Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

கலை வழி வாழ்வு

கலையையே தனிப்பெரும் அறமாகவும், அது வெளிப்படும் ஊடகமாகக் கலைஞனையும் பார்த்த விமர்சகர்களில் சி.மோகன் குறிப்பிடத்தகுந்தவர். வாழ்க்கையின் அடிப்படைகளை, மெய்மையை, மொழிவழி விசாரிக்கும் இலக்கியத்தோடு பிற கலை வடிவங்களான நவீன ஓவியம், சினிமா போன்றவற்றையும் சேர்த்துக் காண்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு தலைமுறை தமிழ் வாசகர்களைத் தூண்டிய எழுத்துகள் இவருடையவை.

மாணவப் பருவத்திலேயே கணித ஆசிரியராக டூட்டோரியலில் பாடம் எடுத்த எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சாகச ஆளுமையும் படைப்புகளும் சி.மோகனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு பெரும் படைப்பான ‘புயலில் ஒரு தோணி’யை எழுதிவிட்டு, மதுரையின் ஒரு மூலையில் எழுத்தாளன் என்ற அடையாளத்தையே அழித்துக்கொண்டு பிழைதிருத்துபவராக வாழ்ந்த ப.சிங்காரமும், நேதாஜியின் படையில் சேர்ந்து தனிப்பட்ட சௌகரியங்கள் அனைத்தையும் துறந்து உயிரையும் விடும் சிங்காரத்தின் கதாபாத்திரமான பாண்டியனின் லட்சிய மனோபாவமும் சி.மோகனை வசீகரித்திருக்க வேண்டும். மறதியிலும் புறக்கணிப்பிலும் புதைந்திருக்க வேண்டிய நிலையில் ப.சிங்காரம் எழுதிய நாவல்களை, பெரும் விமர்சகர்களும் படைப்பாளிகளும் புறக்கணித்த ஒரு காலகட்டத்தில், திரும்பத் திரும்ப நினைவூட்டி, ‘புயலிலே ஒரு தோணி’யையும் ‘கடலுக்கு அப்பால்’-ஐயும் தமிழில் நடந்த சாதனைகளாக நிலைநிறுத்தியவர் சி.மோகன்.

மறைந்த ஓவியக் கலைஞர் ராமானுஜத்திடம் கலை மேதமையும் சாதாரண அன்றாட வாழ்க்கையில் பொருந்திப் போகவே முடியாத அவரது பேதமையையும் ஒருங்கே செயல்பட்ட தன்மையை சி.மோகன் ஒரு நாவலாகவே எழுதிப் பார்த்துள்ளார். நேசத்தின் வழியில் விளைவுகளைப் பார்க்காமல் துணிகரமாகச் செல்லும் தி.ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்களிடம் காணப்படும் மடத்தனம் மீதான அரிய அவதானங்களை சி.மோகன் விமர்சகராக வைத்துள்ளார். ஃப்ளாபெரின் தாக்கம் வழியாக மடத்தனத்தை நேர்மறையான பண்பாகப் பார்க்கிறார். தன்நலன், பிரதிபலன் கருதாத லட்சிய வேட்கையும் அர்ப்பணிப்பும் அருகிவரும் காலகட்டத்தில் கலையில், காதலில், போரில் இந்த அம்சங்கள் நீடித்திருப்பதாகவும், மனித குலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள, இழந்த மகத்துவத்தை மீண்டும் பெற இந்த மடத்தனம் அவசியம் என்ற முடிவுக்கு வருகிறார்.

நாவல் என்பது நீளமான கதை என்ற எண்ணமே சிறு வட்டமாக இருந்த நவீன வாசகர்களிடமும் நிலைபெற்றிருந்த சூழலில், தத்துவத்தோடு புனைவு மேற்கொண்டிருந்த துண்டிப்பைச் சரிசெய்யும் ஊடகம் நாவல் என்ற வாதத்தின் மூலமாக, நாவல் என்னும் தனிப்பெரும் வடிவத்தைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் சி.மோகன். 1980-களின் இறுதியில் ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் நாவல் வடிவம் சார்ந்த பிரக்ஞையுடன் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்கள் என ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, ‘புயலிலே ஒரு தோணி’, ‘மோக முள்’ நாவல்களைக் குறிப்பிட்டு ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். மகத்தான நாவல் இனிதான் வர வேண்டும் என்று சொன்ன கட்டுரை அது. நெடுங்கதையும் நாவலும் எங்கே வேறுபடுகிறது என்பதை முன்வைத்து அவர் தொடங்கிய விவாதத்துக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயமோகன் எழுதிய ‘நாவல்’, அந்த வடிவம் சார்ந்து பரவலான விவாதத்தையும் புரிதலையும் தாக்கத்தையும் உருவாக்கியது. நாவல் தொடர்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வை அவர் பூர்த்திசெய்யவில்லை. நீதிநூல்களை நாவல்களாய் எழுதிய மு.வரதராசனார் துணைவேந்தராக இருந்த காலகட்டம் அது. டி.எச்.லாரன்ஸ், தஸ்தயேவ்ஸ்கி, ஃப்ளாபெர், காஃப்கா, மிலன் குந்தேரா வழியாக நாவல் வடிவம் சார்ந்த கருத்தை விரிவுபடுத்தியபடி இருக்கிறார் சி.மோகன். சினிமாபோல, சிம்பனி இசை வடிவம்போல தனிக் கலைவடிவம் நாவல் என்கிறார்.

1990-களின் மத்தியில் பாவைச்சந்திரன் ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த ‘புதிய பார்வை’ இதழில் தொடராக வெளிவந்த ‘நடைவழிக் குறிப்புகள்’ தொடர் வழியாகத்தான், மாணவப் பருவத்தில், எனக்கு சி.மோகனின் பெயர் பரிச்சயமானது. தமிழ்ச் சமூகத்துக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து, தமிழ்ச் சமூகம் மறந்துபோன வெவ்வேறு ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் தொடர் அது. ஜே.சி.குமரப்பா, ஆனந்த குமாரசாமி போன்றவர்களின் பெயர்களும் அவர்களது பணிகளும் எனக்கு மூட்டமாக அறிமுகமாயின. சினிமா என்ற ஊடகத்தில் இயங்கிய தத்துவவியலாளரும் கலைஞனுமென்று சொல்லத்தக்க ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்காவெஸ்கியின் சினிமாக்களும் சிந்தனைகளும் மோகன் வழியாகவே எனக்கு அறிமுகமாயின. அவர் எழுதிய ‘காலம் கலை கலைஞன்’ நூல், ஒரு சமூகத்துக்குக் கலைப் படைப்புகளும் கலைஞனும் ஏன் அத்தியாவசியமானவர்கள் என்பதைச் சொல்வதோடு முக்கியமான சர்வதேச, தமிழ்ப் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் புத்தகமாகும். வாசிப்பும், அடிப்படைக் கலை ரசனை உணர்வும் கல்விக்கூடத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இன்று உருவாகியிருக்கிறது. அந்த வகையில், ‘காலம் கலை கலைஞன்’, கல்லூரிகளில் பாடநூலாக வைக்கப்பட வேண்டியது.

இலக்கிய விமர்சகர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், சிறந்த புத்தக வடிவமைப்பாளர், செம்மையாக்குநர், சிறுகதையாளர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல முகங்களையும் கொண்டவர் சி.மோகன். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள், தமிழ்ச் சூழலின் தேவை, இடைவெளிகளைக் கருதி மொழிபெயர்க்கப்பட்டவை. ஆங்கிலம் தெரியாத வாசகர் ஒருவர் உலக இலக்கியத்தின் ஒரு கனவுப் பிரதேசத்தை அவர் சிறுகதைகள் வழியாக அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும். புத்தகங்கள் வடிவமைப்பில் சி.மோகன் உருவாக்கிய அடிப்படைகளும் அழகியலும் கடந்த இருபதாண்டுகளில் நாம் காணும் தமிழ்ப் புத்தகங்களின் தரவரையறையாக மாறியுள்ளன.

எழுத்தும் இலக்கியச் செயல்பாடுகளும் ஒரு தொழில்முனைவின் தன்மையை எட்டி சுயபரிசீலனையற்ற அகங்காரமாகவும் பகட்டாகவும் மைய நீரோட்டத்தில் உள்ள அதிகாரம், புகழை நோக்கிச் செல்லும் வழிகளில் ஒன்றாகவும் தற்காலத்தில் ஆகியுள்ளன. கலையின் அடிப்படைப் பண்பான எதிர்ப்பு மனோபாவத்துடன் தனித்தும் பசித்தும் விழித்தும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் மதிப்பீட்டுத் தொடர்ச்சி சி.மோகன்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x