Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM
சி.மோகன், பறத்தலின் சுகத்துக்கெனவே வானலையும் ஒரு பறவையைப் போல. கவித்துவம் தேடும் இயக்கமே அதற்கு இரையும் இளைப்பாறலும் ஆகிறது. சகல பொழுதுகளிலும் அதன் நீள் இறக்கைகள் காற்றாடிக்கொண்டிருக்கின்றன. தகிப்புக்குச் சாந்தமளிக்கும் சாமரம்போல அவற்றில் மௌனத்தின் நிதான அசைவுகள் புலனாகின்றன. பாலையிற் பயின்ற காற்று, தான் கெட்டிப்பட்டு உறைந்ததாக அறிவித்துக் குதூகலிக்கும். வண்ணங்களை உதறி, வெறும் கயிறெனத் திரிந்த வானவில் ஒரு பொறியெனக் காத்திருக்கும். நட்சத்திரங்கள் எரிகல் துகள்களாக உச்சியில் வீழ்வதும் உண்டுதான். இதற்கு அப்பால் ஒன்றுமில்லை; முடிவு இது என்று இருள் தன் திரை விரித்துத் தடுப்பதும் நடக்கும். ஆயினும், அந்தத் தனிப்பறவை துயரக் களிப்பிலும் மகிழ்வின் வதையிலும் ஆன்ம மெருகேறி அந்தரத்தில் அடைந்த அனுபூதிகளை நாம் அறியத்தான் செய்கிறோம். இது அந்தப் பறவை தன் இறகுகள் எனக் காலகாலமாக வரித்த ‘கலை நம்பிக்கை’ எனும் ஒன்றால்தான் சாத்தியமாயிற்று.
சி.மோகன் எந்தக் கலை நம்பிக்கையின் காரணமாகத் தமிழின் நவீன இலக்கிய ஆசான்களில் ஒருவராக உருவாகியிருக்கிறாரோ, அந்த நம்பிக்கையின் தீர்க்கதரிசனமாகவும் அவரது இருப்பு அமைந்திருக்கிறது. தன்னியல்பான அந்தக் கலாபூர்வ இருத்தல் தன் கொடையானதை அவர் அறிந்திருக்க மாட்டார். அவரது சாராம்சம் என்றும் அவரை ஒளிரச் செய்கிறது; அவர்பால் ஈர்க்கிறது.
இவரது கலை நாளக் கற்றைகளில் உலவி உயிரளிக்கும் இலக்கியத்தோடு, ஓவியம் – ஓவியர்கள் மீதான தீவிர நாட்டமும் பரவசம் கொண்டு பிணைந்திருக்கிறது. இதுதான் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ எனும் நாவலாயிற்று. இந்த நாவல், மறைந்த ஓவியர் ராமானுஜத்தைப் பற்றியது. ஒரு ஓவியனைக் குறித்து சி.மோகன் தன் மனமொழியின் நிறங்கள் கொண்டு தீட்டியிருக்கும் ஓவியம் இது. அரியதொரு ஓவியரின் வாழ்வு, குணாம்சம், மகத்தான மேதமை தங்கிய அந்தப் பலவீன மனிதர் மீது சமூகம் காட்டும் ஏளனப் புறக்கணிப்பு, அனைத்தையும் மிகைத்து, அவர் கலைகொண்டு உன்னதமேறிய இறுமாப்பின் விவரிப்புகளெல்லாம் நாவல் உலகு, முன் அறிந்திராதது; தமிழ் ஓவியக் கலை வெளியிலிருந்து இலக்கியம் விளைத்துக் காட்டிய அபூர்வ மலர்.
‘ரகசிய வேட்கை’ எனும் சி.மோகனின் சிறுகதைத் தொகுப்பு, இன்றும் என் வாசிப்பில் ஆர்வம் தருவதாயிருக்கிறது. கதைகளுக்கான புது வழிகளைக் கண்டடைதலுக்கான தீவிர எத்தனங்கள் அவை. எழுதுவதற்கு முன்பே சில கதைகளை ‘முன்றில்’ புத்தகக் கடையில் அமர்ந்து அவர் சொல்லும்போது சம்பவிக்கும் மாய உலகில் வசியம் செய்யப்பட்டவர்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். ஆயினும், அந்தக் கதைகளைவிடவும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என் நிறைந்த நேசம் பெற்றதாகிறது. தான் ஊடுருவும் கலைகளில் மோகன் அதிக வாஞ்சை கொண்டிருப்பதும் நாவல் வடிவத்தின் மீதுதான். ‘பிற கலைகள் தரிசனத்தைக் காண யத்தனிக்கின்றன. அங்கே சுயம் உச்சத்தை எட்டுகிறது. நாவல் மட்டுமே அதற்கு அடுத்த கட்டமாக உலகியலை நோக்கி வாழ்வை, தனி மனிதனின் இருத்தலை விஸ்தரிக்கிறது’ என்கிறார் அவர்.
‘தண்ணீர் சிற்பம்’, ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ எனும் அவரது கவிதைத் தொகுப்புகளின் கவிதைகள், எளிமையான வாசிப்பு அணுகுதலில் ஒத்திசைபவை. எளிமையாக வெளிப்பட்டிருப்பதாலேயே பல கவிதைகள் அதைத் தன் ஒற்றைக் குணமாகக் கொண்டிருப்பதில்லை. ‘மனவியல் அறிந்த மகத்தான கவிஞராக விளங்குகிறார் சி.மோகன்’ என்கிறார் விக்ரமாதித்யன். ‘மாயக் கவித்துவம்’ என்று இவரது கவிதை ஒன்று உண்டு. அதில் இவர், மலைப்பிரதேசக் கனவுக் குடிலுக்கு வெளியில் கிடக்கும் கட்டிலின் மீது ஜென் துறவியைப் போல அமர்ந்து, ஒன்றுக்கான எதிர்வினையைப் பிறிதொன்றில் தரிசித்துக்கொண்டிருப்பார். இந்தப் பண்பின் மரபணு, அவரது பல கவிதைகளின் தோற்றுவாயாக ஆகியிருக்கிறது. ஏறத்தாழ எண்பது கட்டுரைகள் கொண்டது, ‘சி.மோகன் கட்டுரைகள்’ தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் அகப்படுத்தியிருக்கும் பரப்பு மிகவும் விசாலமானது. படைப்பிலக்கியம் குறித்தும், ஓவியம் – சிற்பம் – இசைத் துறைகளின் பிரகாசக் கோபுரங்களான ஆளுமைகளைக் குறித்துமான பெருநூல். வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்குமென, அவர் தன் பெருவாழ்விலிருந்து சேர்த்திருக்கும் கலையனுபவ ஆவணம். கலை நுகர்வில் ஆழ்ந்த நெடும் பயணத்தின் திரட்டு இது.
மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் உச்சங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படுவது, இவர் மொழிபெயர்த்த, ஜியாங் ரோங் எழுதிய சீன நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. தமிழ் மொழியாளுமைக்காகவும் மிகப் பெரிதும் சிலாகிக்கப்பட்டது இது; இந்தத் துறையில் மிகச் சிறந்த முன்மாதிரியாக ஸ்தானம் பெற்றிருக்கிறது. நவீன மனிதனின் வன்மப் பேராசையால் வேரற்றுப்போனதொரு தொல்குடி வாழ்வும் அழிந்துபட்ட இயற்கையும் வாசிப்பில், மனச் சருமம் உரித்து கசியச் செய்யும் ரத்தம் பிறகு ஒருபோதும் உலர்வதில்லை.
சி.மோகனின் உரையாடலானது பகடியும் தமாஷும் தீட்சண்ய லாகவமும் கொண்டது. வெறுமைகளில் காத்திரத்தை மாற்று வைத்துப்போகும் அவரது வார்த்தைகளால் சுடர் கொண்டவர்கள் என்னைப் போலப் பலருண்டு. பலரின் நூல்களில் அவரது கருத்துகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. பலரின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கின்றன. சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ முதலிய நூல்களின் உருவாக்கத்திலும் இவரது கையும் கருத்தும் ஒருமித்திருக்கின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, விமர்சனம், கட்டுரை, ஓவியம், திரைப்படம், மொழிபெயர்ப்பு, உடையாடல், நூல் பதிப்பு, சிறுபத்திரிகை ஆகியவற்றில் தீவிரமாக இயங்கிய சி.மோகனுக்கு அகவை எழுபது தொடங்குகிறது. இதுவரையிலான அவரது வாழ்வானது, கலை செழித்துக் கனிந்ததாயிருந்தது. இதுவே இன்னும் வெகுகாலம் தொடர வேண்டும்.
- யூமா வாசுகி, கவிஞர், நாவலாசிரியர். தொடர்புக்கு: marimuthu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT