Published : 29 Nov 2015 03:32 PM
Last Updated : 29 Nov 2015 03:32 PM
அதிக எண்ணிக்கையில் நூல்கள் எழுதி அறியப்படாது போன ஆய்வாளர்களுக்கு மத்தியில் தம் ஓரிரு நூல்கள் வழி காலங்கடந்து நிலைபெறுபவர்கள் சிலர். அவர்களில் இருவர்தான் மது. ச. விமலானந்தமும் கா. மீனாட்சி சுந்தரமும்.
இவர்களில் தமிழ் இலக்கிய வரலாறு என்றவுடன் உடனே நினைவுக்கு வருபவர்களில் முதன்மையானவர் மது.ச. விமலானந்தம். நூற்றாண் டுகளின் அடிப்படையில் இலக்கிய வரலாறு எழுதிய மு. அருணாசலத்தின் இலக் கிய வரலாறுகளோடு ஒப்ப வைத்து எண்ணமுடியாமல் போனாலும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கண, இலக்கியங்களை நம்பத் தகுந்த ஆதாரங்களோடு அறிமுகப்படுத்திய நிலையில் மது.ச. விமலானந்தத்தின் இலக்கிய வரலாறு குறிப்பிடத்தக்கது. பாடநோக்கில் எழுதப்பட்ட எண்ணிலடங்கா இலக்கிய வரலாறுகளுக்கு மூலாதாரமாய் விளங்குவது இவரது இலக்கிய வரலாறே. பக்க அளவில் விரிவானதாகவும், மாணவர்களின் வாசிப்பிற்கு நம்பகத்தன்மையுடனும் திகழ்கிறது இவரது இலக்கிய வரலாறு.
“ஐரோப்பியர் தமிழ்ப்பணி” என்னும் நூலின் வழி தமிழ் ஆராய்ச்சி உலகில் அறியப்பட்டவர் கா. மீனாட்சி சுந்தரம். 16-ம் நூற்றாண்டு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரை பல்வேறு நிலைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய ஐரோப்பியர்களின் பல்வேறு செயல்பாடுகளை விரிவான நிலையில் பதிவுசெய்தது இவரது நூல். எல்லிஸ், கால்டுவெல், ஜி.யூ.போப் எனப் பரவலாக அறியப்பட்ட ஐரோப்பியர்களைக் கடந்து ஓரிரு பணிகள் செய்த ஐரோப்பியர்களையும் கவனத்தில் கொண்டு இவரது நூல் உருப்பெற்றுள்ளது. மா.சு.சம்பந்தனின் அச்சும் பதிப்பும், மயிலை சீனி. வேங்கட்சாமியின் 19-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் ஆகிய நூல்கள் விட்ட இடைவெளிகளைத் தன் நூலின் வழி நிறைவுசெய்தவர் இவர்.
தரவுகளைத் திரட்டித் தொகுப்புகளாக வழங்கப்படுபவை மட்டும் ஆய்வுகளா? என்று கேட்பவர்களுக்கு இவர்கள் உருவாக்கிய நூல்களே இன்றைய நிலையில் சான்றுகளாகத் திகழ்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT