Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM
நேசம், மகிழ்ச்சி, தைரியம், பரிவு ஆகிய பண்புகளை வாசிப்பவர்களிடம் கிளர்த்தும் காப்பியங்களில் ஒன்று ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’. வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கும் அது தரும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கும் இஸ்லாமியக் கலாச்சாரம் வழங்கிய ஞானப்பொக்கிஷம் என்று மதிக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றிப் பல துறை அறிஞர்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை புதுமை மாறாமல் வாசித்தும் புழங்கியும் கொண்டிருக்கிற அந்தக் கதைகளுக்கான நவீன மொழிபெயர்ப்பை சஃபி தமிழில் இரண்டு பாகங்களாக ‘உயிர்மை’ பதிப்பகம் வழியாகக் கொண்டுவந்துள்ளார். மூன்றாவது பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணிபுரிந்துவரும் சஃபியுடன், ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுக’ளை முன்வைத்து நடத்திய உரையாடலிலிருந்து…
‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ நூல் தொடர்பான உலகம் அறிந்த கதையைச் சொல்லுங்கள்…
‘1001 அரேபிய இரவுகள்’ நூலாக வந்த வரலாறே சுவாரசியமானதுதான். முதன்முதலாக, பிரெஞ்சுக்காரர் அந்த்வான் கேலோன் (Antoine Galland) வழியாகத்தான் 1704-ல், 12 பாகங்கள் கொண்ட பெருந்தொகுப்பாக பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. அரபியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு அவர்தான் மொழிபெயர்த்தார். அதைத் தொடர்ந்து வெள்ளம்போல் பல மொழிகளில் அந்தக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. செம்பதிப்பாகவும், பஜாரில் கிடைக்கும் மலிவுப் பதிப்பாகவும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகள்’ பல மொழிகளில் ஆக்கப்பட்டதையும், அதன் மொழிபெயர்ப்பாளர்களையும் பற்றி போர்ஹே ஒரு தனிக் கட்டுரையே எழுதியுள்ளார். போர்ஹே சிபாரிசு செய்யும் ஆக்கம் ரிச்சர்ட் பர்ட்டன் (Richard Burton) மொழிபெயர்த்ததாகும். ரிச்சர்ட் பர்ட்டன் வெளியிட்டது மொத்தம் 16 தொகுதிகள். 1885-1888 ஆண்டுகளில் கல்கத்தாவில் அவை பதிப்பிக்கப்பட்டன. ‘காமசூத்திர’த்தை மொழிபெயர்த்தவரும் ரிச்சர்ட் பர்ட்டன்தான்.
‘ஆயிரத்தோரு இரவுக’ளில் எத்தனைக் கதைகள் உள்ளன?
‘ஆயிரத்தோரு இரவுகள்’ என்பதால், ஆயிரம் கதைகள் இருக்கும் என்பதாய் யோசிப்போம். ஆனால், சில நூறு கதைகளே ஆயிரத்தோரு இரவுகளுக்கும் நீள்கின்றன. ரிச்சர்ட் பர்ட்டனின் தொகுப்பில் 468 கதைகள் இருக்கின்றன. மூலத்தொகுப்பில் 200 கதைகளே இருக்கின்றன என்று பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்த இப்னு அல் நதீம் என்ற பாக்தாதைச் சார்ந்த புத்தக விற்பனையாளர் சொல்லியிருக்கிறார். சுத்தப் பதிப்பாக வெளிவந்துள்ள முஹ்ஸின் மஹதி பிரதியில் 271 இரவுகளோடு கதைகள் முடிகின்றன. இப்படிப் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதை இன்று உலகம் முழுவதும் வாசிக்கப்படுவதற்கு என்ன காரணம்?
எளிய நாட்டார் கதைகளுக்கு உலகம் முழுக்க ஈர்ப்பு உண்டு. கிரேக்க நாடகாசிரியர் சோபக்ள்ஸின் ‘ஈடிபஸ்’ நாடகத்தின் சாயல் கொண்ட ஒரு கதையை நீங்கள் விக்கிரமாதித்தன் கதைகளில் படித்துவிட முடியும். மதனகாமராஜன் கதைகள் ஒன்றில், ஒரு பாம்பு தனது நேசத்துக்குரிய பெண்ணை அடைய முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகும்போது, அந்தப் பெண் இரவில் தூங்கும்போது, அவளது தலைக்கேசத்தில் சுருக்கிட்டு மாய்த்துக்கொள்ளும். மொத்தக் கதைச் சூழலோடு அதை வாசித்தால், பெரிய ஆச்சரியத்தைத் தரும் கதை அது. அப்படியான கதைகளை நீங்கள் ‘1001 இரவுக’ளில் நிறைய எதிர்கொள்ளலாம்.
தமிழில் எப்போதிருந்து பதிப்பு காணத் தொடங்கியது?
பாண்டிச்சேரியைச் சார்ந்த பி.ஞானப்பிரகாச முதலியாரால் 1825-லேயே, ஒரே பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அரபுக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, 12 தொகுதிகள் வெளியிடப்பட்டிருப்பதாக ஜே.பி.பி.மோரே கூறுகிறார். அப்படிப் பார்த்தால், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்புடைய அந்த அரபுக் கதைகளே, தமிழ் முஸ்லிம் அல்லாத தமிழர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் வெளியான முதல் இஸ்லாமியப் படைப்பு எனக் கொள்ளலாம் என்கிறார்.
பெரும் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆக்கிய ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ நூலில் 1876-ல் ‘அராபிக் கதை’ அமரம்பேடு அண்ணாசாமி முதலியாரால் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை உள்ள பிரபாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார். 1880-லிருந்து அரபுக் கதைகளின் மீதுள்ள ஈர்ப்பால், 1950-களின் இறுதி வரை தமிழில் ஒரே தொகுதியாகவும், பல தொகுதிகளாகவும் பல்வேறு அச்சகங்களில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அ.லெ.நடராஜன் மொழிபெயர்ப்பில், சக்தி கோவிந்தனின் ‘சக்தி காரியாலயம்’ வழியாக, 1957-58-க்குள் ஆறு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.
அடுத்து, இஸ்லாமிய இதழியல் முன்னோடியும் உ.வே.சா.வின் கலாசாலைத் தோழருமான ப.தாவூத்ஷா, ‘ஷாஜஹான் புக் டெப்போ’ வழியாக 9 தொகுதிகள் (1,156 பக்கங்கள்) வெளியிட்டதாகத் தெரிகிறது. அந்தத் தொகுப்புகளெல்லாம் இப்போது கிடைப்பதில்லை. ‘அலிபாபா நாற்பது திருடர்கள்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘சிந்துபாத்’ போன்ற தனிக் கதைகள் மக்களிடையே வரவேற்பு பெற்றுத் தனியாக நிறைய அச்சிடப்பட்டுள்ளன. அப்படி வரவேற்பு இருந்ததால்தான், 1941-ல் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த ‘அலிபாபா’, 1956-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடாக எம்ஜிஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஹாலிவுட்டில் டிஸ்னி வெளியீடாக ‘அலாவுதீன்’ கதை சமீபத்தில் அனிமேஷனில் வெளிவந்திருக்கிறது. இத்தாலிய இயக்குநரான பஸோலினியும் அரபுக் கதைகளின் மீதுள்ள ஈர்ப்பால், அதைத் தழுவி ஓர் அழகான படம் எடுத்துள்ளார்.
நீங்கள் மொழிபெயர்த்துப் புதிதாகக் கொண்டுவருவதற்கான முக்கியத்துவம் என்னவென்று கருதுகிறீர்கள்?
துண்டுத் துண்டு கதைகளாகப் படித்திருந்த நிலையில், எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் நான் பார்த்த ‘1001 அரேபிய இரவு’ கதைகளைப் பற்றிய என்சைக்ளோபீடியாதான் எனக்கு உந்துதல் தந்தது. உல்ரிச் மர்ஜோல்ப், ரிச்சர்ட் வான் லீவன் தலைமையில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியம் அது. அரேபிய இரவுக் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் விரிவான தகவல்கள், கதை நிகழும் காலத்து வரலாற்றுப் பின்னணி, கதைகளுக்குள் செயல்படும் நாட்டார் கூறுகள், அது போக ஒவ்வொரு கதையையும் சர்வதேச நாட்டுப்புறக் கதைகளுடன் ஒப்பிடுவது என்று இதுவரை பரிச்சயமில்லாத பகுதிகளை அறிமுகப்படுத்துவதாய் அந்தக் கலைக்களஞ்சியம் இருந்தது. அதைத் தொடர்ந்து தேடத்தேட ‘அரேபிய இரவுக’ளைப் பற்றிய நிறைய ஆய்வுகள் அகப்பட்டன. அத்தோடு யுனெஸ்கோ அமைப்பும் 2004-ல் ‘அரேபிய இரவுகள்’ வெளியான 300-வது நூற்றாண்டைக் கருத்தரங்குகள் நிகழ்த்தி சிறப்பாகக் கொண்டாடிய செய்தியைப் படித்தபோது, ஆச்சரியமாக இருந்தது. இப்படியான தரவுகளோடு தமிழ்ச் சூழலில் கதைகள் அறிமுகமாகவில்லை. கடந்த ஐம்பது, அறுபது வருடங்களாகப் புதிதாக மொழிபெயர்ப்புகள் ஆய்வுக் குறிப்புகளோடு வராததால் இந்தக் கதைகளை நான் மொழிபெயர்த்துள்ளேன்.
ஒரு உளவியல் நிபுணராக, ‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதைகளை மனசிகிச்சையின் ஒரு வடிவமாகப் பார்ப்பதன் பின்னணியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்…
மனநலத்தின் உச்சம் அன்பும் கருணையும் என்பார்கள். ஆனால், அடையச் சிரமான காரியமும் அவைதான். நம்மை நாமே அளவுக்கு அதிகமாய் நேசிப்பதைப் போலவே பிறரையும் சுலபத்தில் நம்மால் நேசிக்க முடிவதில்லை. எல்லாக் கலைப் படைப்புகளும் ‘பிறரின்’ பார்வையில் உலகைப் பார்ப்பதற்கு அனுசரணையாகச் செயல்படுவதுபோல, ‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதைகளிலும், பெண் வெறுப்பு கொண்ட சுல்தான் ஒருவருக்கு உலகின் மாற்றுச் சாத்தியங்கள் கதைகளின் வழியாக வைக்கப்படுகின்றன. அவரும் படிப்படியாக மனத்தில் ‘மறுபிறவி’ கொள்கிறார்.
பாலுறவு சார்ந்து பெண்ணின் தன்னிச்சையான விருப்பு இன்றும் சமயங்களையும் கலாச்சாரங்களையும் சமூகங்களையும் அச்சுறுத்துவதாக உள்ளது. ‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதைகளில் பெண்ணின் இயல்பும் ஆண் அவள் மேல் கொள்ளும் அச்சமும் பரிசீலிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பின்னணியில் ஆணிடம் பெண் உரையாட முயலும் கதைகள் எனலாமா?
அப்படி உறுதியாகச் சொல்லலாம். கதைசொல்லியான ஷஹர்சாத் அறிமுகமாகும்போதே, சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்த வலுவான ஆளுமையாகத்தான் வருகிறாள். பல பெண்ணியவாதிகள், அரேபிய இரவுக் கதைகளின் மேல் ஆர்வம் கொண்டிருப்பதை நிறைய ஆய்வுகள் வழியாக சமீபத்தில் அறிய முடிகிறது. உரிமைகளையும் மாற்றங்களையும் விரும்புபவர்கள் அனைவருமே ஷஹர்சாதின் மேல் பிரியம் கொள்ளவே செய்வார்கள்.
‘1001 அரேபிய இரவுகள்’ புத்தகம் சார்ந்து இன்னும் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?
அரேபிய இரவுக் கதைகளுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தனி கவனத்துக்குரியவை. ஆங்கிலத்தில் கிடைக்கும் புத்தகங்களில் வரையப்பட்டிருக்கும் வர்ண ஓவியங்கள் நம்மை அந்த மாய உலகத்துக்குள் உடனடியாகப் பிடித்துத் தள்ளிவிட்டுவிடும். தமிழில் அப்படியான ஓவியங்களோடு கதைகளைக் கொண்டுவர ஆசை. இப்போது வெளியான தொகுதிகளில் அது கால்வாசிதான் நிறைவேறியிருக்கிறது. இனிவரும் காலங்களில் கைதேர்ந்த ஓவியர் சேரும்போது அதுவும் சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
---
1001 அரேபிய இரவுகள்
தமிழில்: சஃபி
உயிர்மை பதிப்பகம்
அடையாறு, சென்னை-20.
தொடர்புக்கு: 044 48586727
விலை: ரூ.930 (2 பாகங்கள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT