Published : 09 Oct 2021 06:26 AM
Last Updated : 09 Oct 2021 06:26 AM
ஏமாளி
அரிசங்கர்
வெளியீடு-தமிழ்வெளி
தொடர்புக்கு – 9094005600
விலை - ரூ.160
புதுச்சேரியில் பிறந்து சென்னையில் ஐடி துறையில் பணியாற்றிவரும் அரிசங்கரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள 15 கதைகளில் பெரும்பாலானவை சென்னையைக் களமாகக் கொண்டவை. நகர வாழ்வின் நெருக்கடிகளையும் அன்றாட அவஸ்தைகளையும் மையம்கொண்டவை. நகரங்களில் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பெருவணிக நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் நசுக்கப்படும் பணிச்சூழல், செக்குமாடு போன்ற அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றால் விளையும் உளவியல் நெருக்கடிகளின் பல்வேறு வடிவங்களையும் பரிணாமங்களையும் அரிசங்கரின் கதைகள் விரிவாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்கின்றன.
ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஹவுஸிங் போர்டு வீட்டில் ஒரு குழந்தை, அதன் அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி என இரண்டு வாழ்விணையர் வாழ வேண்டிய சூழலில், காதலைப் பகிர்ந்துகொள்வதற்கான திட்டங்கள் பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகும் தோல்வியடைவதில் உள்ள வெளியே சொல்ல முடியாத ஏமாற்றத்தை வைத்து எழுதப்பட்டுள்ளது ‘புறாக்கூண்டு’. ஆழமான வர்ணனைகள், கனமான படிமங்கள் எதையும் நாடாமல், செறிவான இலக்கிய அனுபவத்தைக் கடத்திவிடுகிறது இந்தக் கதை. தொகுப்பில் அனைத்துக் கதைகளும் ஏதோ ஒரு வகையில் கனவுடன் தொடர்புடையதாகவே இருப்பது தற்செயலானது என்று முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். உறக்கத்தில் வரும் கனவுகள், விழிப்புநிலையில் அன்றாடம் நாம் சுமந்துகொண்டிருக்கும் நிறைவேறாக் கனவுகள் மட்டுமல்லாமல், மரணத்தை நிரந்தர உறக்கமாகக் கொள்வோமானால், அதற்குப் பிறகும் தொடரும் கனவுகளும் சில கதைகளின் மையமாக அமைந்திருக்கின்றன. விழிப்புநிலைக்கும் கனவுநிலைக்கும் இடையிலுள்ள கோடுகளை அழித்துப்போடும் கதைகளும் உண்டு. ‘தொலைந்துபோன பேனாவால் எழுதப்பட்ட கதை', ‘கலகக்காரன்', ‘அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்', ‘தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன்', ‘குமிழ்கள்', ‘நனவிலி கதவுகள்' ஆகிய கதைகளை இந்த வகைமையில் அடக்கலாம். இவற்றில் ‘தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன்', ‘குமிழ்கள்' இரண்டையும் ஒரே கதையின் ஆண்பால் மற்றும் பெண்பால் வடிவங்களாக அடையாளப்படுத்திவிடலாம்.
இறந்துவிட்டவர் பேசுவது அல்லது இல்லாத ஒருவரை இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவது போன்ற விஷயங்கள் நிறைய கதைகளில் வருவது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு நிகழ்த்த வேண்டிய போராட்டங்கள், ஒரு சந்திப்புக்காகவோ உரையாடலுக்காகவோ காத்திருக்கும்போது, ஒவ்வொரு நொடியும் எவ்வளவு நீளமானவை என்பதை உணரும் தருணங்கள், எதையெல்லாமோ நினைத்துக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் சரியாகச் சென்றுவிடுவது குறித்து அவ்வப்போது ஏற்படும் வியப்பு போன்ற அரிசங்கரின் கதை மாந்தர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், எண்ணங்கள் பலவும் வாசகரால் எளிதில் பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடியவையாக இருக்கின்றன. கதைகளில் ஆசிரியரின் கூர்மையான அரசியல் பார்வையும் எளிய மக்கள் மீதான அக்கறையும் வெளிப்படும் பல தருணங்கள் இருக்கின்றன. அதே நேரம், அவை எங்குமே பிரச்சாரத் தொனியை அடையவில்லை. ‘ஏமாளி’ என்பது தொகுப்பில் இடம்பெற்ற எந்தக் கதையின் தலைப்பும் அல்ல. அதே நேரம், ‘ஏமாளி’ என்னும் பொதுத் தலைப்புக்கு ஆசிரியர் முன்னுரையில் அளித்திருக்கும் வரையறைக்குள் அனைத்துக் கதைகளையும் அடக்கிவிட முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT