Published : 22 May 2021 07:44 AM
Last Updated : 22 May 2021 07:44 AM
மனிதர்களின் நட்பு வரலாற்றில் பல விசித்திரங்கள் நடக்கும். ஒரு அழகான நட்பு மூலம் அதைவிட மகத்தான பெரிய நட்பு ஒன்று வாய்க்கும். எனக்கு அப்படி கவிஞர் மீரா மூலம் கி.ரா. கிடைத்தார். முப்பது ஆண்டுகள் முழுசாய் இந்நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லியோடு ஒட்டி உறவாடக் கிடைத்த வாய்ப்பை அவரை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது.
பிழைப்புக்கான பணி நேரம் போக எனக்குக் கிடைத்த எல்லா நேரங்களையும் அவர் ஒருவரே அள்ளிக் கொள்ளும்படியாக வாழ்ந்திருக்கிறேன். புதுச்சேரியில் இருந்த இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், மன்னர்மன்னன், பேரா.மருதநாயகம், மீனாட்சி, ம.இலெ.தங்கப்பா, பிரபஞ்சன் என்று யாரோடும் நெருக்கமாகச் சென்று பழகவே எனக்கு நினைப்பு வராதபடி கி.ரா.வின் இருப்பு எனக்குள் ஆட்சி செலுத்தியது.
அவரோடு இணைந்து பத்து ஆண்டுகள் ‘கதைசொல்லி’ இதழை நடத்தியபோது, மாலைநேரம் வந்தவுடன் குடிகாரனின் கால்கள் தானாகக் கள்ளுக்கடை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவதுபோல, நானும் கி.ரா. வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவேன். அப்படியொரு கவர்ச்சி அவரது உரையாடலில் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வை நகரில் பக்கத்துத் தெருவில் இருந்தது மேலும் ஒரு வசதியாகப் போய்விட்டது.
கி.ரா. எதையும் கதையாகவே பார்த்தார். எனவேதான், கட்டுரை என்று எழுதினாலும் அதுவும் கதையாகவே வெளிப்படும். ஒவ்வொரு சொல்லும் ஒரு கதைதான் அவருக்கு. அலிபாபாவாகச் சொல்லைத் திறந்து விலைமதிப்பற்ற மாணிக்கங்களை அள்ளிக்காட்டுவார். மனம் திறந்து கேட்டுக்கொண்டிருப்பதுதான் சுகமே சுகம்.
அவருடைய நினைவாற்றலும் ருசி மேல் ரசிப்பும் இறுதி வரை அவரைவிட்டு விலகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கும். ஒருதடவை விதையில்லா கருப்புத் திராட்சை வாங்கிச் சென்றேன். ஒன்றை மட்டும் கழுவிக் கையில் கொடுத்தேன். படுக்கையில் சாய்ந்தவாறு இருந்தவர் அதை வாங்கி மெதுவாக வாயில் வைத்தார். என்ன நினைத்தாரோ அதைப் பாதியாகக் கீறித் தரச்சொன்னார். செய்தேன். சுவைத்துப் பார்த்தவர், “என்ன இப்படி ருசியாக இருக்கு. எங்க வாங்கீனுங்க?” என்று விசாரித்து வைத்துக்கொண்டார். தொடர்ந்தார், “பஞ்சு, உங்க வீட்டு அச்சுமுறுக்கு கிடைக்குமா?" முதன்முதலில் என்னிடம் வாய் விட்டுக்கேட்டது இதுதான். “அதைத் தீபாவளிக்குத்தானே சுடுவாங்க” என்று வீட்டு நிலை கருதி நழுவப் பார்த்தேன். “முறுக்கு சுட்டா தீபாவளி வந்திரப்போவுது” என்றார். இதுதான் என் இனிய கி.ரா. பிறகு, என் மனைவியிடம் இதைக் கூறி அவர் விருப்பப்படி அச்சுமுறுக்கை எடுத்துக்கொண்டு போனேன். நோயின் கடுமை தெரியா அந்த முகத்திலும் கண்களிலும் மலர்ச்சி கண்டேன்; மகிழ்ந்தேன்.
நோய் முற்றிய சூழலில் ஒருநாள், தொலைபேசி அழைப்பில் அவரின் குரல். ‘‘பஞ்சு, உடனே புறப்பட்டு வாங்க.” அவ்வளவுதான் வைத்துவிட்டார். காலைப் பொழுது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் முன்போய் நின்றேன். நீர் பிரியாமல் வேதனையில் துடித்தார். போய் நின்ற என் கையைப் பிடித்துக் கொண்டார்.
“என்ன பஞ்சு இப்படி ஆயிடுச்சே! எங்க கொண்டுவந்து நிறுத்திருச்சிப் பாத்தீங்களா?” என்று ஒருபக்கமாகச் சாய்ந்தார். அடைத்து நின்ற நீர் மொத்தமும் வெளிவந்துவிட்டது. வலியும் நின்றுவிட்டது. அந்த நிலையிலும் அடுத்த நிமிடமே, ”பஞ்சு, ஏதாவது சாப்பிட்டு வந்தீங்களா?” என்றார். எனக்கு முப்பது வருடமாகச் சர்க்கரை என்கிற அக்கறை. இதுதான் என் இனிய கி.ரா. உயிர் என்ற ஒன்று என்னுள் ஓடும் வரை கி.ரா.வும் எனக்குள் ஓடிக்கொண்டிருப்பார்.
- க.பஞ்சாங்கம், எழுத்தாளர்.
தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT