Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM
கவித்துவமான மொழியும், அறிவார்த்தத்தின் சொடுக்குதலும், வாசிப்பு சுவாரஸ்யமும் அபூர்வமாக இணைந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, கீழ்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஸ்டோர் வீடுகள் சார்ந்து ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கையும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு செழுமையான பகுதியும் அதன் சத்தங்களோடும் வாசனைகளோடும் நமக்குக் ‘கடலில் எறிந்தவை’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத் திடமாக நினைவுகூரப்படுகின்றன. முடிவற்ற அறிவுகளின் பின்னணியில், இன்னும் முடிவற்றதாக இருக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களை ஆராயும் போர்ஹேவை, கல்கியும் தேவனும் தி.ஜா.வும் லா.ச.ரா.வும் தற்செயலாக யுவன் சந்திரசேகரின் உலகத்தில் சந்திக்கிறார்கள்; வெற்றிலைச் செல்லத்தைப் பகிர்ந்துகொண்டு சுவாரஸ்யத்தோடு அவர்கள் உரையாடுகிறார்கள்.
உச்சி வெயில் அடிக்கும் மத்தியான மயக்கத்தில் ஒருவன் காணும் பகற்கனவுபோல்தான் யுவனின் கதைகள் தொடங்குகின்றன. அந்தக் கனவு பெரும்பாலும் மதுரையில் தொடங்கி வரலாறு, அரசியல், தேசங்கள், நிலப்பரப்புகள், காலங்கள், துயர முனைகளுக்கு வாசகரை இழுத்துச் செல்வதாக உள்ளது. தொகுப்பின் முதல் கதையான ‘சாம்பல் நிற வேளை’யின் உள்ளடக்கம் என்பது, ஒரு சாதி ஆணவக்கொலை நிகழ்வு. மதுரையில் தொடங்கி மத்திய பிரதேசம் வரை பயணிக்கும் கதை இது. தீர்க்க முடியாத மர்மத்தின் இருட்டில் தொலைத்த இணையைத் தேடி அலையும் காதலின் துர்விதியை வேறுவேறு புள்ளிகளிலிருந்து நினைவுகூர்வதுதான் இந்தக் கதையின் வசீகரம். இந்தக் கதை இந்திய நிலப்பரப்புகளுக்குள் ஏன் நீள வேண்டும்? இந்தியா முழுவதும் ருக்மணியக்கா சந்திக்கும் அந்தச் சாம்பல் நிற வேளைகள் இன்றும் தீவிரமாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதாலா?
தொகுப்பின் கடைசிக் கதைக்கு முந்தைய கதையான ‘அடையாளம்’ கதையிலும் இலங்கை தேவாலயக் குண்டுவெடிப்பில் கதை தொடங்குகிறது. ஆதிவராஹன் கதாபாத்திரம் வழியாக உலகின் வெவ்வேறு மூலைகளில் சனாதனம், வைதிகம், அடிப்படைவாதத்தின் பெயரால் மனிதர்கள் தற்கொலை மூர்க்கத்துடன் சக உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் கதைகளாகத் தொகுக்கப்பட்டு, நம் முன் வைக்கப்படுகின்றன. ஆலய கோபுரத்தின் நிழல் இருட்டிலிருந்து கதை சொல்லும் லா.ச.ரா.வின் கதாபாத்திரங்களில் ஒன்றாகத் தோற்றம் கொடுக்கும் ஒருத்தி, யுவனின் கதைப்பொய்கையிலிருந்து ‘வென்றவள்’ ஆக எழுகிறாள். சமீபத்தில் படித்த மந்திரத்தன்மை வாய்ந்த கதைகளில் ஒன்று இது. ‘புழுதிப்புயல்’, ‘தந்தையொடு’ இரண்டும் திகைப்பைத் தரும் கதைகள்.
வெவ்வேறு கதாபாத்திரங்களின் நினைவுகூர்தல்களாக இருக்கும் இந்தக் கதைகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் யுவனின் கதைக் கண்ணாடியில் இரு பரிமாணம் கொள்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது; ‘ஒரு நாளும் இன்னொரு நாளும்’ கதையில் தந்தை இறந்ததற்கு மறுநாள் அவர் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த மணல்கடிகையைக் கவிழ்த்துப் பார்த்திருந்தால் மந்தகதியில் உதிரும் ஏதோ ஒரு துகளில் அவர் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பு உண்டோ என்ற மயக்கம் மகனுக்கு ஏற்படுவதைப் போல. வரலாறும் அரசியலும் தத்துவமும் அறிவியலும் கலையும் காதலும் அநீதியும் கொடுங்கோன்மைகளும் தீர்க்கவே இயலாத மானுடத் துயரங்களும் வெறும் கதைகள்தானோ என்று தோன்றும் மரத்த உணர்வை, நினைவுகளைப் பெருக்குவதன் வழியாக ஏற்படுத்துவதுதான் யுவன் சந்திரசேகர் என்னும் கதைசொல்லியின் நோக்கமோ?
ஒரு மத்தியமர் என்று சொல்லத்தக்க இந்திய, தமிழ் சாதாரணன் ஒருவன்தான் இந்தக் கதைகளின் மையம். அசாதாரணம், அற்புதம், அதீதம், அமானுடம், அசாத்தியம் என்று சொல்லத் தகுந்த அனுபவங்களைச் சந்திக்கிறான் அல்லது சாட்சியாகிறான். யுவனின் உலகத்தைப் பொறுத்தவரை கதைதான் விதிபோன்ற சரடாக எல்லாவற்றையும் இணைக்கிறது. யுவனின் கதைகளில் வரும் அந்தச் சாதாரணன்தான், கதையின் விதியால் குறைந்தபட்சமாகப் பாதிக்கப்படுபவனாக அல்லது தப்பித்தவனாக இருக்கிறான்; அதனால்தான், அவன் கதையாகாமல் இத்தனை கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
சென்ற நூற்றாண்டில் தமிழ் வெகுஜன சஞ்சிகைகளில் எழுதப்பட்ட கதை உலகமும், சிறுபத்திரிகை சார்ந்து எழுதப்பட்ட புனைவுகளும் இணக்கமாகச் சந்திக்கும் இடம் யுவன் சந்திரசேகருடையது. அவர் தனது கதைகள் வழியாக நீதியையோ தரிசனத்தையோ உண்மையையோ விமர்சனத்தையோ, குறைந்தபட்சம் நம்பிக்கையையோகூட வைப்பதில்லை. இந்தக் கதைகளெல்லாம் நினைவுகளும் கனவுகளும் மர்மங்களும் கலந்த வெறும் விளையாட்டு; இந்தக் கதைகளெல்லாம் வெறும் ஏமாற்று; துயரபாவத்தில் இருந்தாலும் காவியத்தனத்துடன் தோன்றினாலும் இவையெல்லாம் வெறுமனே கதைகள்; கதைகள் தவிர வேறில்லை. இதை வக்கணையாக வாசகர்களிடம் ஒவ்வொரு முனையிலும் உணர்த்தியும் சொல்லியும் விளையாடுபவர் யுவன். ஒரு நிகழ்ச்சியை விவரித்துவிட்டு, அதற்குச் சாத்தியமுள்ள வேறுவேறு காரணங்களைச் சொல்லிவிடுவதோடு, ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் இருக்கும் வேறுவேறு பார்வைக் கோணங்களையும் நம் முன்னர் வைத்துவிடுகிறார். இப்படி மடிப்பு மடிப்பாகத் தொடரும் இவரின் கதைகளால் பீடிக்கப்பட்ட வாசகர், வெளியிலும் கதைகளின் விதியில் உலகம் இயங்குவதாக, செயலற்று மயங்கக்கூடும்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
----------------------
கடலில் எறிந்தவை
யுவன் சந்திரசேகர்
எழுத்து பிரசுரம்
அண்ணா நகர்,
சென்னை - 40.
தொடர்புக்கு: 98400 65000
விலை: ரூ.260
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT