Published : 13 Dec 2015 01:48 PM
Last Updated : 13 Dec 2015 01:48 PM

விடுபூக்கள்: நடனக் கலைஞருக்கு அஞ்சலி

வளாகத்தின் கவிஞன்

புதுடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் அடையாளங்களில் ஒருவராக, அந்த வளாகத்திலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வைச் செலவழித்த அவதி மொழிக் கவிஞரும் முன்னாள் மாணவருமான ராமசங்கர் யாதவ் வித்ரோதி, கடந்த எட்டாம் தேதி காலமானார். 1980-ல் பல்கலைக்கழகத்துக்கு இந்தி மொழித் துறையில் ஆராய்ச்சி செய்ய வந்த வித்ரோதி, எழுத்துபூர்வமாக ஆய்வு நிரலை ஒப்படைக்க மறுத்தார். பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள மைதானத்தையே தனது இருப்பிடமாக்கி, தொடர்ந்து நடந்த மாணவர் போராட்டங்களில் தனது புரட்சிகரக் கவிதைகளைச் சொல்லி உற்சாகப்படுத்திவந்தார். இவரைப் பற்றி ‘மைன் தும்ஹாரா கவி ஹூன்’ என்ற ஆவணப்படத்தை நிதின் கே. பம்னானி எடுத்துள்ளார். வித்ரோகியின் லட்சிய மனநிலை, கவிதைக்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்த வாழ்வு ஆகியவை இப்படத்தில் நன்கு வெளிப்பட்டுள்ளன. திறந்த வெளிகளில் வெவ்வேறு பருவநிலைகளில் எப்படி வாழ்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் அவரைப் பற்றித் தெரிவிக்கிறது. “ எல்லாம் கெட்டழிகிறது, மறைந்துபோகிறது, குழம்புகிறது. ஆனாலும் மக்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்”

நடனக் கலைஞருக்கு அஞ்சலி

மெக்ஸிகோவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் குளோரியா கான்த்ரேராஸ் (வயது 81), நவம்பர் 25 அன்று மரணமடைந்தார். நியூயார்க் கிலும் மெக்ஸிகோவிலும் உள்ள நடனக் குழுக் களுக்காக 250-க்கும் மேற்பட்ட பாலே நடன நிகழ்வுகளை உருவாக்கியிருக்கிறார். புகழ் பெற்ற பாலே நடன இயக்குநரான ஜார்ஜ் பாலன்சினைக் குருவாகக் கொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்டவர் குளோரியா. ரஷ்யா வின் பாரம்பரிய நடனமான பாலேவுக்கு மெக்ஸிகத் தன்மையை ஊட்டியவர் இவர். மெக்ஸிகோவின் நாட்டுப்புற அம்சங்களைத் தனது நடனத்தில் தவிர்த்தாலும் நவீன மெக்ஸிக அம்சங்களைத் தனது நடனத்தில் சேர்த்துக்கொண்டார். ‘வாட் ஐ லேர்ன்டு ஃப்ரம் பாலன்சின்: த டயரி ஆஃப் எ கோரியோகிராஃபர்’ (2008) என்ற புத்தகத்தில் பாலன்சினிடன் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பற்றி குளோரியா விவரித்திருக்கிறார். இவரது மரணத்துக்காக மெக்ஸிகன் நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மெக்ஸிகோவின் அதிபர் என்ரிக் பீன்யா நியத்தோ தனது ட்விட்டர் பதிவில் குளோரியாவுக்குப் புகழாரமும் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x