Published : 29 Nov 2015 03:29 PM
Last Updated : 29 Nov 2015 03:29 PM

யார் தலித் ஓவியர்? எது தலித் ஓவியம்? - ராஹி கெய்க்வாட் சந்திப்பு

இந்திய ஓவியத் துறையில் ‘தலித் ஓவியம்’ என்னும் புதிய பிரிவு அறிமுகம் பெற்று அது விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. சாதியரீதியாகப் பிரிந்திருக்கும் இந்திய சமூகத்திலிருந்து உருவாகும் படைப்புகளும் வலுவாக சாதியில் வேரூன்றியவையே என்கிறார் தீப்தா ஆச்சார். பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் குறிப்பிடத்தகுந்த கலை விமர்சகர். மும்பையில் உள்ள பாவு தாஜி லாட் அருங்காட்சியகத்தில் சமீபத்தில் சாதிக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையிலுள்ள தொடர்பு குறித்துப் பேசினார்.

இந்திய ஓவிய வரலாற்றில் தலித் ஓவியம் என்ற வகைமை எப்போது, எப்படி அறிமுகமானது?

சமகால இந்திய கலைத் துறையில் பிரதானமான ஒரு பிரிவாக தலித் ஓவியம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தலித் ஓவியம் என்றவொன்று ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வியை நாம் எழுப்பலாம். டெல்லியைச் சேர்ந்த சவி சவர்க்கர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சந்ரு போன்ற சில அரிதான ஓவியர்களே தங்களது படைப்புகளை இவ்வகைமையில் அடையாளம் காண்கிறார்கள்.

வகைமைகளும் முத்திரைகளும் பிரச்சினைக்குரிய விஷயங்களாகவே உள்ளன. தலித் ஓவியம் என்பதற்கான வரையறை என்ன? யார் தலித் ஓவியர்? இது பற்றி யோசித்துள்ளீர்களா?

தலித் ஓவியம் என்பதே சற்றுப் புதிய ஒன்றுதான். அதனால் திட்டவட்டமான எல்லைகளை இப்போதே வகுத்துவிட முடியாது. தலித் ஓவியம் குறித்த ஆய்வுகள் முன்பு மானுடவியல் அல்லக் நாட்டாரியல் ஆய்வுகளின் ஒருபகுதியாகவே இருந்துவந்தன. கடந்த பத்தாண்டுகளில்தான் கலை விமர்சனத் துறையில் தலித் ஓவியம் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

மரபான தலித் சமூக நடைமுறைகளை மீட்டுருவாக்கம் செய்வதாகவோ, பொது வெளியில் தலித்களின் வாழ்க்கை நிலை குறித்த காட்சிகளை உருவாக்குவது பற்றியதாகவோ அந்த விவாதங்கள் இருக்கின்றன. மிக அரிதாகவே ஒரு குறிப்பிட்ட ஓவியர் அல்லது படைப்பு சார்ந்து குவிவதாக விவாதங்கள் உள்ளன. பெரும்பாலும் மேம்போக்காகவோ, கூர்மையான அரசியல்தன்மையுடனோ மட்டுமே இந்த விவாதங்கள் அமைந்துவிடுகின்றன.

தலித் ஓவியம் என்ற பிரிவிற்கான தேவை என்ன? உதாரணத்திற்கு உயர்சாதி ஓவியம் என்ற பிரிவு நம்மிடம் இல்லையே?

முத்திரை ஏதுமற்ற அல்லது நடுநிலையானதென்று கருதப்படும் நவீன இந்திய ஓவியங்களின் கருப்பொருளும், அதன் அக்கறைகளும், சமூக அடுக்குகள் குறித்த அவற்றின் புரிதலும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டுக்காட்டுவதுதான் தலித் ஓவியம் என்ற பிரிவின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. சமகால இந்திய ஓவியம் என்பது முத்திரையேதுமற்ற உயர்வர்க்க கலைப்பிரிவாக உள்ளது. அது தனது மேட்டிமைத்தன்மையைத் தனியாகக் கோரவேண்டியதில்லை. ஆனால், தலித் ஓவியம் என்பது மேட்டிமை ஓவியப் பாணிகளின் சாதியப் பரிமாணங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்..

இப்போதைய சூழலில் கூடுதல் எண்ணிக்கையிலான ஓவியர்கள் தங்களைத் தலித் ஓவியர்கள் என்றோ தலித் தன்னுணர்விலிருந்து படைப்புகளை உருவாக்குபவர் களாகவோ அடையாளம் காணாத நிலையில் ஓவியக்கலை தொடர்பான விவாதத்தில் தலித் ஓவியர்களுக்கு என்ன பங்களிப்பு இருக்கமுடியும்?

இந்திய நவீன ஓவியங்களைக் கையாளும் நிறுவனக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை ஓவியக் கலைஞரின் பெயரே மையமாக இருக்கிறது. ஆனால், தலித் சிந்தனை என்ற சட்டகத்துக்குள் ஓவியத்தை வைத்துப் பார்க்கும் முயற்சிகளெல்லாம் தனிநபர் என்ற கோணத்தைத் தாண்டியே அந்தத் தனிநபரின் கலையைப் பார்க்கின்றன.

சவி மற்றும் சந்ரு போன்ற ஓவியர்கள் இந்த அடையாளத்தைப் பிரக்ஞை பூர்வமாகவே தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் பலர் தங்களைத் தலித் ஓவியராக அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர். ஆனால் பிரதானமான கண்காட்சி அரங்குகளோ நிறுவனரீதியான ஆதரவோ இதுவரை இல்லை.

சாதியை ஓவியத்தில் காட்சிப்படுத்துவதிலுள்ள சிக்கலைச் சொல்லுங்கள்?

உதாரணத்திற்கு, அச்சு அசலாக வரையும் ஓவிய பாணியில், ஒரு சாதி மனிதரின் உடலை எப்படி வரைவது என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு உருவம், நிலப்பரப்பு, பொருள் ஆகியவற்றைக் காண்பிப்பதன் மூலம் சாதி மற்றும் சமூகத்தை எப்படி உள்ளடக்கமாக்குவது? இது போன்ற பிரச்சினைகள்தான் தலித் ஓவியர்கள் எதிர்கொள்பவை.

© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x