Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM
சிறுகதை, குறுநாவல், கவிதை, இலக்கிய விமர்சனம் எனப் பல தளங்களில் தீவிரத்துடன் இயங்கிவரும் எழுத்தாளர் அழகியசிங்கர் ‘நவீன விருட்சம்’ என்ற காலாண்டிதழை 34 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தற்போது ‘விருட்சம் நாளிதழ்’ என்னும் பெயரில் இலக்கியத்துக்கென்று பிரத்யேகமான இணைய நாளிதழைத் தொடங்கியிருக்கிறார் (https://bit.ly/2WzPpDq). அது பற்றி அவரிடம் பேசியதிலிருந்து…
இலக்கியத்துக்கென்று ஒரு நாளிதழைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
தமிழில் இப்போது நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. நாமும் அப்படி ஒன்றைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய மகன் அரவிந்த், இந்த இணைய இதழை வடிவமைத்து ஏற்பாடு செய்துகொடுத்தார். இந்த இதழில் தினமும் படைப்புகளை வெளியிடுங்கள் என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். அது அவ்வளவு எளிய விஷயமில்லை என்றாலும், அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டேன். கதைகளைப் பெறுவதற்காக ‘கதை புதிது’, கவிதைகளுக்காகச் ‘சொல் புதிது’ என இரண்டு வாட்ஸ்அப் குழுக்களை வைத்திருக்கிறேன். இவை தவிர, editorvirutcham@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குப் படைப்புகளை அனுப்பலாம். ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று எண்ணிக்கை வரையறை வைத்துக்கொள்வதில்லை. தரமான படைப்புகள் எவ்வளவு கிடைத்தாலும் வெளியிடுகிறேன். ஒரு நாளைக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும்கூட ஒரு சிறந்த கதை அல்லது கவிதை குறித்த கட்டுரைகளை வெளியிடுவேன். நானும் இவ்விதழுக்காகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இன்று சுருக்கமான கதைகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. பெருந்தேவி, சுரேஷ்குமார இந்திரஜித் போன்றவர்கள் குறுங்கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். எனவே, துரிதக் கதை அல்லது ஒரு நிமிடக் கதை என்னும் பெயரில் குறுங்கதைகளை எழுதிவருகிறேன். தமிழவனின் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்னும் நூலை இதற்கு முன்னோடியாகக் கொள்ளலாம்.
என்ன அளவுகோல்களின் அடிப்படையில் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அப்படிக் குறிப்பிட்ட அளவுகோல்கள் என்று எதையும் சொல்லிவிட முடியாது. இலக்கியத் தரமான படைப்புகள் எவை என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். ‘பொன்னியின் செல்வன்’ எல்லாம் யார் படிப்பார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். சுஜாதாவை வெகுஜன எழுத்தாளர் என்று ஒதுக்கும் போக்கு இருக்கிறது. இப்படிச் சொல்கிற பலர் தீவிர இலக்கியத்தில் கரைகண்டவர்கள் இல்லை. மெளனியையோ கோணங்கியையோ படித்திருக்க மாட்டார்கள். யார் எழுதியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட கதை என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. இது போன்ற அளவுகோல்களால் மறக்கடிக்கப்பட்ட எழுத்தாளர்களை மீண்டும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நேற்று இளைஞர் ஒருவர் அனுப்பிய கதையில் பேசப்பட்ட விஷயம், சமூகத்துக்குச் சொல்லப்பட வேண்டியது என்று தோன்றியதால், அதை உடனடியாக வெளியிட்டுவிட்டேன். இப்படிப் படித்தவுடன் ஏற்படும் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே படைப்புகளை வெளியிடுகிறேன்.
இந்த இணைய இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
இதழைத் தொடங்கிய முதல் நாள் 800 பேர் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு நாளைக்குச் சராசரியாக 400 பேர் வரை பார்க்கிறார்கள். நிறைய எழுத்தாள நண்பர்களிடம் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்கள் படைப்புகளைத் தரத் தொடங்கினால், இந்த இதழ் இன்னும் வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன். கதை வாசிப்பு, கவிதை வாசிப்பு, இலக்கிய ஆளுமைகளை நினைவுகூரும் இணையவழிக் கூட்டங்களை விருட்சம் சார்பில் நடத்திவருகிறோம். அவை ஒவ்வொன்றிலும் 30-40 பேராவது கூட்ட நேரம் முழுவதும் பங்கேற்கிறார்கள். இலக்கியத்தின் மீது இன்றைய இளைஞர்கள் ஆர்வத்துடன்தான் இருக்கிறார்கள்.
- கோபால், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT