Published : 20 Feb 2016 10:56 AM
Last Updated : 20 Feb 2016 10:56 AM
கோவையின் அடையாளங்களில் ஒன்றான விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் விஜயா வேலாயுதம். பதிப்பகத் துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். 1978-ம் ஆண்டு முதன்முதலாக வாசகர் திருவிழாவை நடத்தியவர். புத்தக விற்பனையாளராக, பதிப்பாளராக மட்டுமல்லாமல் முதன்மையான வாசகராகவும் இருப்பவர். அவருடன் பேசியதிலிருந்து…
எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள், முன்னனுபவம் இருந்ததா?
முன்னனுபவம் இல்லை; ஆனால் வாசிப்பனுபவம் இருந்தது. முன்பு ரயில்வே ஸ்டேஷன்களில் பழநியப்பா பிரதர்ஸ் புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருப் பார்கள். மதுரையில் சாமிநாதன், பாரதி புத்தகாலயம் என்ற பெயரில் வைத்திருப்பார். இவையெல்லாம் ஒரு தீப்பொறியாக எனக்குள்ளே விழுந்தன. மற்றபடி ஒரு வாசகனாக நான் எப்படியெல்லாம் புத்தகங்களைத் தேடி அலைந்தேனோ அதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். வாசிப்பு என்றால் ரொம்பவும் உணர்ச்சிவசமாக ஆகிவிடுவேன்.
முதலில் பதிப்பித்த புத்தகம் எது?
நா.பார்த்தசாரதியின் கட்டுரைகளை ‘புதிய பார்வை’ என்னும் பெயரில் வெளியிட்டோம். பிறகு அவரது கவிதைகளை, ‘மணிவண்ணன் கவிதைகள்’ என்ற பெயரிலும் சிறுகதைகளை ‘தேவதைகளும் சில சொற்களும்’ என்னும் பெயரிலும் வெளியிட்டோம். பிறகு மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள், ‘ஊர்வலம்’ ஆகிய தொகுப்புகளையும் வெளியிட்டோம்.
மு.வ., ஜெயகாந்தன், கண்ணதாசன், நா.பா என உங்கள் ஆதர்ச எழுத்தாளர்களில் நா.பா.வை மட்டும் ஏன் பதிப்பித்தீர்கள்?
ஜெயகாந்தன் புத்தகங்களை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுவந்தது. மு.வ.வின் புத்தகங் களைத் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுவந்தது. இதற்கு இடையில் போய் நான் நின்றால் சரியாக இருக்காது. கண்ணதாசன் இங்கு வந்திருந்தபோது, ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து ‘பப்ளிஷ் பண்ணிக்கோ’ என்று சொன்னார். நான் மறுக்காமல் வாங்கிக் கொண்டேன். ஆனால், போகும்போது அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஏனென்றால் வானதி திருநாவுக்கரசுதான் கண்ணதாசனின் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். அதை வாங்குவது நல்ல பண்பல்ல என்பது என் எண்ணம். நா.பா., தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பிக்காத புத்தகங்களை என்னிடம் தந்து பதிப்பிக்கச் சொன்னார். பதிப்பித்தேன்.
தமிழ்நாட்டில் சுய முன்னேற்ற நூல்களும் உடல் நலம் சம்பந்தப்பட்ட நூல்களும்தான் அதிகமாக விற்கின்றன என்று ஒரு பேச்சு உண்டு…
அப்படியல்ல. இலக்கிய நூல்களும் விற்கின்றன. நீங்கள் வாசகர்களுக்கு இனம் காட்ட வேண்டும். இங்கு ஒரு அம்மா வந்தார். பழ. கருப்பையாவின் ‘மகாபாரதம் மாபெரும் விவாதம்’ என்னும் புத்த கத்தை அவரிடம் காட்டினேன். அந்தப் புத்தகம் என்னைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. ‘காக்கப் பட வேண்டிய இல்லத்திற்கு வழி விசாரித்துச் சென்று கதவைத் தட்டுவது அறம்’ என்ற ஒரு வரியை எடுத்துக் காண்பித்தேன். உடனே ‘பில் போட்ருங்க’ என்று சொல்லிவிட்டார்.
புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதாக வாசகர்கள் சொல்கிறார்களே?
வாங்க வேண்டும் என நினைக்கும் வாசகர் எவ்வளவு விலை இருந்தாலும் வாங்குவார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். லாபம் ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு பதிப்பாளர்கள் செயல்படக் கூடாது. எத்தனை ஹோட்டல்கள், எத்தனை ஸ்வீட் ஸ்டால்கள் இருக்கின்றன? ஆனால் புத்தகக் கடைகள்?
எழுத்தாளர்களைத் தொடர்ந்து கவுரவித்துவருகிறீர்களே...
நாங்கள் வெளியிட்டிருந்த வண்ணதாசனின் ‘சமவெளி’ சிறுகதைத் தொகுப்பைப் பாரதியார் பல்கலைக்கழகம் பாடமாகத் தேர்வுசெய்தது. அது குறித்து எனக்கு எழுதியிருந்தார்கள். அப்போது நிலைக்கோட்டையில் வண்ணதாசன் ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்தார். கொஞ்சம் ஸ்வீட் வாங்கிப் போய் அவருடன் பணியாற்றும் எல்லோருக்கும் கொடுத்தேன். அவர்களுக்கு இவர் எழுத்தாளர் என்பதே அப்போதுதான் தெரியும். பின்னால் இங்கு நடந்த ஒரு விருது விழாவில் இதையெல்லாம் விடப் பெரிய விருதை வேலாயுதம் கொடுத்துவிட்டார் என்றார் வண்ணதாசன்.
வாசகர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?
ஒரு தீவிரமான வாசகர் வந்தால், எனக்கு விதைநெல் கிடைத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி. நான் எப்படித் துப்பறியும் நாவல் வாசிக்கத் தொடங்கி இந்த இடத்துக்கு வந்தேனோ அதுமாதிரி எங்களால் வாசகர்கள் மாறியிருக்கிறார்கள்; வளர்ந்திருக்கிறார்கள். வாசகர்களை ஒட்டி நானும் வளர்ந்திருக்கிறேன். விற்பனை மட்டுமல்ல; மக்களின் பண்பும் வளர்ந்திருக்கிறது. ஒருத்தர் வருகிறார். ஆறு புத்தகங்கள் வாங்குகிறார். ஒன்றுக்கு பில் போட எங்கள் பிள்ளைகள் மறந்துவிடுகிறார்கள். தேடி வந்து கொடுத்துவிட்டுப் போகிறார்.
மக்களின் ரசனையை மாற்ற முடியுமா?
உள்ளே வந்துவிட்டால் போதும். ‘நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?’ ‘கார் ஓட்டுவது எப்படி?’ ‘கொங்கு நாட்டுச் சமையல்’ என எது வேண்டுமானாலும் இருக்கட்டும். வாங்கத் தலைப்பட்டுவிட்டால் போதும். தானாகவே மாறிவிடும். ஜிலேபியையே ஒருத்தர் தின்றுகொண்டிருக்க முடியாது. அவருக்குத் திகட்டும். அப்போது அவர் தீவிர இலக்கியத்துக்கு வந்துதான் ஆக வேண்டும்!
-தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT