Last Updated : 02 Feb, 2016 10:56 AM

 

Published : 02 Feb 2016 10:56 AM
Last Updated : 02 Feb 2016 10:56 AM

கதாநதி 4: விடுதலை பேசும் கலைக் குரல் தமயந்தி

நடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது? அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு? பின் ஏன் பூக்க வேண்டும், பூ? அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும்? அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும்? அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.

மலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள்? இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள்? பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள்? எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும்? சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும்? புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா? தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.

தமயந்தியை 1980-களின் கடைசிப் பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது? வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.

அண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் ‘முகம்’ எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:

‘காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையை கோத லாம்னு பார்த்தப்பதான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...’

தமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண? முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே!

தமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.

பிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல் லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது? கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது?

‘பக்கி மவள… தூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடு’ என்கிற மாமியாரை யார் எழுதுவது.

‘கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதை களச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.

அவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே!

தமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வ மாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.

ஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப் போம். சமூக அக்கறையும் மனித நேயமும்கொண்ட அவள் செய்தி சேக ரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது? பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப் படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா?’’ என்கிறாள் ஒரு பெண்.

இதற்கிடையில் செய்தி சேகரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.

‘‘ஊரு சுத்தப் போயிட்டியா?’’

கணவன்தான்.

‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.

‘‘என்ன போனை எடுக்க மாட்டியா? உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன? மெள்ள வா...’

டிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா..? சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...

தட்டு இட்லியோடு பறந்தது...

வசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.

அன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.

உண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துகொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது?

தமயந்தியின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x