ. கிருஷ்ணனுடன் உடன்படுகின்றன என்றார். தரம்பாலின் ஆய்வுகளில் தனக்கு மிகவும் முக்கியமானதாகப் படுவது 18-ம் நூற்றாண்டின் இந்திய அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆய்வு என்றார். 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கிராமங்களில் இரும்பு, எஃகு, காகிதம், பனிக்கட்டி போன்றவற்றை உற்பத்தி செய்திருக்கிறார்கள். இந்தியாவின் இரும்பு பிரிட்டிஷாரின் இரும்பைவிட மேம்பட்டதாக இருந்ததாக இங்கிருந்து மாதிரிகள் அனுப்பியிருக்கிறார்கள். அதே போல், தரம்பாலின் தரவுகளின்படி அன்றைய விவசாய உற்பத்தியை இன்றைய விவசாய உற்பத்தியால் எட்டிக்கூடப் பிடிக்க முடியாது என்றே தெரிகிறது. முந்தைய இந்திய சமுதாயத்தின் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அவற்றில் இன்றைக்கு மிகவும் பொருத்தமானவற்றை நாம் இன்று பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கலாம் என்றார் பத்ரி சேஷாத்ரி.
தரம்பால் என்ற மனிதரின் கருத்தியல் பற்றி இசைவான கருத்துகளும் மாறுபட்ட கருத்துகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றாலும் மிகவும் இணக்கமான சூழலே அங்கு நிலவியது. மாறுபட்ட கருத்துகள் உடையவர்களும் இந்தத் தொகுப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தவறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT