Published : 06 Dec 2015 08:28 AM
Last Updated : 06 Dec 2015 08:28 AM
நாடகம்: சதுரங்கம்
ஷ்ரத்தாவின் ‘சதுரங்கம்’ சபாக்களில் வழக்கமாக அரங்கேறும் வகை மாதிரி நாடகம் அல்ல என்பது திரை விலகிய நொடியிலேயே நமக்குப் புரிந்துவிடுகிறது. மூங்கில் காடுகள், முட்புதர்களின் பின்னணியில் ராணுவ வீரர்கள் இருவர் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு முதியவரும் ஒரு இளம் பெண்ணும் கைதிகளாக அவர்கள் முன் அமர்ந்திருக்கின்றனர். மது அருந்தியபடியே ராணுவ வீரர்கள் ஆடும் செஸ் ஆட்டத்தின் ஊடாக நம் கண் முன் விரிகின்றன மணிப்பூரின் ரத்தம் தோய்ந்த வரலாற்றுப் பக்கங்கள்.
தன்னுடைய 25 வயது மகன் விஜய்யைக் காணவில்லை எனத் தன்னுடைய மகள் விஜயந்தியோடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பார் விவசாயி சுப்பு. புகாரைப் பெற்றுக்கொண்ட சில நாட்களில், நகரின் பிரதான பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் சிலரை ராணுவம் சுட்டுக்கொன்றதாகச் செய்தி வரும். அவர்கள் தீவிரவாதிகள் அல்ல சாமானிய மக்கள்தான் என மனித உரிமைக் குழுவினர் வாதிடுவார்கள்.
இந்தச் சம்பவத்தில் ராணுவத்துக்கு ஆதரவாகப் பேச, மகனைக் காணவில்லை எனப் புகார் கொடுத்த முதியவரையும் அவரின் மகளையும் நிர்ப்பந்திப்பார்கள் ராணுவ வீரர்கள்.
விஜயந்தியின் காதல், சாமானிய மக்களைக் கொல்லும் போராட்டக் குழுக்களை விமர்சிக்கும் பத்திரிகையாளர் ரிஷிகாந்த் ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்களை, செஸ் விளையாடும் ராணுவ வீரர்களின் பார்வையில் முன், பின்னாகக் கதை சொல்லும் உத்தியோடு நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ராணுவத்தின் அத்துமீறலை எதிர்க்கும் போராட்டக் குழுக்கள், அந்தப் போராட்டக் குழுக்களுக்குள்ளேயே நடக்கும் பூசல்கள், குண்டுவெடிப்புகள், அப்பாவி மக்கள் உயிர்ப் பலி ஆகியவை அன்றாட நடவடிக்கையாகிவிட்ட சூழலைப் பதைபதைப்புடன் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது நாடகம். அட்ச ரேகை தீர்க்க ரேகைகளுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்துக்கு மனித நேயம் பலியாகும் உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்தும் நாடகம் இது.
ராணுவ வீரர்கள் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலின் வழியாகவே, இரோம் ஷர்மிளாவின் உறுதியான போராட்டத்தை வியப்பு மேலிடப் பேசுவார்கள். ‘என்னோட அம்மா மணிப்பூர் இந்தியாலயாடா இருக்குன்னு கேக்குதுடா’ என்பார் ஒரு வீரர் சிரித்தபடி. இன்னொரு வீரர்,
நாட்டுக்காகப் பகைவர்களைச் சுட்டு வீழ்த்தும் கனவோடு ராணுவ வீரனாகி, காஷ்மீர், நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர் எனச் சொந்த நாட்டில் இருப்பவர்களையே சுட்டு வீழ்த்தும் அவலத்தைப் பற்றிப் பேசுவார்.
“சுள்ளி பொறுக்க வந்த பையன்தானேன்னு அசிரத்தையா இருந்துட்டேன். வீசி எறிஞ்சான் பாரு ஒரு வெடிகுண்டை. ஆறு பேர் சிதைஞ்சு போயிட்டாங்க… நாங்க சுட்டா மனித உரிமைக்காரங்க சத்தம் போடறாங்களே… நாங்க செத்தா மனித உரிமைக்காரங்க கேக்கறாங்களா?” என மதுவின் போதை தலைக்கேற ராணுவ வீரர்களின் பேச்சிலும் செயலிலும் கோபம் கொப்பளிக்கிறது. கொலை, பாலியல் துன்புறுத்தல் என அடுத்தடுத்த பயங்கரங்கள் அரங்கேறுகின்றன. வன்முறை என்பது முடிவுறாத நச்சுச் சுழல் என்பதைப் பொட்டில் அறைந்து சொல்கின்றன இந்தக் காட்சிகள்.
வீசும் புயல் காற்றிலும் இருந்துகொண்டிருக்கும் சுவாசம் போல, அகிம்சை வழியில் நம்பிக்கை வைத்திருக்கும் நாயகி விஜயந்தி (அர்ச்சனா சர்மா), சுப்பு (அர்ச்சனாவின் தந்தை), பத்திரிகையாளர் ரிஷிகாந்த் (ஜி.கிருஷ்ணமூர்த்தி), ராணுவ வீரர்களாக நடித்த பத்ரி,
கிஷோர் ஆகியோர் தங்களின் இயல்பான நடிப்பால், பார்வையாளர்களை நாடகத்தோடு ஒன்றவைத்தனர். இலக்கியச் சிந்தனை விருது பெற்ற ஆனந்த் ராகவ்வின் ‘செக் மேட்’ சிறுகதைக்கு மிகவும் நேர்த்தியாக நாடக வடிவம் கொடுத்திருந்தார் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
சம்பவங்களின் நறுக்குகளாக இருக்கும் இந்த நாடகத்தில் ஒரு மாநிலத்தின் பிரச்சினையைவிடத் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நேரும் அவலத்துக்கு அதிக அழுத்தம் தருகிறது. என்றாலும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்கள் அவற்றுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நடுவே சிக்கி வதைபடும் மக்களின் சொல்லொணாத வேதனைகளையும் தெளிவாகக் காட்டிவிடுகிறது ‘சதுரங்கம்’.
மேடை நாடகம் என்பது மிகுதியும் வசனங்களையும் நடிப்பையுமே நம்பியிருப்பது என்னும் நிலையை ஏற்கெனவே சிலர் மாற்றியிருக்கிறார்கள். எனினும், மாறுபட்ட பின்புலங்களைக் காட்டப் பின் திரைகளைப் பயன்படுத்துவது அல்லது செயற்கையான செட்களைப் போடுவது ஆகியவற்றிலிருந்து விலகி, மணிப்பூர் மாநிலத்தின் கள யதார்த்தத்தைத் தத்ரூபமாக மேடையில் கொண்டுவந்த நேர்த்தி மிகவும் பாராட்டத்தக்கது.
சதுரங்க ஆட்டத்தில் ஏற்படும் அரிதான ஒரு நிலை ஸ்டேல்மேட் (காய்கள் இருந்தாலும் நகர்த்த முடியாத ஸ்தம்பித்த நிலை). மணிப்பூர் போன்ற பகுதிகளின் சிக்கலானதும் குரூரமானதுமான யதார்த்தத்தைச் சித்தரிப்பதன் மூலம் பார்வையாளர்களை ஸ்தம்பித்த நிலையில் உட்கார வைத்துவிடுகிறது சதுரங்கம் நாடகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT