Published : 08 Nov 2015 10:55 AM
Last Updated : 08 Nov 2015 10:55 AM
மகராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ் 1972-ல் பிறந்தவர். அவர் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். அவரது முதல் நாவலான “நக்கலிஸ்தான் கி தலாஷ்” (In search of an oasis) அவரது 24-வது வயதில் எழுதினார். அவரது மூன்றாவது நாவலான “கடவுளின் நிழலில் கண்ணாமூச்சி” அவருக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்தது. எழுத்தாளர்கள் மீதான மதவெறித் தாக்குதலுக்கு எதிராக சாகித்ய அகாடெமி விருதைத் திருப்பிக் கொடுத்தவர்களுள் இவரும் ஒருவர். அக்டோபர் 29 அன்று சென்னையில் ‘சரிநிகர்’ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சகிப்பின்மைக்கு எதிரான சென்னைப் பிரகடனம் வெளியிடப்பட்ட்து. அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தபோது அப்பாஸ் தி இந்துவுக்கு அளித்த சிறப்புப் பேட்டி :
விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் என்ன விளைவுகளை ஏற்படுத்த முடிந்தது?
எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுத்ததன் விளைவாகத்தான், நாம் இன்று இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில், எம்மை யாரும் தடுக்க முடியாதென்று கருதும் அரசியல் கட்சிகள் தாங்கள் செய்த நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும். வெறுப்பின் அரசியலுக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள். கடந்த 2000 வருடங்களாக நமது இந்தியாவில் விவாதிக்கும் கலாச்சாரம் இருந்துவந்திருக்கிறது. அந்த விவாத கலாச்சாரம் மையத்துக்கு வருகிறது. புத்தர் கூறியது போல “உண்மை தனியானது”. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், தங்கள் வெறுப்புணர்வை முழுவதும் கொட்டினாலும், மக்கள் ஒற்றுமையின் முன் எதுவும் செய்ய முடியாது. நாம் அமைதியின் கீதத்துக்காகப் போராடுவோம்.
களத்தில் போராடாமல் விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது போராட்டமே அல்ல என்று விமர்சிக்கப்படுகிறதே?
விருதுகளைத் திருப்பித் தருவதை மட்டுமே போராட்ட வடிவமாகக் கருத முடியாது. எதிர்ப்பைத் தெரிவிக்கப் பல வழிகள் உள்ளன. விருதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நாங்கள் மதவெறிக்கு எதிரானவர்கள்” என்ற செய்தியை எழுத்தாளர்கள் வெளிப் படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர்கள், கூட்டறிக்கை மட்டும் வெளியிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதுவொரு முக்கியமான நடவடிக்கை. இந்தச் செய்தி உருதுப் பத்திரிக்கைகளிலும் இடம்பெற்றது. உருது எழுத்தாளர் களையும் இவ்வாறு செய்ய நாங்கள் வலியுறுத்தினோம். விருதுகளைத் திரும்ப வழங்குவதுமட்டுமே போராட்ட வடிவமல்ல.
சாகித்ய அகாடமியின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?
அந்தத் தீர்மானத்தை நானும் வாசித்தேன். சாகித்ய அகாடெமி செயற்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிக மிகத் தாமதமான செயல். அதுவும் எழுத்தாளர்கள் கொடுத்த நெருக்கடிக்குப் பிறகுதான் இதைச் செய்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் விருதைத் திருப்பிக் கொடுத்தது எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து மட்டுமல்ல. சகிப்பின்மைக்கும், அதுபற்றிய அரசின் மவுனத்துக்கும் எதிராகத்தான். மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அரசின் கூட்டாளிகள் கசல் இசை நிகழ்ச்சி நடத்த விடாமல் தடுக்கின்றனர். முகத்தில் மை பூசுகின்றனர். மாட்டிறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லப்படு பவரைக் கொலை செய்கின்றனர். அரசு, இதுகுறித்துத் தெளிவான நிலை எடுத்து, பயங்கரவாதிகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முடியும்.
நீங்கள் எழுதிய முதல் நாவலுக்கே வழக்கைச் சந்திக்க நேர்ந்ததல்லவா?
என் முதல் நாவல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவைப் பற்றி, காதலைப் பற்றி, அந்த உணர்வுகளைப் பற்றி, இருவரின் மனதிலும் உள்ள எண்ண ஓட்டங்களைப் பற்றிப் பேசியது. இவற்றைப் பற்றியெல்லாம் பேச உருது பேசும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனுமதிப்பதில்லை. இதனால்தான் அந்த நாவலுக்கு எதிர்ப்பு வந்தது.
உங்களது அடுத்த நூல் குறித்து?
‘ரூசின்’ என்ற எனது நான்காவது நூல் பிப்ரவரி மாதத்தில் உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும். ரூசின் என்பது நான் உபயோகப்படுத்தும் புதிய வார்த்தை. ரூ என்றால் உயிர்/ஆன்மா. சென் என்றால் வலி. ஆன்மாவின் வலி என்று பொருள். குழந்தைகளைப் பற்றி நாம் அதிகம் பேசியதே இல்லை. இந்த நூல் துரோகம் இழைத்துக்கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் பற்றிய நூலாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT