Published : 06 Dec 2015 09:00 AM
Last Updated : 06 Dec 2015 09:00 AM

விடுபூக்கள்: கொச்சியில் சர்வதேச புத்தகத் திருவிழா

கொச்சியில் சர்வதேச புத்தகத் திருவிழா

கொச்சியின் புகழ்பெற்ற சர்வதேசப் புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சர்வதேச அளவில் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தப் புத்தகத் திருவிழா 19-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இலக்கியக் கருத்தரங்குகள், குழந்தைகள் புத்தகத் திருவிழா, புதிய புத்தக வெளியீடுகள் ஆகிய நிகழ்ச்சிகள் பத்து நாட்களும் கோலாகலமாக இங்கு நடக்கும். இத்துடன் கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை வர்ணோத்சவம் என்ற பெயரில் புத்தகத் திருவிழா அரங்கான எர்ணாகுளத்தப்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கேரளத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்களுடன் பெங்குயின், ஹார்ப்பர்காலின்ஸ், பாரகன் மற்றும் ப்ரிசன் ஆகிய ஆங்கில வெளியீட்டு நிறுவனங்களும் இடம்பெறவுள்ளன. “நூறு உறுப்பினர்கள் 14 தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து ஆறு மாதங்கள் புரிந்த பணியின் பலனே இந்த திருவிழா.

எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பின்மையைக் குறைப்பதே இந்தத் திருவிழாவின் நோக்கம். இளம் தலைமுறையினர் புத்தகங்கள் படிப்பதேயில்லை என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு வருடம்தோறும் அதிகரிக்கும் விற்பனை அதைப் பொய்ப்பிக்கிறது” என்கிறார் இத்திருவிழாவை நடத்தும் அந்தரஷ்த்ர புஸ்தகோத்சவ சமிதியின் செயலாளரான இ.என்.நந்தகுமார்.

கேள்வி கேட்கச் சொல்லும் புத்தகம்

இந்தியாவின் முக்கியமான அறிவியக்க ஆளுமைகளில் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பரும் ஒருவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு ‘டு கொஸ்டின் ஆர் நாட் டு கொஸ்டின்: தட் இஸ் த கொஸ்டின்’ என்ற தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தியிருந்தார்.

மதவாத சக்திகள் அரசைப் பின்னிருந்து இயக்குவது குறித்தும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் அந்த உரை பேசியது. அந்த உரைக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் பேராசிரியர்கள், தத்துவவியலாளர், பத்திரிகையாளர் உட்பட மேலும் சிலர்,

‘இன்றைய சமூகத்தில் ஓர் அறிவியக்கவாதியின் பங்களிப்பு என்ன? கேள்வி கேட்க வேண்டியதன் அவசியம் என்ன?’ என்பன போன்ற தளங்களில் தங்களின் கட்டுரைகளை அளித்திருந்தனர். பின்னர் அந்தக் கட்டுரைகளை ரொமிலா மீளாய்வு செய்திருந்தார். அவை எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ‘தி பப்ளிக் இன்டலெக்சுவல் இன் இந்தியா’ என்ற தலைப்பில் புத்தகமாக ‘ஆலெஃப்’ பதிப்பகம் சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.

வங்காள நாவல்களை வாசிக்க ஒரு ஆப்

ஆங்கிலத்தில் வெளியாகும் புத்தகங்களை விரும்பிய வடிவில் வாசிப்பதற்கு பிளிப்கார்ட், அமேசான், கிண்டில் போன்ற எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் பிராந்திய மொழிப் புத்தகங்களை விரும்பும் வடிவில் படிப்பதற்கான பரந்த சாத்தியங்கள் இன்னும் உருவாகவில்லை.

வங்கதேசத்தைச் சேர்ந்த மொபியொ ஆப் லிமிடெட் நிறுவனம் பொய்பொகா (Boipoka) என்ற ஆப் மூலம் வங்காள மொழிப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆகிய தளங்களில் இப்புத்தகங்களை வாசிக்க முடியும்.

இந்தச் செயலி, உலகம் முழுவதும் வங்காளம் வாசிக்கும் 40 ஆயிரம் பேரை எட்டியுள்ளது. ஒரு புத்தகத்தின் விலையில் மூன்றில் ஒரு பங்கு பணமே இந்தச் செயலி மூலம் தரவிறக்கப்படும் இ-புக்குக்கு வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இலவச வங்காளப் புத்தகங்களும் இச்செயலியில் வாசிக்கக் கிடைக்கின்றன.

“ஒரு அச்சிட்ட புத்தகத்தை வாங்குவதற்கு ஆகும் பணமும் நேரமும் அதிகம். தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் வாசிக்கும் பழக்கம் தொடர்வதற்கும் இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும்” என்கிறார் மொபியொ ஆப்-ன் வர்த்தக அபிவிருத்தி அதிகாரியான அஸ்ரப் உல் ஜூபைர்.

இந்தியருக்கு இங்கிலாந்தின் இலக்கிய விருது!

தெற்காசியாவின் இலக்கியப் படைப்புக்காக இங்கிலாந்தின் டிஸ்சி இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் விருதுக்கான பரிசீலனையில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஆறு எழுத்தாளர்கள் உள்ளார்கள்.

பண்பாடு, அரசியல், வரலாறு, மக்கள் ஆகியோரைக் கருவாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நாவலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் வாழும் நீல் முகர்ஜி,

‘த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ நாவலுக்காகவும், ‘த புக் ஆஃப் கோல்ட் லீவ்ஸ்’ நாவலுக்காக மிர்ஸா வஹீதும், ‘ஃபேமிலி லைஃப்’ நாவலுக்காக அமெரிக்காவில் வாழும் அகில் ஷர்மாவும் இந்தியாவில் வாழும் கே.ஆர்.மீரா ‘ஹேங் உமன்’ நாவலுக்காகவும், அனுராதா ராய் ‘ஸ்லீப்பிங் ஆன் ஜூபிடர்’ நாவலுக்காகவும், ராஜ் கமல் ஷா ‘ஷீ வில் பில்ட் ஹிம் எ சிட்டி’ நாவலுக்காகவும் விருதுக்கான பரிசீலனையில் இருக்கிறார்கள்.

இந்த விருது 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மார்க் டல்லி என்பவரே இந்த ஆண்டின் விருதுக் குழுவின் தலைவர். விருது பெறுபவரின் பெயர் அடுத்த ஆண்டு ஜனவரி 16 அன்று இலங்கையில் நடைபெறும் ‘கால் இலக்கிய விழா’வில் (galle literary festival) அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x