Published : 08 May 2021 04:59 AM
Last Updated : 08 May 2021 04:59 AM
கிருமி
சி.சரவணகார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
அடையாறு,
சென்னை-20.
தொடர்புக்கு:
044-48586727
விலை: ரூ.350
பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயனின் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளும் 2020-ன் பெரும் பகுதியை விழுங்கிய கரோனா ஊரடங்கின்போது எழுதப்பட்டவை. பெருந்தொற்றுக் காலத்தின் அச்சமும் அவநம்பிக்கையும் வீட்டில் அடைந்துகிடக்கும் மனித மனங்களில் உருவாகும் வெறுமையும் பெருந்தொற்று இல்லாத காலங்களிலும் தவிர்க்க முடியாத உணர்வுகளாக இருப்பதைப் பிரதிபலிக்கும் கதைகள் என்று இவற்றை வரையறுக்கலாம்.
பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகக் காமம் கலந்தோடுகிறது. ‘ஜலபிரவேசம்’ உள்ளிட்ட ஒருசில கதைகளில் காமம் குறித்த சுட்டல்கள் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒரு பெண் எழுத்தாளரை முன்வைத்து நாட்டில் இன்று தலைதூக்கியிருக்கும் மதவாத, சாதிய அரசியல் சக்திகளின் கோரத் தாண்டவங்களை அரசியல் பிரகடனங்களாக அல்லாமல், ஒரு நவீன ஜனநாயகச் சிந்தனை கொண்ட மனிதரின் பிரதிநிதியாகப் பதிவுசெய்வதாலேயே ‘ஜலபிரவேசம்’ இந்தத் தொகுப்பின் முக்கியமான கதையாகிறது. சனாதன தர்மத்தின் பிரதிநிதிகள் மாறிக்கொண்டே இருப்பதையும், ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் மாறாமல் இருப்பதையும் கதைகளில் பதிவுசெய்கிறார். ஆணவப் படுகொலையை முன்வைத்து எழுதப்பட்ட சமகால அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளும் உண்டு.
இதுபோன்ற கதைகளை எழுதும் ஆசிரியர் அரசியல் சரித்தன்மைகளுக்கும், பொதுச் சமூகத்தின் இங்கிதம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கும் அடிபணியாதவராகத் தன்னை முன்வைக்கிறார். ஆண்கள் தம்முடைய பாலியல் திறனால்தான் எதிர்பாலினரை அடக்கி ஆள முடிகிறது என்று (‘கிருமி’) சொல்லும் கதைகளை அவரால் எழுத முடிகிறது. கதையின் முதன்மைக் கதாபாத்திரத்தை ஜெயகாந்தனை விமர்சிக்கும் எழுத்தாளராகப் படைக்க முடிகிறது (‘ஜலபிரவேசம்’). அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் அடியாழத்தில் ஓடும் சாதிய மேட்டிமையை இயல்பாகப் பதிவுசெய்யவும் முடிகிறது (‘தான்தோன்றி’).
பொதுவில் பேசக்கூடாதவையாகக் கருதப்படும் விஷயங்களையும் தன் கதைகளின் பேசுபொருளாக்க இவர் தயங்குவதில்லை (‘யமி’). இந்தக் கதையை முடிவுப் புள்ளியிலிருந்து தொடங்கி தொடக்கப் புள்ளியில் முடிக்கும் முயற்சியானது சிறப்பு. அதே நேரத்தில், ‘நுளம்பு’, ‘ஜி’ ஆகிய கதைகளில் அதிர்ச்சி மதிப்புக்காகச் சில விஷயங்களைச் சேர்த்திருப்பது போன்ற உணர்வும், ‘வி’ கதையில் முடிவு திணிக்கப்பட்டதுபோன்ற உணர்வும் ஏற்படுகின்றன. இந்தக் கதைகளின் தர்க்கப் பிழைகளையும், விடை இல்லாக் கேள்விகள் ஏற்படுத்தும் உறுத்தலையும் மறக்க முடியவில்லை.
வரலாறு, புராணம், அறிவியல், தொழில்நுட்பம், உளவியல் எனப் பல்வேறு துறைகளில் ஆசிரியருக்கு உள்ள ஆழமான வாசிப்பை வெளிப்படுத்துவதாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன. இதோடு சுவாரஸ்யமான எழுத்து நடையும் நவீனச் சிந்தனையும் அது கொடுக்கும் துணிச்சலும் சரவணகார்த்திகேயனின் சிறப்பியல்புகளாக இந்தக் கதைகளின் மூலம் வெளிப்படுகின்றன. இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற ஒரு எழுத்தாளருக்குச் சாத்தியமாகக்கூடிய உயரங்களைத் தொடும் கதைகளை இனிமேல்தான் அவர் எழுத வேண்டும் என்று நினைக்க வைப்பதில் இந்தக் கதைகளின் வெற்றி தோல்வி இரண்டும் அடங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT