Last Updated : 26 Feb, 2016 10:18 AM

 

Published : 26 Feb 2016 10:18 AM
Last Updated : 26 Feb 2016 10:18 AM

மவுனத்தின் புன்னகை 9: எழுத்தாளர்களும் அவர்கள் ஆயுட்காலமும்!

“நீண்ட ஆயுள் இருப்பதின் துக்கம் உங்கள் கண் முன் நண்பர்கள் இறந்து கொண்டிருப்பார்கள்.”

“வயதான காலத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் இருக்க மாட் டார்கள்.”

“தீர்காயுள் பெற்றிடு என்று ஆசீர்வதிப் பவர்கள், யயாதி கதையை நினைத்துப் பார்க்க வேண்டும்.”

நான் முதலில் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட்மாம்தான் இப்படிப் பேசியிருப் பார் என்று நினைத்தேன். தொண்ணூறு வயதுக்கு மேல்தான் அவர் மரணம் நேரிட்டது. ஆனால், அவர் தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களும் சிந்தனை யாளர்களும் முதுமை பற்றி சோக மாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

நீண்ட நாள் வாழ்வதின் மறுபக்கத் தைக் கிழக்கு, மேற்கு எல்லாத் திசை அறிஞர்களும் யோசித்திருக்கிறார்கள். வாழ்வின் பல பிரத்யட்சங்களில் முதுமை யும் ஒன்று. ‘சுபகாரியங்களுக்குப் போகாத போதிலும் சாவுக்குப் போகா மல் இருக்கக் கூடாது’ என்பார்கள். ஆனால், பல சமவயதினர் இறப்புக்குப் போகக் கால் வராது. எழுத்தாளர் கு.அழகிரிசாமிக்கு க.நா.சு மிகவும் நெருக்கமானவர். கு.அழகிரிசாமி சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது க.நா.சு டெல்லியில் இருந்து சென்னை வந்திருந்தார். அவரிடம் ‘‘அழகிரிசாமியைப் பார்க்க அழைத்துப் போகிறேன்’’ என்றேன்.

“நாங்கள் சந்தித்தபோது எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரை நோயாளியாகப் பார்க்க எனக்கு மனதில்லை” என்று க.நா.சு சொன்னார். நான் அன்று அழகிரிசாமியைப் பார்க்கப் போனபோது அவரிடம் இதைச் சொன்னேன்.

“அவர் நல்ல காரியம் செய்தார். இன் னும் ஓரிரு நாட்களுக்கு அவர் போன்ற நண்பர்களைப் பார்த்தால் எனக்கும் மனம் கஷ்டப்படும்” என்றார் அழகிரிசாமி. காரணம், அவரை மருத்துவமனையில் பொதுப் பிரிவில் தரையில் கிடத்தி இருந்தார்கள். ஏதாவது கட்டில் காலியானால் நிச்சயம் அவருக்குத் தருகிறோம் என்று ஆஸ்பத்திரி உறுதி கொடுத்திருந்தது. நான் அவருக்கு ஒரு வருடமாகத்தான் பழக்கம். ஆனால், அவர் மறைவு எனக்கே மிகுந்த துக்கம் அளித்தது.

அதை விடத் துக்கம் தந்தது அவர் இறந்துபோய் சில நாட்களுக்குப் பிறகு “அவர் வேலைக்கு நீங்கள் முயற்சி செய்யலாமே” என்று அழகிரிசாமியின் மனைவியார் சொன்னது. நான் அவரிடம் என் கஷ்டங்கள் பற்றிச் சொன்னதே இல்லை. அழகிரிசாமியைப் பார்க்கப் போனால்கூட எழுத்து, எழுத்தாளர்கள் பற்றித்தான் எங்கள் பேச்சு இருக்கும். ஒரே ஒருமுறை எனக்கு ஒரு வேலை வாய்ப்பு வந்தபோது அரசு அதிகாரியாக இருந்த அவரது நண்பர் ஒருவரிடம் நற்சான்றிதழ் வாங்கினால் உதவியாக இருக்குமா என்று கேட்டேன்.

அவர் உடனே, “வேண்டாம் இருக்கும் வாய்ப் பும் போய்விடும்” என்றார். மனிதர்களை யும் சமூகப் போக்கையும் துல்லியமாக அறிந்திருந்தார் அழகிரிசாமி. அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், என் நெருங்கிய நண்பரும் ஆதர்சமுமாக இருந்தவருக்குக் கிடைத் தது. எனக்கு மகிழ்ச்சிதான்.

தமிழ் எழுத்தாளர்களில் இரட்டையர் என்று இரு இரட்டையர்கள் உண்டு. ஒன்று, கு.ப. ராஜகோபாலனும் ந.பிச்ச மூர்த்தியும். இரண்டாவது இரட்டையர் சிட்டி சுந்தரராஜனும் தி.ஜானகிராமனும். முதல் இரட்டையர் இலக்கியம் என்பதால் மட்டும் இணைக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், பொன்னேரி எனும் இடத்தில் பட்டதாரி ஆசிரிய ராக இருந்த சிட்டி அவர்களுக்கு அப்போதே தொடங்கப்பட்ட அகில இந்திய வானொலியில் உத்தியோகம் கிடைத்தது.

ஏதோ தஞ்சையில் ஒரு கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி.ஜானகிராமனையும் வானொலி யில் சேர வைத்தது சிட்டிதான். தி. ஜானகி ராமன் மட்டுமல்ல; சிட்டி பலருக்குச் சமயத்தில் கை கொடுத்திருக்கிறார். சிட்டி நூறாண்டு காலம் வாழ்ந்தார். தி.ஜானகிராமன் அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களுக்குள் மறைந்தார்.

ஐராவதத்தின் இயற்பெயர் சுவாமிநாதன். அவருடைய தகப்பனார் யுத்தத்தில் பணி புரிந்து ஒரு காலை இழந்தவர். அவருக்குக் காலுக்கு ஈடாக ஒரு தட்டச்சு இயந்திரம் கொடுத்திருந் தார்கள். அவர் அதை வைத்துக் கொண்டு இரு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைத்தார்.

ஐராவதம் சிறந்த மாணவராக இருந்தும் பட்டப் படிப் புக்கு மேல் படிப்பைத் தொடர முடிய வில்லை. வழக்கம்போல அவரும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியானார். ஐராவதத்தின் சகோதரருக்கு கல்லூரி யில் அதிக மதிப்பெண் வாங்கி, மேல்படிப்புப் படித்து கொல் கத்தாவில் ஐ.ஐ.எம்மில் சேர வாய்ப்புக் கிடைத்தது. நடுவில் சகோதரிக்குக் கல் யாணம். ஐராவதத்துக்கும் ரிசர்வ் வங்கி யில் வேலை கிடைத்தபோது குடும்ப நெருக்கடி தளர்ந்தது.

இலக்கியச் சங்கத்தின் நிறுவனர் ஐராவதம். நா.கிருஷ்ணமூர்த்தி, சா.கந்த சாமி, எஸ்.ராமகிருஷ்ணன், ம.ராஜாராம், ஆர்.வி.எஸ்.மணி, ஐராவதம் ஆகிய சில இளைஞர்களால் எந்தவிதப் படாடோபமும் இல்லாமல் நல்ல படைப்பு, நல்ல விமர்சனப் போக்கு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட அமைப்பு இலக்கிய சங்கம். அன்று சென்னை மத்திய நூலகத்தில் சிறிய அறையில் கூட்டம் நடத்த வாடகை இரண்டு ரூபாய். இலக்கியச் சங்கம் மாதம் இரு கூட்டங்கள் நடத்தியது. ஆரம்பத்திலேயே கூறி விடுவார்கள்.

அங்கு வெறுமனே பேசிவிட்டுப் போகாமல் கட்டுரை எழுதிப் படிக்க வேண்டும். அவர்கள் பதிப்புத் துறையிலும் ஈடுபட்டார்கள். ‘கோணல்கள்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பை முதலில் வெளியிட்டார்கள். அன்று அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கு ஆசிரியர்கள் - நா.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜாராம், சா. கந்தசாமி, எஸ். ராமகிருஷ்ணன். ஒவ்வொருவரும் மூன்று கதைகள். இந்த நூலுக்கு ஐராவதம் சிறப்பானதொரு அறிமுகக் கட்டுரை எழுதியிருந்தார். ஐராவதத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பையும் இலக்கியச் சங்கம்தான் வெளியிட்டது என்று நினைக்கிறேன். பின்னர் ‘கசடதபற’என்ற மாத இதழ். ஞானக்கூத்தனின் முதல் கவிதை தொகுப்பு ‘அன்று வேறு கிழமை.’ இலக்கியச் சங்கமும் ‘கசடதபற’ மாத இதழும் நவீன தமிழ் படைப்பிலக்கியத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என்றால் தவறாகாது.

சா.கந்தசாமியின் முதல் நாவலாகிய ‘சாயாவனம்’ வாசகர் வட்டம் வெளி யீடாக வாசகர்களுக்குக் கிடைத்தபோது அது வாசகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. ஐராவதத்தின் சிறுகதை கள் பல பத்திரிகைகளில் வெளியாகி யிருக்கின்றன. அவருடைய மறைவு அகாலம் என்றுதான் கூறவேண்டும்.

சொந்த முறையில் நான் ஒரு வழிகாட்டியை இழந்தேன். ஐராவதம் எந்தெந்த நூல்களைப் படிக்க வேண்டும்? எந்தத் திரைப்படங்களைப் பார்க்கவேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்வார். எனக்கு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர் அவரே. அதே போல ஷ்யாம் பெனகல் திரைப்படங்கள். ‘‘ப்ளோ அப் (Blow up) என்றொரு ஆங்கிலப் படம் ஆனந்த் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. உடனே போய்ப் பாருங்கள்” என்று ஒரு நாள் சொன்னார். அப்படியே செய்தேன். பிரமித்துவிட்டேன். இவ்வளவு சின்ன வயதில் கலைப் படைப்புகளை பகுத்துணரும் ஆற்றல் எப்படி வந்தது என்று வியந்திருக்கிறேன். என்னை விடக் குறைந்தது 20 வயதாவது சிறியவர். இன்று அவர் மறைந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது.

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x