Published : 28 Feb 2016 12:13 PM
Last Updated : 28 Feb 2016 12:13 PM
மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாம் சமூக வாழ்வனுபவங்களை, குறிப்பாகப் பெண்கள் தொடர்பான உணர்வுகளைக் கண்ணீரும் புன்னகையுமாகப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.அர்ஷியா எனும் சையத் உசேன் பாஷா. கதைப்போக்கில் வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் சகட்டுமேனிக்கு நக்கலடித்திருப்பது அர்ஷியாவின் துணிவு. ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தில் இருந்துகொண்டே அதன் கட்டுகளைக் குலைக்க முனைவதை அசாத்திய துணிவுவாகவே எண்ணத் தோன்றுகிறது.
சில வருடங்களுக்கு முன்பாக ஹெச்.ஜி. ரசூலுக்கு ஏற்பட்ட நெருக்கடி அர்ஷியாவுக்கு நேரவில்லை என்பதில் மகிழ்ச்சியே! இக்கதைத் தொகுப்பின் அநேகமான கதைகள் இஸ்லாமியச் சமூகத்தின் அக-புற நிகழ்வுகளைக் கோவையாகக் கொண்டவையே என்றபோதிலும் அதை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக நிறுத்திக்கொள்ளவில்லை ‘மௌனச்சுழி’, ‘கட்டில் பலகை’ போன்ற கதைகளை மேஜிகல் ரியலிசமாகக் கொடுத்திருப்பது இக்கதைகளின் தனிச்சிறப்பு.
குறிப்பாக ‘மௌனச்சுழி’ முன்னகர்த்தும் மதமறுப்பு, காதல் திருமண விவகாரம், தர்க்காவின் இடையூறுகளையும் மீறி ஏதும் வேண்டாம் என்பதில் தொடங்கி தனது பெண்ணின் மரணம் வரை நீளும் அக்கதையின் கோவை இறுதியில் வாசிப்பவனைக் குலைத்துப் போட்டுச் சட்டென நிறைவுறுவது பதற்றத்தை உண்டாக்கி நம்மை அதிர்ச்சியுற வைக்கிறது. ‘கட்டில் பலகை’ வறுமையில் தோயும் கதையாக இருப்பினும் அதை மாய யதார்த்தவாத பாணியில் நகர்த்தி இருப்பது அழகு.
இத்தொகுப்பின் மிகமுக்கியமான பதிவாக ‘வனம்புகுதல்’ அமைந்திருக்கிறது. ஆண் பெண்ணாக மாறுகிற நிகழ்வைத் தத்ரூபக் கதையாக்கி இருக்கும் அர்ஷியா, கதையின் இறுதியில் சமூகத்துக்கு அறிவுரை கூறுவதாக அமைந்தாலும் கவனிக்கப்பட வேண்டிய கதை.
வேட்கை தொடங்கிய புள்ளியில் இருந்து முடியும் தருவாய் வரை தொடங்கிய வேகத்திலேயே முடிகிற வாசிப்பு ஓட்டத்தை இக்கதையில் காண முடிகிறது. சிறுவயது தொடங்கி திருமணம் வரையிலான ஒரு பெண்ணின் பாலியல் வேட்கை ஒருநாள் இரவில் திருப்தியுராதபோது புதுமணத் தம்பதிகளிடையே தொடங்கும் புரிதலின்மையை, இல்லற வாழ்வின் பாடுகளைச் சொல்லித் தீர்த்திருக்கும் கதை.
இத்தொகுப்பின் ஒன்பது கதைகளுமே மரணத்தைத் தொட்டோ அல்லது அதனைச் சார்ந்தோ அமைந்த கதைகளாகத்தான் உள்ளன. மரண தருணமும் மரண பயமுமே எல்லா விதமான உண்மைகளையும் வெளிக் கொண்டுவருவதாய் இருப்பதுதான் அத்தணை கதைகளிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்வென்னும் பெருநதியில் மிதந்து செல்லும் சருகாக மரணத்தின் பொழுதுகளை அச்சிட்டுக் காட்டும் இக்கதைகள் முகத்தில் அறைவது போலவும் சில இடங்களில் வருடுவது போலவும் உணர்த்திச் செல்கிறது மரணம். நிச்சயம் மரணத்திலாவது யதார்த்தம் பேசப்பட வேண்டும் என்பதைத்தான் இக்கதைகளின் வாயிலாக வேறுவேறு வகைகளில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் அர்ஷியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT