Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

அம்பேத்கரின் கருத்துலகத்துக்கு வழிகாட்டி

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்; சாதியை ஒழிக்க இன்றும் இந்தியாவில் போராடிவரும் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கான அடையாள ஆளுமை; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தளித்தவர்; இருபதாம் நூற்றாண்டு இந்தியா கண்ட பேரறிஞர் என்ற பல அடையாளங்களைக் கொண்ட அம்பேத்கர் எழுதிய நூல்களின் முன்னுரைகள்தான் வாசுகி பாஸ்கர் தொகுத்திருக்கும் இந்த நூல். அம்பேத்கரின் கருத்துலகம், அவர் அக்கறையும் புலமையும் கொண்டிருந்த துறைகள், பார்வைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை உயிர்களாகக் கொண்ட பிரபஞ்சத்தைக் காண்பிக்கும் சிறு உலகங்களாக இந்தப் பத்து முன்னுரைகள் உள்ளன.

‘சூத்திரர்கள் யார்’ நூலின் முன்னுரையிலேயே இந்தியா என்னும் நவீன தேசத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் தனக்கு உருவகித்த விமர்சனபூர்வமான பாத்திரத்தைக் குறிப்பிட்டுவிடுகிறார். கற்றறிந்தவருக்கும் ஆய்வறிஞருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை அவர் சொல்கிறார். ‘கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தையவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல் ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்’ என்று வால்டேர் உருவாகாமல் போனதற்கான சூழலைக் குறிப்பிடுகிறார்.

சாதியைக் காக்கும் அறிவு, வர்க்கத்தைக் காக்கும் அறிவு, ஏற்றத்தாழ்வைக் கேள்வி கேட்காத அறிவு, அநீதியைக் கண்டும் காணாமலும் இருக்கும் அறிவு, தனது நலனை, தனது தரப்பை மட்டுமே மையமாகக் கொண்ட அறிவும் அறிவாளிகளும் இன்றும் நிலவும் சூழ்நிலையில் அம்பேத்கர் ஆய்வறிஞர் என்று தான் உருவகித்த இலக்கணத்துக்குப் பொருத்தமானவராக, விமர்சனக் கூர்மையோடு தனியாகத் தனிமையாக இயங்கியிருக்கிறார். அம்பேத்கர் இறந்து கால் நூற்றாண்டு ஆன பிறகு, பெரும் முயற்சிகளுக்குப் பிறகே அவரது எழுத்துகளை முறையாகத் தொகுக்கும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டது என்பதும், இன்னமும் அவரது மொத்த எழுத்துகள், உரைகளைப் பதிப்பிக்கும் பணி பூர்த்தியடையவில்லை என்பதுமே அதற்குச் சான்று.

மக்களை வர்ணங்களாக, சாதிகளாகப் பிரித்து இந்தியச் சமூகத்தை ஆக்கியதோடு, அதில் ஏற்றத்தாழ்வுகளையும் கொடூரங்களையும் தீண்டாமையையும் தாழ்ச்சியையும் பாராட்டிய இந்து மதம், இந்தியச் சமூக உருவாக்கம், வரலாறு ஆகியவற்றை ஆய்ந்து விமர்சிப்பதுதான் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள பெரும்பாலான முன்னுரைகளின் உள்ளடக்கமாகும். மனிதர்கள் சக மனிதர்களை அடக்கவும் ஒடுக்கவும் உருவாக்கிய சமூகவியல் உண்மை, உயிரியல் உண்மையாகப் புரட்டப்பட்ட வரலாற்றுரீதியான மோசடியை ஒரு வழக்கறிஞராகவும் நிபுணத்துவம் கொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் கவிஞராகவும் வாதாடி, பகுத்தாய்ந்து, அழகான உவமைகளால் விளக்குகிறார் அம்பேத்கர். கதே, வால்டேர், டாக்டர் ஜான்சன், பவபூதி, ஆர்னால்ட் டாயின்பீ, பழமொழிகள் எனத் தனது வாதங்களுக்கு எடுத்தாளும் அறிஞர்களும் கூற்றுகளும் அம்பேத்கரின் எழுத்தை வாசிப்பவனுக்குச் சமத்காரம் மற்றும் சாகச உணர்வையும் ஏற்படுத்துபவை.

‘தீண்டப்படாதோர் யார்?’ நூலுக்கான முன்னுரையில் தீண்டாமை தோன்றிய சூழலை ஆராய்வதற்காகத் தான் மேற்கொள்ளும் முறைமையில் கற்பனையும் அனுமானமும் முக்கியப் பங்காற்றாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார். தனது நூலை வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிடக் கலைப் படைப்பு என்று கூறுவதுதான் பொருத்தம் என்ற வாதத்தை வைக்கிறார். ‘இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக் கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது’ என்று தனது பணியை உருவகிக்கிறார்.

அத்துடன் இந்த முன்னுரையில், யூதர்களுக்கு நடந்த கொடூரங்களும், கறுப்பினத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் நிறவெறியும் உலகளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியாவில் நிலவும் தீண்டாமையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் கொடுமைகளும் ஐரோப்பிய அறிஞர்களின் கண்களில் படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

அவர் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து வெவ்வேறு துறைகள், உள்ளடக்கங்கள், பிரச்சினைகள் தொடர்பில் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதை முன்னுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. ஒரு விஷயம் குறித்துத் தற்போது எழுதுவதற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருந்ததையும் அவற்றின் அழுத்தத்தையும் களைப்போடு குறிப்பிடுகிறார்.

‘சாதியை அழித்தொழித்தல்’ புத்தகத்துக்கான முன்னுரை அனைவரும் படிக்க வேண்டியது. ஜாத் - பட் - தோடக் மண்டல் என்னும் இந்து சீர்திருத்த அமைப்பின் வருடாந்திரக் கருத்தரங்கு ஒன்றுக்குத் தலைமையேற்க அம்பேத்கர் இசைவு தெரிவித்து, தலைமையுரை ஆற்றுவதற்காக எழுதிய உரைதான் அந்த நூல். ஆனால், அந்த உரையின் உள்ளடக்கங்களுடன் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு முரண்பாடு ஏற்பட்டதால் ஆற்றப்படாமல்போன உரை அது. அந்த உரைதான் ‘சாதியை அழித்தொழித்தல்’ நூல். அதற்கு எழுதப்பட்ட முன்னுரையைப் படிக்கும்போது, அம்பேத்கர் தனது கருத்துகள், செயல்பாடுகளுக்காகத் தனது வாழ்நாளில் சந்தித்த எதிர்ப்புகளையும் தணிக்கையையும் நஷ்டங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.

எத்தனையோ ஜனநாயக உரிமைகளும், சமூக நீதியும் வென்றெடுக்கப்பட்டதாக நாம் நம்பிய இன்றைய காலகட்டத்தில் திரும்பவும் சாதிய, மதவாத, இனவாதப் போக்குகளும் முரண்பாடுகளும் மோதல்களும் திரும்ப உருவெடுத்திருக்கும் நிலையில், இந்தியச் சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சிக்குத் துவக்கமாகத் திகழும் நூல் இது.

-ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

------------------------------

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

தொகுப்பு: வாசுகி பாஸ்கர்

நீலம் பதிப்பகம்

விலை: ரூ.150

தொடர்புக்கு: 99942 0426

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x