Published : 19 Jun 2021 06:28 AM
Last Updated : 19 Jun 2021 06:28 AM

நூல்நோக்கு: இலக்கியப் பார்வைகளின் அஞ்சல் ஓட்டம்

காலவெளிக் கதைஞர்கள்
தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்,
சாகித்ய அகாடமி வெளியீடு
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொடர்புக்கு:
044 - 24311741
விலை: ரூ.300

நவீன சிறுகதை இலக்கியத்தில் சாதனைகள் படைத்த இருபது எழுத்தாளர்களைப் பற்றி தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்களும் எழுத்தாளர்களுமான பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார் தமிழ்ப் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான சுப்பிரமணி இரமேஷ். திறனாய்வுத் துறையில் ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி என்ற வகையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

‘காலத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகள்’ என்ற தலைப்பிலான தொகுப்பாசிரியரின் முன்னுரை, தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றையும் சுருங்கச் சொல்லி, இருபது எழுத்தாளுமைகளின் பங்களிப்புகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. நவீன இலக்கியவாதிகள் கவனத்துடன் பேசத் தவிர்க்கும் கந்தர்வனும் ஜெயந்தனும்கூட இந்த இருபது பேரில் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார்கள் என்பது தொகுப்பாளரின் பாரபட்சமின்மையைக் காட்டுகிறது.

இத்தொகுப்பில் ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகளைப் பற்றி சுந்தர ராமசாமியும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளைப் பற்றி அரவிந்தனும் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. க.நா.சுப்ரமண்யத்தின் கதைகளைப் பற்றி அசோகமித்திரனும், அசோகமித்திரனின் கதைகளைப் பற்றி க.மோகனரங்கனும் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன. இலக்கியத்தைப் போலவே அது குறித்த விமர்சனப் பார்வைகளும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கைமாறிச் செல்லும் அஞ்சல் ஓட்டமாகவே இதைப் பார்க்க முடிகிறது.

விமர்சகர் என்ற பிரபல்யம், க.நா.சு.வின் எழுத்தாளர் முகத்தை மறைத்துவிட்டிருக்கலாம் என்று அனுமானிக்கிறார் அசோகமித்திரன். கூடவே, க.நா.சு.வைப் போலவே அவரது கதைகளும் மாந்தர்களும் இந்தியத் தத்துவங்களின் சரடுகளால் இணைக்கப்பட்டவர்கள் என்ற பார்வையை முன்வைக்கிறார். ‘எதையுமே உரத்துக் கூறுவது அவருடைய மதிப்பைப் பெறுவதில்லை. அவரும் எதையும் உரத்துக் கூறுவதில்லை’ என்று க.நா.சு. பற்றிய வார்த்தைகள் அசோகமித்திரனுக்குமே பொருந்தக்கூடியதுதான். தண்ணீர்க்கடியில் மலையாகி நிற்கும் பனி, தண்ணீருக்கு மேல் சிறு கட்டியாக முகம் காட்டுவதுபோன்ற க.நா.சு.வின் ‘ஐஸ்பெர்க்’ பாணி எழுத்தையே அசோகமித்திரனிடம் பார்க்க முடிகிறது. ‘துளிகளில் நிறையும் முழுமை’ என்பதே அசோகமித்திரன் பற்றிய கட்டுரைக்கு க.மோகனரங்கன் வைத்திருக்கும் தலைப்பு. ஆழமான உள்ளோட்டங்கள் கொண்ட நடுக்கடலின் அமைதியை உணரத் தருபவை அவருடைய கதைகள் என்கிறார் க.மோகனரங்கன். இதே தன்மையை க.மோகனரங்கனின் கவிதைகளிலும் பார்க்க முடிகிறது. ‘நாலுக்கு ஒன்று’ என்ற அசோகமித்திரனின் கதைத் தலைப்பைக் கொண்டே அவரது கதைகளைப் பற்றிய அழுத்தமான மதிப்பீட்டையும் ஆர்ப்பாட்டமில்லாமல் வாசகர்களுக்குக் கடத்திவிடுகிறார் க.மோகனரங்கன்.

தொகுப்பாசிரியர் எழுதியிருக்கும் கட்டுரை ஜி.நாகராஜனைப் பற்றியது. பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்திய கதைகளே ஜி.நாகராஜனின் அடையாளமாக ஆகிவிட்ட நிலையில், அதிகார மையங்களால் சாமானியர்கள் எப்படி ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதை விவரிக்கும் ‘ஓடிய கால்கள்’, ‘பூவும் சந்தனமும்’ ஆகிய கதைகளை உதாரணம்காட்டி, அவரை மறுவாசிக்கத் தூண்டியிருக்கிறார் சுப்பிரமணி இரமேஷ். க.நா.சு.வின் கதைகளிலிருந்து அசோகமித்திரன் சுட்டிக்காட்டும் ‘சோதனை’ கதையும்கூட அதிகார மையங்களை நோக்கிய இப்படியான ஒரு அறச்சீற்றம்தான்.

புதுமைப்பித்தனைப் பற்றி வீ.அரசு, கு.ப.ராஜகோபாலனைப் பற்றி பெருமாள் முருகன், சி.சு.செல்லப்பாவைப் பற்றி சு.வேணுகோபால், கு.அழகிரிசாமியைப் பற்றி கல்யாணராமன், ஆதவனைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி என்று பேராசிரியர்களின் கட்டுரைகளும் உண்டு. மௌனி குறித்து பிரமிள், கிருஷ்ணன் நம்பி குறித்து நகுலன், தி.ஜானகிராமன் குறித்து சுகுமாரன், எம்.வி.வெங்கட்ராம் குறித்து ரவிசுப்பிரமணியன், ஆர்.சூடாமணி குறித்து ஷங்கர்ராமசுப்ரமணியன், ஜெயந்தனைக் குறித்து கவிதைக்காரன் இளங்கோ, கோபிகிருஷ்ணனைக் குறித்து ஆதிரன் என்று கவிஞர்களின் கட்டுரைகளும் உண்டு. லா.ச.ரா பற்றி ச.தமிழ்ச்செல்வனும், ஜெயகாந்தனைப் பற்றி நவபாரதியும், கந்தர்வனைப் பற்றி ந.முருகேச பாண்டியனும் எழுதியிருக்கிறார்கள்.

க.நா.சு.வின் கதைக்களமான சாத்தனூரும், ஜெயந்தனின் கதைமாந்தர்களில் ஒருவரான ஞானக்கிறுக்கனும் தமிழ்ப் புனைவுலகில் புதிய வெளிச்சத்தைப் பெறுவார்களெனில், அது நிச்சயமாக இந்தத் தொகுப்புக்குக் கிடைக்கப்போகும் வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x