Published : 05 Jun 2021 06:45 AM
Last Updated : 05 Jun 2021 06:45 AM
நீண்ட காத்திருப்பு
கொமடோர் அஜித் போயகொட
சுனிலா கலப்பதி
தமிழில்: தேவா
வடலி வெளியீடு
விற்பனை உரிமை: கருப்புப் பிரதிகள்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 94442 72500
வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் என்ற ஒன்று இல்லை; ஆனால், ஒரு அர்த்தத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியுமானால், அது தரும் அலுப்பையும் விரக்தியையும் நொறுக்க முடியும். கவிஞன் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி சொல்வதுபோல மரணத்தை ஒத்திப்போட நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடத்தில் உணரும் சவத்தன்மையை நம்மால் நிச்சயம் அகற்ற முடியும். கலை, அறம், உண்மை, நேசம் போன்ற ஏதோவொன்று அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது. இலங்கையின் கடற்படையில் கமாண்டராகப் பணியாற்றி, விடுதலைப் புலிகளால் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட கமாண்டர் அஜித் போயகொட, எத்தகைய கொடூரச் சூழலிலும் கைவிடாத உண்மை உணர்வு, நற்பண்புகளால், தனது வாழ்க்கையை அர்த்தப்படுத்திய கதை இது. அவர் பேச்சின் வழியாகப் பகிர்ந்தவற்றை, பதிவுசெய்து சுனிலா கலப்பதி ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘நீண்ட காத்திருப்பு’ நூல் நமக்குத் தரும் அடிப்படையான செய்தி இதுதான்.
இலங்கையின் கண்டி நகரத்தில் பிறந்து வளர்ந்த அஜித் போயகொட, எல்லோரையும்போல கடற்படையினர் அணியும் வித்தியாசமான சீருடை மேலுள்ள கவர்ச்சியால் கடற்படைக்கு விண்ணப்பம் போட்டு, இளநிலை அதிகாரியாக 1974-ல் பணியில் சேர்ந்தவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இணக்கம் சீர்குலைந்து, பதற்றம் தொடங்கிய நாட்களிலிருந்து தனது நினைவுகளை ஆரம்பிக்கிறார் அஜித் போயகொட. நிலத்தில் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவினரும் பின்பற்றும் நெறிமுறைகள், கட்டுப்பாடுகளைவிட அதிக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கும் கப்பல் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான பல தகவல்களைச் சொல்கிறார். குடிநீர் உட்பட எல்லாமே வரையறைக்கு உட்பட்டே கிடைக்கும் இடத்தில் கட்டுப்பாடும் பாதுகாப்பு நெறிகளும் காலங்காலமாக அங்கே ஒரு பண்பாடாகவே ஆகிவிட்ட சூழல் அது. நிலத்தில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் இருந்த நல்லுறவையும், உள்நாட்டு முரண்பாடுகள் அதிகரிப்பதற்கு முன்னர் கடலில் மீனவர்களுக்கும் சிங்களக் கடற்படையினருக்கும் இருந்த நட்பையும் கொடுக்கல் வாங்கல்களையும் நெகிழ்வோடு விவரிக்கிறார்.
நிலத்தில் தனது முதல் பணியிடமான நயினா தீவில் இருந்த பௌத்த மடத்தைப் பாதுகாக்கும் பணி அனுபவத்தைச் சொல்லத் தொடங்குகிறார். தமிழர்கள் சூழ்ந்த பகுதியான அவ்விடத்தில் பௌத்தத் துறவிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இணக்கமான உறவை, அரசுப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் எப்படி அறுக்கத் தொடங்கியது என்பதை நுட்பமாகச் சொல்கிறார். திருமணம், சென்னை, கெய்ரோ பயண அனுபவங்களினூடாக அஜித் போயகொட விரைவிலேயே உயர் பதவியை அடைகிறார். ரோந்து, வயர்லெஸ் செய்திகளை ஒட்டுக்கேட்கும் பணிகளைத் தவிர பெரிய அளவு போர் அனுபவம் எதையும் அஜித் போயகொட பெறவில்லை. 1991-ல் காரை நகர் படையெடுப்பில்தான் போர் என்பது அப்பாவி மக்களின் வாழ்க்கையில் எப்படியான துயரத்தை ஏற்படுத்துகிறது என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார்.
இலங்கை ராணுவம் காரை நகரைப் பிடித்த பிறகு, தமிழ் மக்களின் வீடுகளைத் திறந்து கொள்ளையிட்ட ‘யுத்த-சுத்த’ நடைமுறையைப் பற்றி விவரிக்கிறார். ராணுவத்தினர் அப்பாவி மக்கள் மீது நடத்திய அட்டூழியங்கள், புலிகளின் மீது அவர்கள் அனுதாபம் கொள்வதற்குக் காரணமாக இருந்ததைக் குறிப்பிடுகிறார். தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியத்தில் நெறிமுறைகள், மனிதாபிமான அடிப்படையில் எந்தக் கொள்ளையையும் கொலைகளையும் ஊக்குவிக்காமல் அதைத் தடுப்பவராகவும் அஜித் போயகொட இருந்திருப்பது தெரிகிறது.
1994-ல் விடுதலைப் புலிகளால் அஜித் போயகொட கமாண்டராகப் பணியாற்றிய கப்பல் நள்ளிரவில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, அஜித்தும் கைதுசெய்யப்படுவதிலிருந்து புத்தகத்தின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது. சுதந்திர இருப்பு, சிறையிருப்பு என இரண்டு மாறுபட்ட அனுபவங்கள் காட்சியாக்கப்பட்டு, இரண்டு அனுபவங்களும் நம்மிடம் உரையாடும் நூல் இது.
இலங்கையை ஆண்ட அரசுகள் மாறுகின்றன; ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக இருந்து காணாமல் அடிக்கப்பட்ட ஜேவிபி கட்சியினருக்காகப் போராடிய ஆளுமையாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பழைய முகம் நமக்குத் தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்களின் மறதி, புறக்கணிப்புக்குள்ளாகி விடுதலைப் புலிகளோடு பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்து சிலவேளைகளில் கொடுமையானதும் பல வேளைகளில் மென்மையானதுமான சிறைவாழ்வை அஜித் போயகோட கழித்த கதைதான் இது. வருடக்கணக்கில் தன்னைச் சிறை வைத்திருந்த புலிகள் குறித்துப் பேசும்போது, இலங்கையில் நடக்கும் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தாம் பிடிபட்டிருக்கிறோமே தவிர, தனிப்பட்ட எந்த வெறுப்பும் புலிகளுக்குத் தன் மேல் இல்லை என்ற புரிதல் இருக்கிறது.
தான் பணியாற்றிய சிங்கள ராணுவம், தன்னைப் பிடித்து வைத்திருக்கும் புலிகள் இரண்டு தரப்பினரைப் பற்றிப் பேசும்போதும் அவர்களது குறை நிறைகளைத் தள்ளிநின்று வியக்கவும் விமர்சிக்கவும் அவர்களிடம் நட்புகொள்ளவும் முடிகிறது. தன்னைக் காவல் காக்க வரும் புலிகள், கடற்படை அனுபவம் குறித்துப் பாடம் கேட்க வரும் பெண்புலிகள், தன்னிடம் துவக்கத்தில் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளும் நபர் எல்லோரையும் அவர்களது சூழலோடு பார்க்கிறார் அஜித். புத்தகத்தின் தொடக்கத்திலிருந்து தன்னையும் தன்னைச் சுற்றி நடக்கும் உலகையும் கனிவோடு ஒரு சிரிப்புடன் பார்க்கிறார். மனைவி, குழந்தைகளைப் பிரிந்த துக்கமும் சங்கடமும் வலிகளும் பகிரப்பட்டாலும் அது கசப்பாக மாறாத ஒரு தொலைவை அஜித் போயகொட தனது ஆளுமையில் சாதித்திருக்கிறார். ஒரு நிலைமை தொடர்பில் புகார் சொல்வதோ கோபப்படுவதோ அந்த நிலையை மாற்றுவதில்லை என்பதை அவர் நம்பிக்கையாகவே கொண்டிருந்திருக்கிறார். புலிகளின் சிறைபிடிப்பிலிருந்து வெளியே வந்த பிறகும் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் கசப்பையும் இணக்கமற்ற சூழலையும் மேலும் அதிகப்படுத்தக் கூடாது என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.
மனமும் உடலும் எந்தவிதமான சங்கடங்களுக்கும் போதாமைகளுக்கும் நாம் நினைப்பதுபோலன்றி சீக்கிரமாகவே பழகிவிடுகிறது; அப்படிப் பழக்கப்பட்ட மனமும் உடலும் திரும்ப வசதியும் விடுதலையும் கிடைக்கும்போது அதற்குப் பழகுவதற்கும் கூடுதல் அவகாசத்தை எடுத்துக்கொள்கிறது. முரண்போலத் தோன்றும் இந்த உண்மையை இந்த நூல் மூலமாக நாம் அறிகிறோம்.
குரூரமான பயங்கரங்களோ, பரபரப்பான சாகச நிகழ்ச்சிகளோ இந்த நூலில் கிடையாது. ஆதிக்கத்தையும் அட்டூழியத்தையும் செய்யும் அதிகாரமும் பதவியும் இருந்த சூழ்நிலையிலும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மனிதாபிமானத்தோடு நடக்க முடியும் என்பதற்கான உதாரணமாக அஜித் போயகொட தெரிகிறார். அதேவேளையில், யுத்தக் கைதியாக அத்தனை வசதிகளும் ஒரே இரவில் பறிக்கப்பட்டு, மிகத் தாழ்ந்த நிலையில் வாழும்போதும் சக கைதிகளிடம் மட்டுமல்ல; தன்னைச் சிறை வைத்தவர்களிடமும் நல்லுணர்வையும் மதிப்பையும் பெற்றவராக அவர் இருந்திருக்கிறார்.
ஒரு மனிதனின் உண்மையான வீரம் என்பது, எத்தகைய சூழ்நிலையிலும் அவன் அனுசரிக்கும் சத்திய உணர்வு, தார்மீகத்தைக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டியது. அதை அஜித் போயகொடவின் இந்த நூல் திரும்பவும் நினைவூட்டுகிறது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT