Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல நேரங்களில் தியாகராய நகரில் இறங்கி பாலாவைச் சந்திப்பதுண்டு. அங்குதான் பிரான்சிஸ் கிருபாவையும் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது கிருபா அழகான கையெழுத்தில் சில கவிதைகள் எழுதி வைத்திருந்தார். அதே மேன்ஷனிலேயே வேறொரு அறையில் இருந்த அவர், மிகுதியான உற்சாகத்துடன் கவிதைகளைக் கொண்டுவந்து காட்டினார். அவற்றில் ஒன்று, இன்றும் நினைவில் இருக்கும் ‘கல் மத்தளம்’ எனும் கவிதை. அந்தக் கவிதைகளைப் படித்ததும் எனக்கு ஆனந்தம்.
நான் தினமும் இரவுகளில் அங்கே செல்லத் தொடங்கினேன். கிருபாவுக்கும் எனக்குமான நெருக்கம் வலுவடையத் தொடங்கியது. நான் அவர் கவிதைகளின் தீவிர ரசிகன் ஆனேன். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் எனக்கென்று புதுப்புது கவிதைகள் வைத்திருப்பார். வயிற்றில் கொடும் பசி தகித்தாலும் அவர் பேரூக்கத்துடன் படைத்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கும் அங்கொன்றும் இங்கொன்றும் சில பத்திரிகைகளுக்குப் படம் வரைந்து, அதில் கிடைக்கும் சொற்பம்தான் சம்பாத்தியம். நகரத்தில் எங்கெங்கோ சுற்றியலைந்து, இறுதியில் பழவந்தாங்கல் செல்லும் வழியில் தியாகராய நகரில் இறங்கினால், அங்கே கிருபா எனக்காகக் காத்திருப்பார். நாங்கள் எங்களிடமிருக்கும் சில்லறைகளையெல்லாம் தட்டிக்கொட்டிச் சேர்த்து, ஆக மொத்தம் தேறுவதைக் கணக்கிடுவோம். சில இட்லிகள் சாப்பிடும் அளவு காசு இருந்தால் அது மகத்துவப் பொழுதுதான், கொண்டாட்டம்தான்! மூச்சுமுட்டுமளவு கவிதைகளில் முக்குளிக்கும் அதுபோன்ற நாட்களில் 12 மணி கடைசி ரயிலுக்குத்தான் அறை திரும்புவேன். அடுத்த நாளும் செல்வேன். இல்லையென்றால் அவர் என்னைத் தேடி வருவார். ஒருநாள் அவரை என் அறைக்கு அழைத்து நான் வரைந்த அவரது கோட்டோவியம் ஒன்றைப் பரிசளித்தேன். அதைப் பார்த்து குழந்தைக் களிப்பு அவருக்கு. அவரைப் பற்றி எழுதிய ‘கசங்கல் பிரதி’ என்ற கவிதை ஒன்றையும் அப்போது பரிசளித்தேன். இந்தக் கவிதை பிறகு அவரது கவிதை நூல் ஒன்றின் முன்னுரையாக இடம்பெற்றது.
தமிழினி பதிப்பகம் வசந்தகுமார் அண்ணாச்சியிடம் நான் கிருபாவைப் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் பேசி, தமிழினியில் அவரது கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவர், ‘சரி, கொண்டுவாருங்கள், படித்துப்பார்ப்போம்’ என்றார். கிருபா கவிதைகள் அவரை ஆட்கொள்ளும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை.
பிறகு கிருபாவின் கவிதைகளை நான் அண்ணாச்சியிடம் சேர்ப்பித்தேன். என் நம்பிக்கை கோலாகலமாக வென்றது. அப்போது கவிதைகள் அவரை வசப்படுத்தியதானது, கிருபாவின் படைப்பு வாழ்க்கையின் அதிபிரகாசத் தொடக்கமானது. இந்தத் தொகுப்புக்கு நீங்களே ஒரு பெயர் வைத்துவிடுங்கள் என்றார் அண்ணாச்சி. நான், ‘மெசியாவின் காயங்கள்’ என்பதைத் தேர்ந்தேன். அண்ணாச்சி கிருபாவை தீரா வாஞ்சையுடன் மனதிலேந்திக்கொண்டார். அடுத்தடுத்து தமிழினியில் கிருபாவின் தொகுப்புகள் வெளிவந்தன. அவருக்கு வாசகர்களும் ஆதரவாளர்களும் பெருகினார்கள். நவீனத் தமிழ்ப் படைப்புலகில் பேராளுமையாக அவர் உருவானார். கவிதையிலும், தன் ‘கன்னி’ நாவலின் மூலம் உரைநடையிலும் அவர் மிகக் காத்திரமான பங்களிப்பைச் சேர்த்திருக்கிறார். சிறு வயதிலேயே அரிய சாதனையை நிறுவியிருக்கிறார். அறிந்தே பலர் இதைப் புறக்கணிப்பது வெளிப்படை. இதற்குக் காரணம் அவரது எளிமைதான். ஒருபோதும் கிருபா அங்கீகாரங்களை எதிர்பார்த்தது இல்லை. இலக்கிய ஷோக்குப் பேர்வழிகள் பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றின் மூலமாக விருதுகளைக் கொள்ளைகொள்ள சகல தந்திரோபாயங்களையும் அலுக்காது, சலிக்காது மேற்கொள்ளும் காலத்தில், கிருபா அவை குறித்து எண்ணமேதுமற்றிருந்தார். எந்த நிலையிலும் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சந்திக்கும்போதெல்லாம், பாக்கெட்டிலிருந்து கவிதைத் தாள்களை எடுத்துப் படிக்கக் கொடுப்பவராக, நேரம் பாராது எப்போது வேண்டுமானாலும் அலைபேசியில் அழைத்துக் கவிதைகளைப் படித்துக்காட்டி கருத்துக் கேட்பவராக, அவர் முற்றுமுழுக்கவும் கவிதைகளுடன் இருந்தார். வாழ்வின் பல நிலைகளில் அவரது கவிதைகள் என்னை மனம் உருகி அழவைத்திருக்கின்றன. மௌனம் பூத்த ஆன்மச் சிலிர்ப்புக்கான, மகிழ்வுக்கான படிகளை சமைத்துக்கொடுத்திருக்கின்றன. கேரளத்தின் ஏதோ ஒரு வயல் ஓரத்திலிருந்து அவரது ‘கன்னி’ நாவலைப் படித்துவிட்டு, சில நாட்கள் உன்மத்தம் பிடித்ததுபோல அந்த நாவலின் வரிகளைப் புலம்பிக்கொண்டிருந்தேன். எனக்கு மட்டும் அல்ல, மிகப் பலரையும் இப்படித்தான் அது பல்வேறு வகைகளில் மன ஆக்கிரமிப்புச் செய்தது. தமிழ் நாவல்களில் அமரத்துவம் பெற்ற படைப்புகளில் ஒன்று அது. தமிழ்க் கவித்துவத்தின் தேவதையாக அதில் அவர் ஒளிர்கிறார்.
இன்னும் இருந்திருக்கலாம் கிருபா, இன்னும் இன்னும் எழுதியிருக்கலாம். தன் உடலை இப்படித் துச்சமாகக் கையாண்டிருக்க வேண்டியதில்லை. குடியின் கொடூரத்துக்கு முற்றிலுமாகத் தன்னை தின்னக்கொடுத்திருக்க வேண்டியதில்லை. சில மாதங்களுக்கு முன்பு கிருபா மிகவும் மோசமாக உடல்நிலை பாதிப்படைந்திருந்த சமயத்தில் அவரைக் காப்பாற்ற கவின்மலரும் நண்பர்களும் பட்டபாடு சொல்லற்கரிது. ஆயினும் மீண்டு வந்தார். அவரை ஏந்திக்கொள்ளப் பல கரங்கள் மனமுவந்து நீண்டன. அவர் பிடிகொடுக்கவில்லை. ‘சற்றே கவனம்கொள் நண்பனே’ எனும் பணிந்த மன்றாடலுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை.
கிருபாவின் மதுப் பழக்கம் குறித்த சஞ்சலப் பேச்சினிடையில் எப்போதோ வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னார்: “இவங்கெல்லாம் இப்படித்தான், தம்பி. நம்மால திருத்த முடியாது. காத்தைப் போல, மழையைப் போல, வெயிலைப் போல வருவாங்க, இந்த உலகத்துக்குக் கொடையளித்துவிட்டுப் போயிடுவாங்க!”
போய்வா என்று சொல்ல முடியவில்லை, மனம் வலிக்கிறது. தமிழுக்கு நீயளித்த கொடை பெரிது நண்பனே, என்றும் அது வாழ்ந்திருக்கும்.
- யூமா வாசுகி, கவிஞர், ஓவியர். தொடர்புக்கு: marimuthu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT