Published : 26 Dec 2015 11:17 AM Last Updated : 26 Dec 2015 11:17 AM
புத்தகப் பரிசுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்வோம்!
தமிழகத்தில் பதிப்புத் துறை ஸ்தம்பித்திருக்கிறது. பல கோடி ரூபாய் புத்தகங்களைச் சூறையாடியதுடன் மக்களின் வாங்கும் சக்தியையும், ஆர்வத்தையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது வெள்ளம்.
பெரும் பதிப்பாளர்களே கையைப் பிசைந்து நிற்கும் சூழலில் சிறுபதிப்பாளர்களின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. நூற்றுக்கணக்கான பதிப்பகங்களை நம்பி ஆயிரக் கணக்கான எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இருக்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத சூழல் இது. ஆனால், இந்த நிலையை அப்படியே புரட்டிப்போட நம்மால் முடியும். இந்தப் புத்தாண்டு ஒரு நல்ல வாய்ப்பு.
ஓர் அர்த்தமுள்ள விளையாட்டுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்குவோம். குறைந்தது ஆளுக்கொரு புத்தகம் வாங்குவது. புத்தாண்டு அன்று நாம் வீட்டுக்கு வெளியே வீதியில் முதலில் யாரைச் சந்தித்துப் பேசுகிறோமோ, அவருக்கு அந்தப் புத்தகத்தைப் பரிசளிப்பது. புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது. வசதியிருந்தால், அன்று சந்திக்கும் எல்லோருக்கும்கூடப் புத்தகங்கள் அளிக்கலாம். இதை ஒரு விளையாட்டாக்குவோம்; இயக்கமாக்குவோம். நீங்கள் பரிசளித்த புத்தகங்கள், தருணங்களைப் புகைப்படத்துடன் ‘தி இந்து’வுக்கு அனுப்புங்கள்.
நமக்கு அறிவூட்டும் துறையின் கண்ணீரைத் துடைப்போம். புத்தகப் பரிசுடன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோம்!
WRITE A COMMENT