Published : 28 Feb 2016 12:11 PM
Last Updated : 28 Feb 2016 12:11 PM
பிரசவ வலி என்பது, பெண்களால் மட்டுமே அனுபவிக்க முடிந்த உணர்வு. ஆனால் பெண் என்கிற உயிர் உலகில் உதித்ததில் இருந்து இதுவரை, அதைப் பற்றி டால்ஸ்டாய் அளவுக்கு யாராவது (எந்தப் பெண் எழுத்தாளரும்கூட) எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகமே சுந்தர ராமசாமி (நேர்ப் பேச்சில்) போதும்!
- இது எவ்வளவு சாதாரணமான வார்த்தை. தேர்ந்த கலைஞனால் இதற்கு எவ்வளவு பொருள்களைக் கொடுத்துவிட முடிகிறது என்பதற்கு கு.ப.ராஜகோபாலன் எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ என்ற இந்த ஒரு கதை போதும்.
காமத்தைப் பெண் எப்படி உணர்கிறாள் என்பதை நுட்பமாக ஒரு ஆண் எழுத்தாளரால் எழுத முடியுமா? பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட பல கதைகளை முகம் சுளிக்காமல் பெண்களால் படிக்க முடிவதே அபூர்வம். கு.ப.ராஜகோபாலனுக்குப் பார்வைக் குறைபாடு இருந்த சமயத்தில், அவர் சொல்லச் சொல்ல அவற்றை எழுதியவர் அவருடைய சகோதரி என்கிற தகவலை சிட்டி சொல்வதில் இருந்தே, கதையின் களம் ஆண் பெண் உறவாக இருப்பினும் கு.ப.ரா.வின் தரமும் தளமும் புலனாகக்கூடும்.
ஒரு வீட்டின் முன் பகுதியில் குடியிருக்கும் மணமாகாத வாலிபனுக்கு, அந்த வீட்டின் உரிமையாளன், இரவில் தாமதமாய் வருவதும், மனைவியை அடித்துத் துன்புறுத்துவதும் தெரியவருகிறது. தடுக்கிறான். கணவன் கோபித்துக்கொண்டு வெளியேறுகிறான். நடு இரவில் துன்புறுத்தலுக்கு ஆளான மனைவி, வாலிபன் இருக்கும் இடத்துக்கு வருகிறாள். தன் அவலத்தைச் சொல்லி மனம் திறக்கிறாள்.
மனைவியைத் துன்புறுத்துவதில் இன்பமுறும் மனிதனைப் பற்றி, மேடை போட்டு முழங்காமல், அதே சமயம் அசூயைப்படும் விதமாக இதைவிட நேர்த்தியாய், கிளுகிளுப்பின்றி வெளிப்படுத்திவிட முடியுமா.
எழுத்தாளனின் சிக்கல்
தன்மை ஒருமையில் எழுதப்படும் கதைகளில் பாத்திரத்தை எழுத்தாளனோடு வாசகன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் பல எழுத்தாளர்கள் தவிர்த்துவிடுவார்கள். பெரும்பாலும் பிரச்சினையில்லாத பறவைப் பார்வைக்கே சென்றுவிடுவார்கள். அப்படி எழுதுவதில், இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எந்தப் பாத்திரத்தின் மனநிலையைப் பற்றி வேண்டுமானாலும் ‘தனக்கு’ எவ்விதப் பாதிப்பும் வந்துவிடாதபடி எழுதிக்கொள்ளும் வசதி உண்டு.
ஆனால் இது போன்ற சிக்கலான கதைகளைத் தன்மை ஒருமையில் எழுதுவதில் நல்ல இமேஜ் கெடுவதற்கான வாய்ப்பே அதிகம். கு.ப.ரா.வோ, வம்படியாகத் தன்னையும் அவள் கேள்விக்கு உள்ளாக்கும்படியாக வேறு எழுதுகிறார். கலைஞனுக்கு இதெல்லாம் இரண்டாம் பட்சம். சமூகத்துக்குச் சரியாகப் படுமா, விற்குமா, விற்காதா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க அவனென்ன வியாபாரியா? தனக்குச் சரியெனப்பட்டதை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பாதையை உருவாக்குபவன் கலைஞன்.
போதும் என்று சொல்லும்படியாக பெண்ணை, ஒரு ஆணால் அவ்வளவு எளிதாகத் திருப்திபடுத்திவிட முடியுமா? இல்லை, மண வாழ்வில் ஒரு பெண்ணுக்குத் திருப்தி என்பது வெறும் காமம் சார்ந்தது மட்டுமேவா? சாய்வதற்கு ஒரு தோள் கிடைத்தால் போதும் எனுமளவுக்கு ‘திருப்தி அடைதல்’ அவ்வளவு சாதாரண விஷயமா? இல்லை தோள் கிடைப்பதென்பது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லையோ?
போதும் என்கிற வார்த்தையை, கதையின் தொடக்கத்தில் சொல்லப்படுகிற அவளது இறப்புச் செய்தியுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. இதையே அவள் கணவனின் துன்புறுத்தலோடு சேர்த்துப் பார்த்தால் வேறொரு பொருள் கிடைக்கிறது.
போதும் எனத் தோன்றி அதை வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பாக, முயன்று பார்த்தும் அவளால் இயலாத காரியமாக இருந்தது தற்கொலை. ஆனால் கணவனின் காட்டுத்தனமான தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் கொலையாக அவளது மரணத்தில் முடியலாம் என்பதும் போகிற போக்கில் சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே, பதினெட்டு வயதுடைய அவள் மாரடைப்பில் இறந்ததாய் அவன் கேள்விப்படுவதே இயற்கையானதா, இல்லை இனி போதும் என்று அவளே எடுத்த முடிவா என்கிற சந்தேகம் கதையின் ஆரம்பத்திலேயே எழுத்தாளனுக்குத் தோன்றிவிடுகிறது.
கதைசொல்லியுடனான சம்பவத்துடன் இணைத்துப் பார்த்தால், போதும் என்கிற இதே சொல் வெறும் காமம் பற்றிய பொது வார்த்தையாக இல்லாமல், அவள் கணவனின் வக்கிரத்துக்கான காரணமாகவும் அதன் தடயமாகவும்கூடப் புலப்படுகிறது.
இப்படியாகக் கதை கிளை விரிந்துகொண்டே செல்கிறது. நம்மால் செல்ல முடியும் தூரம்வரை. நம் பார்வைக்கு எட்டிய எல்லைவரை.
கு.ப.ரா.வின் எழுத்தின் சிறப்பைச் சொல்வதற்கு, தமிழின் தலைசிறந்த சாதனைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய பின், கு.ப.ரா. மறைந்து 25-வது ஆண்டு நினைவாக வழிகாட்டி என்று 1969-ல் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், தி. ஜானகிராமன் சொல்வதே போதும்.
“ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக்கொண்டே இருக்கிறது.”
கதையைப் படிக்க: >http://archive.org/stream/orr-11746_Sirithu-Velicham#page/n0/mode/2up
- விமலாதித்த மாமல்லன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: madrasdada@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT