Published : 17 Jul 2021 07:12 AM
Last Updated : 17 Jul 2021 07:12 AM

தமிழுக்கு வருகிறது ‘கருணாநிதி, எ லைஃப்’

தமிழுக்கு வருகிறது ‘கருணாநிதி, எ லைஃப்’

மூத்த பத்திரிகையாளரும் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வாசகர் ஆசிரியருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய ‘கருணாநிதி, எ லைஃப்’ என்ற தலைப்பிலான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆங்கில வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில், இந்த நூலின் தமிழாக்கத்தைத் தனது வ.உ.சி நூலகத்தின் வழியாக வெளியிடவிருக்கிறார் கவிஞர் இளையபாரதி. புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் மற்றொரு பதிப்பாளரான ‘சந்தியா’ நடராஜன்.

ஊரடங்கிலும் முடங்காத இலக்கிய உரையாடல்…

கோவையின் இலக்கிய மையம் என்று விஜயா பதிப்பகத்தைத் தயங்காமல் சொல்லலாம். எழுத்தாளர்கள், வாசகர்களின் சந்திப்புப் புள்ளி அது. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டி, தன்னை எப்போதும் ஒரு தீவிரமான வாசகராக மட்டுமே முன்னிறுத்திக்கொள்பவர் ‘விஜயா’ வேலாயுதம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு வாசகர் கூட்டம் வட்டமடித்தபடியே இருக்கும். ஒவ்வொரு நாளும் வாசகர்களுடன் தனது பொழுதுகளைச் செலவிட்டுவந்த வேலாயுதம், பொதுமுடக்க நாட்களில் வீட்டிலேயே தங்க நேர்ந்தாலும் அவர்களுடனான உரையாடலை நிறுத்திக்கொள்ளவில்லை. ‘விஜயா வாசகர் வட்டம்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் குறித்த தனது சிற்றுரைகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுவருகிறார். ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை, ‘சக்தி’ வை.கோவிந்தன், ‘முல்லை’ முத்தையா போன்ற பதிப்புலக முன்னோடிகளைப் பற்றியும் ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பிரபல எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்ட அவரது காணொளிகள் பிரபலமாகிவருகின்றன. விஜயா பதிப்பகத்தின் யூடியூப் சேனலிலும் இந்தக் காணொளிகளைப் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x