Published : 01 May 2021 04:33 AM
Last Updated : 01 May 2021 04:33 AM
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இறையன்பு
கற்பகம் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 044 243143470
சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் இறையன்பு. விருந்தோம்பல் என்ற உன்னதமான செயல்பாடு காலந்தோறும் தமிழர்களிடம் எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதைச் சங்க இலக்கியம் தொடங்கி சமகாலப் படைப்புகள் வரை எளிய மொழியில் இந்நூலில் விவரித்துள்ளார். விருந்தோம்பல் என்ற சொல்லைத் தங்களுடைய படைப்புகளில் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் எவ்வாறெல்லாம் மேன்மைப்படுத்தியுள்ளனர் என்ற விவரிப்புகள் காத்திரமானவை.
எழுபதுகளில்கூடத் தமிழகக் கிராமங்களில் வீட்டுக்கு வெளியே நீண்டிருந்த திண்ணைகள் வழிப்போக்கர்களுக்குப் பயன்பட்டன. வயலில் விளைந்த தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவைத் தங்களுடைய ஊருக்கு வரும் வழிப்போக்கர்கள், பரதேசிகள், குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், ஆண்டிகள், மணியாட்டிக்காரர்கள் போன்றவர்களுக்குத் தந்தனர். அந்தச் செயலானது, பண்டைக் காலத்தில் புரவலரை நாடிவந்த பாணர்களுக்கும் வெளியூர்க்காரர்களுக்கும் ஆடை, உணவு வழங்கிய சங்க கால மரபின் தொடர்ச்சியாகும். இன்று கிராமங்களில்கூடத் திண்ணைகள் வைத்து வீடு கட்டப்படுவதில்லை.
சக மனிதர்களை நேசிக்கும் பண்பு இன்று அருகியுள்ளது என்ற வருத்தத்தில்தான் விருந்தோம்பல் குறித்த பேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ளார் இறையன்பு. இனக்குழுப் பண்பாட்டில் தோன்றிய விருந்தோம்பல் குறித்து, இலக்கியச் சான்றுகளுடன் எழுதியுள்ள இந்த நூலுக்குப் பருண்மையான நோக்கம் இருக்கிறது. நவீன வாழ்க்கையில் விருந்தோம்பல் இல்லை என்று புலம்பிடாமல், இலக்கியப் படைப்புகளில் பதிவாகியுள்ள விருந்தோம்பலின் சிறப்புகளைப் பேசுவதன் மூலம் மெல்லிய அதிர்வுகளை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் புத்தகமாகியுள்ளது. எங்கும் நுகர்பொருள் பண்பாடு மேலாதிக்கம் செலுத்தும் இந்த உலகமயமாக்கல் காலகட்டத்தில், தமிழ் அடையாளம் சிதிலமாகும் சூழலில் விருந்தோம்பலை முன்வைத்து இந்த நூல் உருவாக்கிட முயலும் பேச்சுகள் முக்கியமானவை.
விருந்தோம்பலுக்குப் பெரிய அளவில் பணம் தேவையில்லை; பெருந்தன்மையான மனம்தான் தேவை என்பதைச் சங்க காலப் பண்ணனின் வாழ்க்கை மூலம் விவரிக்கிறார். சங்க காலத்தில் தன்னை நாடி வந்தவரை உபசரித்திட வாளை ஈடு வைத்த புரவலரின் செயலைக் கொண்டாடுகிறவர், விருந்தோம்புகிற பண்பு நிலவும் சமூகத்தில் பசியும் பட்டினியும் இருக்காது என்றும், அந்தச் சமூகத்தில் மனிதர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்றும் பத்துப்பாட்டு மூலம் விளக்கியுள்ளார். படைப்புகளுக்கு அப்பாற்பட்டுத் தன்னுடைய அனுபவம் சார்ந்த பதிவுகளும் நூலில் உள்ளன.
நேசமும் அன்பும் இருக்கிற மனதில் துளிர்த்திடும் விருந்தோம்பல் ஓர் அறச்செயல்தான். அது மொழி, இனம், மதம், சாதி, பால் கடந்த நிலையில் மானுடத்தை மேம்படுத்தும். சக மனிதர்கள் மீது கசப்பும் அச்சமும் கொள்ளும் நவீன வாழ்க்கையில், அனைவரும் பின்பற்ற வேண்டிய அறமாக விருந்தோம்பலைப் பரிந்துரைப்பது இன்றைய தேவையும்கூட!
- ந.முருகேசபாண்டியன்,
‘கிராமத்து தெருக்களின் வழியே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: murugesapandian2011@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT