Published : 31 Dec 2015 06:55 PM
Last Updated : 31 Dec 2015 06:55 PM

புத்தகங்களுடன் புத்தாண்டு: பெரும் கொண்டாட்டம் தயார்... நீங்கள் தயாரா?

நள்ளிரவிலும் திறந்திருக்கும் புத்தகக் கடைகள்.. 10% முதல் 40% வரை தள்ளுபடி விலையில்..

பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்கின்றன தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகள். இன்று நள்ளிரவில் கடைகளைத் திறந்து காத்திருப்பார்கள் புத்தகக் கடைக்காரர்கள். 10% முதல் 30% வரை புத்தக விலையில் தள்ளுபடி அறிவித்திருக்கின்றனர் பதிப்பாளர்கள். எல்லாம் வரலாற்றில் முதல் முறை. எல்லாம் உங்கள் வருகைக்காக.

புத்தாண்டு என்றால், சிலருக்கு வாழ்த்து அட்டை, சிலருக்கு கேக், சிலருக்கு மது; நாம் ஏன் புதிய கலாச்சாரத்தை உருவாக்கக் கூடாது? நாம் சந்திப்பவர்களுக்கு ஏதாவது ஒரு புதிய புத்தகத்தை வாங்கிக் கொடுத்து ஏன் வாழ்த்துச் சொல்லக் கூடாது? இது புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் நிகழ்வு மட்டும் அல்ல; நம் அறிவியக்கத்தின் துயர் துடைக்கும் தருணமுமாகும். இப்படிதான் ‘புத்தகங்களோடு புத்தாண்டு!’ இயக்கத்தைத் தொடங்கினோம். பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் கை கோத்தனர். டிச.31, ஜன. 1 இரு நாட்களும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள்; தவிர, எல்லாப் புத்தகக் கடைகளும் டிச.31 நள்ளிரவிலும் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டன.

நள்ளிரவுக் கொண்டாட்டம்

இப்போது அது ஒரு கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. சென்னை கன்னிமரா நூலக வளாகத்திலிருக்கும் ‘நிரந்தரப் புத்தகக் காட்சிக்கூட’மும் நள்ளிரவில் திறந்திருக்கும்.

டிஸ்கவரி புக் பேலஸில் 31-ம் தேதி நள்ளிரவில் எழுத்தாளர்கள், வாசகர்களுடன் ஒரு திருவிழாவே ஏற்பாடாகியிருக்கிறது. ‘பபாசி’ நிர்வாகிகள் புகழேந்தி, ஒளிவண்ணன், எழுத்தாளர்கள் வேலராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, பாரதி கிருஷ்ணகுமார், கவிதா பாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

“வெளியூரிலிருந்து வரும் வாசகர்களுக்குத் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருக்கிறோம்; எங்கள் சொந்த வெளியீடுகளுக்கு 25% தள்ளுபடியும், சில வெளியீடுகளுக்கு 50% தள்ளுபடியும் தருகிறோம்” என்றார் கடை நிர்வாகி வேடியப்பன். ‘பனுவல் புத்தக நிலைய’த்தில் நடைபெறும் நள்ளிரவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘டிம்பக்டு’ உலகத் திரைப்படம் திரையிடப்படுகிறது.

நாட்களும் நீளம்; 40% தள்ளுபடி

“இந்தக் கொண்டாட்டத்தை ஜன.20 வரை நீடிக்கிறோம்; எங்களிடம் புத்தகங்கள் வாங்குவோருக்கு 40% தள்ளுபடி” என்கிறார் ‘உயிர்மை’ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன். அவர்களுடைய பதிப்பகத்தில் நடைபெறும் நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற் கிறார்.

மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள்

கோவையைச் சேர்ந்த ‘விடியல் பதிப்பக’மும் தம் வெளியீடுகளுக்கு 40% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. பொள்ளாச்சி ‘எதிர் வெளியீடு’ நடத்தும் நள்ளிரவுக் கொண்டாட்டத்தில், எழுத்தாளர்கள் கனகராஜன், பூபாலன், அம்சப்ரியா பங்கேற்கின்றனர். சேலத்தில் ‘பாலம் புத்தக நிலை’யமும் திருவண்ணாமலையில் ‘வம்சி பதிப்பக’மும் விரிவான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக் கின்றன.

இன்னும் மதுரையில், திருச்சியில், தஞ்சையில், நெல்லையில், திருவாரூரில் என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘பாரதி புத்தகாலயம்’ இரு பதிப்பகங் களும் இதேபோல விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன.

உங்கள் ஊர் நிலவரம் அறிய உள்ளூர் இலக்கிய நண்பர்களை யும் புத்தகக் கடைக்காரர்களையும் தொடர்புகொள்ளுங்கள். புத்தகங்களுடன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுங்கள். தமிழ் அறிவியக்கத்தைக் காத்திடுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x