Published : 19 Jun 2021 05:17 PM
Last Updated : 19 Jun 2021 05:17 PM
வரலாறு என்பது மன்னர்களையும், பெரும் தலைவர்களையும் மட்டும் கொண்டதல்ல. அது நம்மைப் போன்ற சாமானியர்களையும் உள்ளடக்கியது. பெரும் மன்னர்களின் வாழ்வில் கற்பனை கலந்து, சுவாரசிய சம்பவங்களைப் பெரும் ஆரவாரத்துடன் அடுக்கி, அதைக் காவியமாகப் படைப்பது எளிது. ஆனால், சாமானியன் ஒருவனது வாழ்வை எந்தக் கற்பனையுமில்லாமல், அதன் சாதாரண நிகழ்வுகளை, எவ்வித ஒப்பனையும் இன்றி மிக எளிய வார்த்தைகளில் காவியமாகப் படைப்பது அவ்வளவு எளிது அல்ல. ஆல்பெர் காம்யூ ‘முதல் மனிதன்’ நாவலில், வர்ணனையற்ற தன்னுடைய இயல்பான எழுத்தின் மூலம் அதை எளிதாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
இது ஒரு மாயாஜாலம்
1913இல், ஒரு பனிக்காலத்தில் ஒரு கனவானின் எந்நேரத்திலும் பிரசவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் கர்ப்பிணி மனைவியுடனான குதிரை வண்டிப் பயணத்தில் தொடங்குகிறது இந்தக் கதை. வெகு சில நிமிடங்களில் நம்மையும் அந்த வண்டி ஏற்றிக்கொள்கிறது. அவளின் வலியையும், அவஸ்தையையும் பார்த்து அவள் கணவனுடன் சேர்ந்து நாமும் பதைபதைக்கிறோம். அவனுடன் சேர்ந்து நாமும் வண்டியோட்டும் அந்த அரேபியனை இன்னும் வேகமாகச் செல்லுமாறு கடிந்து கொள்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியாவின் அடர்ந்த இருட்டில், ஆளரவமற்ற வழியில் செல்லும் குதிரை வண்டியில் நம்மை ஏற்றிக்கொள்ளும் இந்தக் கதை, அதை வாசித்து முடித்த பின்னரும் நம்மை இறக்கிவிட மறுக்கிறது. இது ஒரு மாயாஜாலம். அதை காம்யூ எந்த மெனக்கெடலும் இன்றி, மிக இயல்பாக நிகழ்த்தி நம்மை பிரமிக்க வைக்கிறார்.
தந்தையை நோக்கிய பயணம்
வேலை நிமித்தமாக சொலபிரினோ என்கிற குக்கிராமத்துக்கு வரும் அந்த இளம் கனவானின் பெயர் ஹென்றி கோர்மெரி. அவன் மனைவியின் பெயர் லூசி. அந்த கிராமத்தை அவர்கள் அடைந்த சில நிமிடங்களில் பிறந்த குழந்தையின் பெயர் ழாக் கோர்மெரி. ழாக் கோர்மெரிதான் நாயகன். அவனது வாழ்வும், அவனின் பால்ய நினைவுகளும், அவனுடைய தந்தை பற்றிய தேடலும், அவனுள் தாக்கம் ஏற்படுத்திய மனிதர்களைப் பற்றிய எண்ணங்களுமே இந்த நாவல்.
1913இல், நாயகனின் (ழாக் கோர்மெரி) பிறப்புடன் முடிகிறது முதல் அத்தியாயம். அடுத்த அத்தியாயம் 1954இல், 41 வயதில் பிரான்ஸிலிருந்து தொடங்குகிறது. அவனது ஒரு வயதுக்குள், அவனையும் பேச முடியாத அவனுடைய தாயையும் தவிக்கவிட்டு அவன் தந்தை பிரான்ஸில் ஒரு போரில் மடிந்ததை நாம் அறிய முடிகிறது. தந்தை பற்றி அறிவதற்காக, அவரின் கல்லறைக்குச் செல்கிறான். அதில் 29 வயதில் தந்தை மாண்டதைப் படித்தது அவனை மிகவும் பாதிக்கிறது. 29 வயதிலேயே தூங்கும் தந்தையைவிட 41 வயதான தான் இப்பொழுது வயதானவன் என்று நினைக்கிறான் (இந்த வாக்கியம் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாத ஒன்று).
மாறாத உணர்ச்சிகள்
அல்ஜீரியாவில் வறுமையை மட்டும் வளமாகப் பெற்ற சொந்த ஊரில் வாழும் பேச முடியாத தாயைக் காணச் செல்கிறான். ஊருக்கு வந்தவுடன், அவனுள் நிரம்பி வழியும் பால்ய நினைவுகள் மீதிக் கதையை ஆக்கிரமிக்கின்றன. கொடிய வறுமையில் மகிழ்வுடன் கழியும் பால்ய பருவம், அவன் நண்பர்கள், பால்ய விளையாட்டுகள், அவனது பாட்டியின் கண்டிப்பு, பேச முடியாத மாமா எட்டினின் அன்பு, அவர் மீதான வியப்பு, ஆசிரியர் பெர்னார்டின் பரிவு, லிசியில் அவனது படிப்பு என்று விரிந்து பரவும் நினைவுகள் நம்முள் ஏற்படுத்தும் அந்யோன்ய உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. யுகங்கள் மாறினாலும், கண்டங்கள் மாறினாலும், மனிதர்களின் வாழ்வியல் மாறினாலும், வாழ்வோடு பின்னி இழையோடும் உணர்ச்சிகள் ஒருபோதும் மாறுவதில்லை என்பதற்கு இந்த அந்யோன்ய உணர்வே சான்று.
சிறார்களின் எதிர்பார்ப்பற்ற வாழ்வையும், அவர்களின் மட்டில்லா மகிழ்வையும் இதைவிடத் தத்ரூபமாக யாராலும் விவரிக்க முடியாது. லூசியைப் பற்றிச் சொல்லாமலே லூசியைப் பற்றி நம்மை உணரவைப்பது வியப்புக்குரியது. அன்னையின் பார்வைக்காக ஏங்குவது, இரவில் தூங்காமல் தெருவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் அன்னையைப் பார்த்தபடியே தூங்குவது, மாமாவுடனான அவனது உறவு, அவருடன் வேட்டைக்குச் செல்வது, பெர்னார்டின் மீதான மரியாதை, அவரின் அங்கீகாரத்துக்காக மகிழ்வது போன்றவை எல்லாம் நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாத பக்கங்கள்.
காம்யூக்கு மட்டுமே இது சாத்தியம்
சுயம் குறித்த தேடலில், தன்னுடைய தந்தையைப் பற்றி அறிய முயலும் ழாக் கோர்மெரி, இறுதியில் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை என்று உணர்கிறான். தன்னுடைய சுய அனுபவங்களில் நல்லதும் கெட்டதும் இருந்தாலும், தந்தை இல்லாமல், யார் வழிகாட்டலுமின்றி, எந்தப் பாரம்பரியமும் இன்றி, தானாகவே, சுய முயற்சியில் வறுமையை வென்று பிரான்ஸில் வாழ்வதால் தானும் முதல் (ஆதி) மனிதன் என்று அவன் நினைப்பதுடன் நாவல் நிறைவுபெறுகிறது. காம்யூவின் எழுத்தில் கற்பனையும் வர்ணனையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்ச்சிகள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படுமாறு எழுதியது ஆல்பெர்ட் காம்யூக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT