Published : 19 Dec 2015 10:34 AM
Last Updated : 19 Dec 2015 10:34 AM

புத்தகங்களோடு தியானம்

அந்தச் சிறுவனின் பெயர் ராஜு. அப்போதே அவனுக்குப் புத்தகங்கள் மீது ஆர்வம். தனது பெயரை ‘அரசு’ என்று தமிழாக்கி, அந்தப் பெயரிலேயே ‘அரசு நூலகம்’ என்னும் ரப்பர் ஸ்டாம்ப் செய்து, தான் சேகரித்த புத்தகங்களில் அச்சடித்துப் பார்ப்பது அவனுக்குப் பொழுதுபோக்கு. அந்தச் சிறுவனின் பல ஆண்டுகள் கனவான சொந்த நூலகம், தான் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற 60 வயதில் சாத்தியமாகியுள்ளது. தமிழ் ஆய்வுலகத்தில் மிகவும் புகழ்பெற்ற பேராசிரியர் வீ. அரசுதான் அந்தச் சிறுவன்.

தனக்கு ஓய்வுத்தொகையாக வந்த 25 லட்சம் ரூபாயில் 10 லட்சம் ரூபாயைக் குழந்தை களுக்கான கல்விக் கடனை அடைப்பதற்குக் கொடுத்துவிட்டு, மிச்சமுள்ள 15 லட்சத்தில் அழகிய நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார் வீ. அரசு. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த தமிழ் அச்சுப் பண்பாடு வழியாகத் தமிழ்க் கலாச்சாரத்தை வரைய முயலும் முக்கியமான ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இவர். 20-ம் நூற்றாண்டில் தமிழில் வெளிவந்த, தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்த, புதிய கோட்பாடுகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வித்திட்ட 3,000 இதழ் தொகுப்புகள் இவரிடம் உண்டு.

தொ.மு.சி. ரகுநாதனின் சாந்தி, விந்தனின் மனிதன், இஸ்மத் பாட்சா நடத்திய சமரன் முதல் இன்று வெளிவரும் இலக்கிய சிறுபத்திரிகையான புது எழுத்து இதழ் தொகுப்பு வரை இவரிடம் இருக்கின்றன. இவர் சேகரித்து வைத்துள்ள தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளிலிருந்து தமிழ், பண்பாடு, வாழ்வியல் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியும்.

கல்லூரிப் படிப்பு காலத்திலிருந்து பழைய புத்தகக் கடைகள், தனிநபர் சேகரிப்புகள், வாரிசுகளால் கைவிடப்பட்ட புத்தகங்கள் இருக்கும் வீடுகளில் தேடி அலைந்து இதழ்கள் மற்றும் பழைய நூல்களென தற்போது 20 ஆயிரம் புத்தகங்களைத் தனது நூலகத்தில் வைத்துள்ளார். சின்னச் சின்ன வீடுகளில் இருண்ட அறைகளில் புத்தகங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் பட்ட சிரமங்களிலிருந்து தற்போது ஆறுதலாக இருப்பதாக வீ. அரசு கூறுகிறார்.

மேல்நாடுகளில் பயன்படுத்தப்படும் 'ஃபார்ம் அண்ட் யூஸ்' வடிவமைப்பு முறையில் கட்டிடவியல் நிபுணர் மகேஷ், வீ. அரசின் வீட்டின் இரண்டாம் தளத்தில் காற்றோட்டமும் மன அமைதியுமான சூழலில் இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளார். நூலகம் இரண்டடுக்குகளாக 70 அடி உயரத்தில் உள்ளது. இரண்டடுக்குகள் மங்களூர் ஓட்டுக் கூரையுடன் முழுக் கட்டிடத்தையும் இரும்பு உலோகச் சட்டகங்களைக் கொண்டு வெல்ட் செய்து இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. சுவருக்குத் தனிவண்ணம் பூசாமல் சிமெண்ட் நிறத்தின் மேலேயே மெழுகுபூசி இயற்கையான தன்மையில் உருவாக்கியுள்ளார். நூலகத்தின் வலது புறத்தில் அழகிய பால்கனியும் உள்ளது.

புத்தக அலமாரிக்கான மரப்பலகைகள், கப்பலில் இறக்குமதி செய்யப்படும் பொருட் களைப் பாதுகாப்பாக எடுத்துவரும் மரப்பெட்டிகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்த நூலகத்துக்கும் 6,000 ரூபாய் மட்டுமே செலவாகியிருக்கிறது. இந்த மரப்பலகைகள் பூச்சிகள் அண்டாத வண்ணம் வேதிப்பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டவை.

சமீபத்தில் மொழியியல் பேராசிரியர் இ. அண்ணாமலை இந்த நூலகத்தைப் பார்வை யிட்டுள்ளார். “இந்த நூலகத்தில் வந்து அமர்ந்தால் போதும், தியானம் செய்யும் அனுபவம் ஏற்படுகிறது” என்று அவர் கூறியதைப் பெருமையுடன் கூறுகிறார் வீ. அரசு. புத்தகங்களைப் பார்வையிட வரும் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கிறது வீ. அரசுவின் நூலகம். ஆய்வு மாணவர்களுக்கு நூலகத் தளத்திலேயே தங்குவதற்கு ஒரு அறையையும் உருவாக்கியுள்ளார். “தங்குவதற்கு இடமும் எளிய உணவும் என்னால் அளிக்க முடியும்” என்கிறார்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மன அமைதிக்கும் எத்தனையோ இடங்களைத் தேடி மனிதர்கள் அலையும் காலம் இது. சென்னையில் உள்ள பெருங்குடியில் வீ.அரசு தனது புத்தகங்களோடு தியானம் செய்கிறார்.

இந்த நூலகத்தில்...

20,000 நூல்கள்

600 மலர் தொகுப்புகள் (முக்கியமானவை தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பம்மல் சம்பந்த முதலியார் ரா.பி.சேதுப்பிள்ளை, உ.வே.சா. ஆகியோருக்கு வெளியிடப்பட்ட மலர்கள்)

1,000-க்கும் மேல் ஈழத்தமிழ் இலக்கிய நூல்கள்

3,000-க்கும் மேல் இதழ் தொகுப்புகள்

புத்தகப் பட்டியல்கள்

1867 முதல் 1940 வரை அரசால் வெளியிடப்பட்ட தமிழ் நூல் விவர அட்டவணை 26 வால்யூம்கள்

40 தமிழ் இலக்கண மூலநூல்களின் பதிப்புகள்

150 தமிழில் வெளிவந்துள்ள அகராதிகள்

- ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x