Published : 07 Feb 2016 12:45 PM
Last Updated : 07 Feb 2016 12:45 PM
ஆற்றின் எதிர்க்கரை பசுமை மிகுந்ததாகவே பார்வைக்குத் தோன்றும். நதியிடைப்பட்ட தீவில் வளர்ந்த தேசிகனுக்கோ எத்திசைச் செல்லினும் எச்சுவைப் பெறினும் அரங்கமே ‘பச்சை’யாக நெஞ்சிலும் நினைவிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
படிப்பை முடித்த கையோடு தேசிகனுக்கு ஒரு வேலையும் கிடைத்துவிடுகிறது, கைத்தலம் பற்றவும் ஒருத்தி தயாராக இருக்கிறாள். எனினும் அவன் இரண்டிலுமிருந்து தன்னைக் கவனமாக விடுவித்துக்கொண்டு அமெரிக்காவில் ஆய்வுப் பட்டம் பெறுவதற்குக் கிளம்புகிறான். அதுவே தன் திறமைக்கு இவ்வுலகம் அளிக்கும் அங்கீகாரம் என்பது அவனது எண்ணம். உலகம் தன்னை ஏற்பதற்காக எந்தப் பற்றை விட்டொழித்துப் பயணம் புறப்பட்டானோ அதுவே அவனைப் பாதி வழியில் பற்றிக்கொள்கிறது. இடைவிடாது எரியும் அந்நெருப்பில் அவன் சிக்கிச் சீர்பெற்றுத் திரும்புவதே நாவலின் மையம்.
என்னதான் ஆய்வுப் பட்டம் பெற்று அந்த வட்டத்தில் மதிக்கப்பட்டாலும் அறிமுகம் இல்லாத இடங்களில் அந்நியனின் உயிர்ப் பயத்தோடுதான் தேசிகன் உலா வர முடிகிறது. உலக வர்த்தக மையத்தின்மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்றும் அதன் பிறகான நாட்களிலும் பழுப்பு நிறத்தவன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் மதிப்புக் குறைவாய் நடத்தப்படும் விதம் அவன் மனதைச் சுட்டுப் பொசுக்குகிறது.
பொருள் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்க வாழ்க்கை முறை தேசிகனுக்குக் கசந்துபோகிறது. இன்னொரு பக்கம் உடன் பயிலும் ரஷ்ய மாணவர்களின் வழியே கலைந்துபோன கம்யூனிசக் கனவும் கேள்விக்கு உள்ளாகிறது. உலகில் வேறெங்கிலும் கிடைக்காத சர்வ சுதந்திரம் அமெரிக்காவில் அனுமதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக அங்கே தனது சுயத்தை இழந்து பிழைப்பதற்கு அவன் தயாராக இல்லை. இலக்குக்காக எதை விடுத்துக் கிளம்பினானோ அதையே இலக்காக எட்டிய பிறகு திரும்புகிறான். அகம், புறம் என இரண்டிலுமாக அவன் வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டுவிட்டான்.
உணவு, உடை வேறுபாடுகள், அவற்றின் சுவையம்சங்கள், வடகலை தென்கலை வம்பளப்புகள், கல்வித் துறையின் அபத்தங்கள், உயர்கல்வி ஆராய்ச்சிகளில் நடக்கும் அறிவுத் திருட்டுகள், அதை நியாயப்படுத்தும் நிற பேத உணர்ச்சிகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்நாவல். அறிவியலோடு இசை, திரைப்படம், தொலைக்காட்சி, விளையாட்டு என்று விஷய ஞானமுள்ளவர்களை முறுவலிக்கச் செய்யும் குறிப்புகளும் நிறைய உண்டு. நினைவேக்கத்தில் சிக்காமல் ஒருவித சுய எள்ளலோடு விமர்சனமும் செய்யத் துணிந்திருக்கிறார் அருண் நரசிம்மன்.
சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றும் அருண் நரசிம்மனுக்கு இது முதல் நாவல். தத்தித் தாவும் தவளை நடையும் வளைந்து நெளிந்து கண்ணாமூச்சி காட்டும் பாம்பின் நடையும் கலந்து விரவி வர, சட்டென்று சிறகை விரித்தெழுந்து ஆகாயத்திலும் வளையவருகிறது இவரது எழுத்து. நான்கைந்து நிலவெளிகள், ஏழெட்டு மொழிநடைகள், இருபத்து சொச்சம் மனக்கவலைகள் என்பதோடு தமிழ்ப் புனைவுலகம் வீழ்ச்சியுறுமோ என்ற கவலையை விட்டொழிக்கலாம். அடுத்த தலைமுறை புதிய மொழியில் புதிய கதைகளைச் சொல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எனினும் தனிப்பாடல் காலத்து இரட்டுற மொழிதலணி, உரைநடையில் எல்லா இடங்களிலும் சோபிக்கவில்லை என்பதை அருண் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT