Published : 14 Feb 2016 02:32 PM
Last Updated : 14 Feb 2016 02:32 PM
' காமம்’ என்ற பழந்தமிழ் சொல்லுக்குக் ‘காதல்’ என்று பொருள். இந்தச் சொல்லும், ‘உடலுறவு வேட்கை’ என்ற பொருளில் தற்போது பயன்படுத்தப்படும் ‘காமம்’ என்ற சொல்லும் வேறு வேறு. உலகின் பல்வேறு மொழிகளில் தெய்வங்களையும் மன்னர்களையும் போர்களையும் பற்றிப் பாடல்கள் புனையப்பட்டிருந்த காலத்தில் காதலைச் சார்ந்து அமைந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் பேசியவை சங்கப் பாடல்கள். காதலின் வெவ்வேறு மனநிலைகள், வடிவங்கள், தருணங்கள், சாத்தியங்கள் என பலவற்றையும் பேச ஆரம்பித்த தமிழ்க் கவிதைகளின் இரண்டாயிரம் வருட மரபில் காதலுக்கான இடம் மிகவும் முக்கியமானது. ‘என்னை நினைத்தேன் என்கிறீர்கள். அதுசரி அதற்கு முன் என்னை ஏன் மறந்தீர்கள்?’ என்று திருக்குறளில் இடக்கு செய்யும் காதலியில் ஆரம்பித்து காதலின் உச்சத்தில் காதலனின் முகத்தையே மறந்துபோன காதலியின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ (பாரதியார்) புலம்பல், ‘கருகாத தவிப்புகள் கூடி’ தவிக்கும் பிரமிளின் தகிப்பு என்றெல்லாம் தமிழ்க் காதல் பூசிக்கொண்ட வண்ணங்கள், அதன் தருணங்கள் ஏராளம். காதலின் வரையறைகளில், இந்தச் சங்கக் கவிதை சொல்வது மிகவும் அலாதியானது:
காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
மிளைப் பெருங்கந்தன், குறுந்தொகை- 204
இதன் விளக்கம்: ‘காமம் காமம் (காதல்) என்று எல்லோரும் சொல்கிறார்களே. காமம் என்பது ஏதோ அணங்கோ நோயோ அல்ல. நினைக்கும்போதெல்லாம் இன்பம் தருவதுதான் காமம். எப்படியென்றால், பல்லில்லாத கிழட்டுப் பசுவொன்று, மேட்டுநிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை அசைபோட்டு அசைபோட்டு இன்புறுவதைப் போன்றது தான் காமம்.’ காதல் என்பது தீரா விருந்து என்று கொண்டாடிய தமிழ்க் கவிதையுலகின் நெடும் பரப்பிலிருந்து சிறந்த வரிகளில் மிகச் சிலவற்றை அள்ளி இங்கே தருகிறோம்! காதலைக் கொண்டாடுவோம், கவிதைகளுடன்!
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
-திருவள்ளுவர்
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
- பாரதியார்
நீ மட்டுமே நடந்து நடந்து
ஒற்றையடிப் பாதையொன்று என்-
நெஞ்சில் விளைந்து காய்ந்திருக்கும்.
பனித்துளியுடன் சிலபுற்கள்-ராணியுன்
பவனி பார்க்கக் காத்திருக்கும்
அந்த உன் ராஜாங்கத்தில்...
திரும்பவும் பனிக்காலம், வரும்.
- கலாப்ரியா
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்.
- காரைக்கால் அம்மையார்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
-ஆண்டாள்
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அளவு இன்றே,சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார்
செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர்
உம்பொற் கபாடம் திறமினோ
- ஜெயம்கொண்டார்
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ
- பிரமிள்
உனது நெற்றிக் குங்குமம்
நீண்ட கூந்தல்
எளிய ஆடை
உன் முறுவல்
பிரகாசமான கண்கள்
நீண்ட விரல்கள்
உன் நிதானமான
போக்கு
உன் தேர்போன்ற அல்குல்
எல்லாம்தான்
என்
மம்மரறுக்கும் மருந்து
- நகுலன்
கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி
உன் பெயர்
- சுகுமாரன்
முத்தத்தில் உண்டோடி
உன் முத்தம் என் முத்தம்
நம் முத்தமும் இல்லை அது -
முத்தம்
- பாதசாரி
உன் விரல் பற்ற நினைத்து
பற்றாமல் நானும்
பேச்சு நின்று தடைபட்ட கணத்தில்
கண்களில் வழியும் ஜூவாலையில்
கருகி விலகும் மனதுடன் நீயும்
வரும் பகல் அறியாது
பிரிந்து விலகினோம்.
-அப்பாஸ்
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்தநேரம்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?
- ஞானக்கூத்தன்
பிளவுற்றிருக்கும் நமது காயத்தில்
புரையோடும் படி
கசடுகள் சேர்கின்றன
அழுகி நாறுவதற்குள்
அன்பின் பசை பூசி
தோல் தைக்கும் ஊசியால்
நம்மை இறுகத் தைப்போம் வா...
-அழகியபெரியவன்
நிலவொளி வீசும் வானத்தை
உடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில்
உடலின் உயிர்ப்பிராணிகள்
கர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்
-குட்டிரேவதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT