Published : 28 Jun 2014 12:00 AM
Last Updated : 28 Jun 2014 12:00 AM
‘பெண் வெறுப்பு என்னும் நீண்ட படலம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அம்பை எழுதியிருந்த கட்டுரைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் மறுப்பும் அம்பையின் பதிலும் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன.
ஆதாரமற்ற வரிகள்
- ஜெயமோகன்
என்னுடைய படத்துடன் அம்பை எழுதிய ஒரு கட்டுரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் (21.06.2014) வெளிவந்துள்ளது. அதில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் நடந்து கொண்ட முறை பற்றி எந்த வித ஆதாரமும் இல்லாத வரிகள் பல உள்ளன. அவையெல்லாம் என்னைக் குறிப்பவை என்னும் பொருள் வரும்படி அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நான் எந்த ஒரு தருணத்திலும் எந்த ஒரு பெண் எழுத்தாளரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில்லை. நேரிலோ கடிதங்களிலோ தொலைபேசியிலோ. எவரிடமும் எவ்வகையான தொடர்புகளையும் வைத்துக்கொண்டதில்லை.
தமிழிலும் இந்திய மொழிகளிலும் எழுதிய முதன்மையான பெண் எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம்செய்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவன் நான். அவர்களின் கலைத்திறனைப் புகழ்ந்தும் அவர்களைப் புரிந்துகொள்ளும் வழிகளை விவாதித்தும் நான் எழுதிய கட்டுரைகளே இன்றும் பெண்ணெழுத்தைப் புரிந்துகொள்ள உதவியானவை. அம்பை உட்பட எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணெழுத்தாளரைப் பற்றி அப்படி எந்தக் கட்டுரையையும் எழுதிவிடவில்லை.
கடந்த காலத்தில் பெண் எழுத்துக்களைப் பற்றி, பொதுவாழ்க்கையில் பெண்களைப் பற்றிச் சிலர் தரக்குறைவாக விமர்சித்தபோதெல்லாம் மிகக் கடுமையாக அதற்கு எதிராக எதிர் வினையாற்றியவன் நான். அக்கட்டுரைகள் எல்லாமே இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களின் ஒழுக்கத்தை விவாதிக்க முற்படும் ஆண்களைக் கண்டித்து நான் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு தருணத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆளுமை எதையும் நான் பேசுபொருளாகக் கொள்வதில்லை.
பெண்ணெழுத்து என்னும் பேரில் இவர்கள் எழுதிய இலக்கியம் தரமற்றது என்றும், தரமான பெண்ணெழுத்து உள்ளதே... அந்த தரத்தில் ஏன் எழுதக் கூடாது என்றும் எழுதினால் அதைப் பெண்ணைப் பாலியல்ரீதியாக அவமதிப்பது, பெண் குலத்தை இழிவுபடுத்துவது என்றெல்லாம் திரித்து எதிர்கொள்ளும்போக்கு நாகரீகம் அற்றது.
ஊடகத் தந்திரம் அல்ல
- அம்பை
இந்த விவாதத்தை ஜெயமோகன் மற்றும் அனைத்துப் பெண்ணெழுத்தாளர்கள் என்றமைந்த நேரெதிர் மோதல் புதைகுழியிலிருந்து வெளியே எடுத்து அதைப் பண்பாட்டுத் தளத்திலும் சரித்திரரீதியிலும் அணுகவே எனது கட்டுரை எழுதப்பட்டது. கூட்டறிக்கை எங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது. இதை வேறொரு பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நாங்கள் எல்லோருமே அறிவோம். என் கட்டுரையின் நோக்கம் இதுதான்.
‘தி இந்து’ வோ எங்கள் இருவர் புகைப்படங்களையும் பிரசுரித்தது. ஜெயமோகனை எதிர்க்க ஊடகத் தந்திரங்கள் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர் தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது. அவரைப் போல் அல்லாமல் எதையாவது சொல்ல வேண்டு மென்றால் நேரிடையாகப் பேசுவதுதான் என் வழக்கம். தமிழில் கெட்ட வார்த்தைகள்கூட எனக்குத் தெரியாது! என்னை ஆராதனை செய்பவர்களும் கிடையாது, வலைத்தளமும் கிடையாது, ஊடகத் தந்திரங்கள் செய்ய. ஒரு கட்டுரை எப்படிப் பிரசுரமாகப் போகிறது என்பது என் பொறுப்பில் இல்லை. பார்க்கப்போனால்
‘தி இந்து’ பிரசுரித்த ஜெயமோகனின் புகைப்படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது! யாருடைய ஊடகத் தந்திரமோ தெரியவில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT