Published : 14 May 2021 04:13 PM
Last Updated : 14 May 2021 04:13 PM

கல்கி முதல் அராத்து வரை: தமிழ் கதைகளுக்கான இலவசச் செயலி! 

இன்றைய இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து வயதினரும் நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், சமூக ஊடகங்களில் நூல்கள், எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பரவலாகச் சென்றடைகின்றன. எனவே இயல்பாகவே வாசிப்பு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கலாம் எனவும், அதிகரிக்கலாம் என்றும் நினைப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

மேலும் பலருக்கு ஓரளவுக்கு மேல் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குப் பொருளாதார வசதியில்லை. பொருளாதார வசதி இருப்பவர்களும் புத்தகத்தை வாங்கினால் அதைப் படிப்போமா என்று தங்கள் மீதுள்ள சந்தேகத்தால் புத்தகங்களை வாங்கத் தயங்குகின்றனர். இதையெல்லாம் தாண்டி பெருந்தொற்று குறித்த அச்சம், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக புத்தகக் கடைகளுக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் நூல்களை வாசிக்க விரும்புபவர்களுக்கான வரப்பிரசாதமாக வந்துள்ளது Bynge செயலி. கூகுள் பிளேஸ்டோர் (Google Playstore), ஆப்பிள் ஆப்ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக Bynge செயலியைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இந்தச் செயலியில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா செளந்தரராஜன், பா.ராகவன், பவா செல்லதுரை, காஞ்சனா ஜெயதிலகர், சாரு நிவேதிதா, அராத்து போன்ற நிகழ்கால நட்சத்திர எழுத்தாளர்கள் புதிய தொடர் கதைகளை எழுதுகிறார்கள். கடந்த காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த புதுமைப்பித்தன், கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன், கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் உள்ளிட்ட இலக்கிய அமரர்களின் தொடர் கதைகளையும் சிறுகதைகளையும் இந்தச் செயலியில் வாசிக்கலாம். சரித்திரம், சமூகம், காதல், த்ரில்லர், அமானுஷ்யம் எனப் பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொடர் கதைகள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. முன்னணி எழுத்தாளர்களின் புனைவல்லாத தொடர்களும் படிக்கக் கிடைக்கின்றன.

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ’கபாடபுரம்’, ‘பாண்டிமாதேவி’ போன்ற நெடுந்தொடர்கள் முழுமையாக உள்ளன. மேலும் பல புதிய முன்னணி எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் bynge செயலியில் இணையவிருக்கிறார்கள். பல புதிய தொடர்கள், தொடர்கதைகள் தொடங்கப்பட இருக்கின்றன. அனைத்தையும் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் இலவசமாக வாசிக்கலாம்.

''இந்தச் செயலியில் தொடரைப் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தகத் விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதைவிட, எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்னும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் கருத்து, Bynge செயலியின் தனிச்சிறப்பைக் கச்சிதமாகப் புரியவைக்கிறது.

Bynge செயலியை உருவாக்கியுள்ள நோஷன் பிரஸ் நிறுவனத்தின் இணை இயக்குநரும் Bynge செயலியின் நிர்வாக இயக்குநருமான நவீன் வல்சகுமார், “ஸ்மார்ட்போன் தலைமுறைக்குத் தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளைய திரைப்படங்களாகவோ வெப்சீரிஸ்களாகவோ மாறும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் இந்த முக்கியமான முயற்சி, தமிழ் வாசகர் பரப்பையும் அறிவுச் செல்வத்தையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x