Published : 07 Jun 2014 10:00 AM
Last Updated : 07 Jun 2014 10:00 AM
‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.
மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர்.
தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கையமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன் தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர் வண்ணக்கன் தாமோதரனார்.
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே
(குறுந்தொகை, 85).
மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது, சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது. ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத் தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத் தலைவன்.
இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து வருந்துமாறு கூறுகின்றாள். ஆனால் நற்றிணைப் பாடலில் வரும் சிட்டுக் குருவி குறுந்தொகைத் தலைவன் போல வேற்றுப் புலம் சென்று அங்குள்ள பேடையுடன் சிறிது காலம் தங்கிப் பின் தன் மனை நோக்கித் திரும்புகிறது. அப்பொழுது அதன் பேடை, ஈங்கை பூப்போன்ற தன் குஞ்சுகளுடன் கூட்டினுள் வர இயலாதவாறு தடுத்துத் துரத்துகிறது. இவ்வாறு துரத்தப்பட்ட குருவி, மாலை வேளையில் பெய்யும் மழையில் நனைந்தவாறே பக்கத்தில் தங்கியிருக்கிறது. இதனைக் கண்ணுற்ற பேடை தம் சேவலின் மீது இரக்கமுற்று உள்ளே வருமாறு அழைக்கிறது.
மயக்கமுற்ற நிலையில் காணப்படும் குருவியோ துணைவியின் அழைப்பினைப் புரிந்துகொள்ளாத நிலையில் காணப்படுகிறது. இக்காட்சி நற்றிணை,181-ல் வருகிறது. பாடலை இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.
சங்க காலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் இயற்கையைப் பற்றிய வர்ணனைகள் குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக் கின்றனர். இயற்கையைப் பற்றிய வர்ணனைகளோ குருவி போன்ற உயிரினங்கள் பற்றிய குறிப்புகளோ அருகி வருகின்றன. சங்க காலந்தொட்டே தமிழர் தம் வாழ்வோடு இணைந்த சிட்டுக் குருவியை இலக்கியத்திலும் காப்பதும் நமது கடமையல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment