Published : 15 Nov 2015 11:13 AM
Last Updated : 15 Nov 2015 11:13 AM
தோல்வியாளர்கள் வசீகரமானவர்கள்
இத்தாலிய நாவலாசிரியரும் தத்துவவியலாளருமான உம்பர்தோ எக்கோ, ‘நியூமரோ ஜீரோ’ என்னும் புதிய நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நாவலின் வெளியீட்டையொட்டி அவர் சமீபத்தில் இங்கிலாந்து வந்திருந்த போது, புலமையின் சந்தோஷங்கள் அனைத்தும் தோல்வியாளர்களுக்கே என்று கூறினார். வெற்றி மறுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்தே அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது இப்பதிலைக் கூறினார். இலியட் காவியம் முதல் தாஸ்தாவெஸ்கி வரை தோல்வியுற்றவர்களையே நாயகர்கள் ஆக்கினார்கள் என்று தனது வாதத்துக்கான காரணத்தையும் சொன்னார் உம்பர்தோ எக்கோ. “ உண்மையான இலக்கியம் தோல்வியாளர்களைப் பற்றியே பேசுகிறது. மேடம் பவாரி தோற்றவள்தான். தோல்வியாளர்கள்தான் கூடுதல் வசீகரமானவர்களாகவுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் முட்டாள்கள்…ஏனெனில் அவர்கள் எப்போதும் சந்தர்ப்பத்தால் வெற்றி பெறுபவர்கள்” என்கிறார். இவரது ‘நேம் ஆப் தி ரோஸ்’ நாவல் உலகப் புகழ் பெற்றது.
3டி சினிமாவாகும் ஆடு ஜீவிதம்
மலையாள எழுத்தாளர் பென்யாமினின் ‘ஆடு ஜீவிதம்’. 2008-ம் ஆண்டு வெளிவந்து பெரும் கவனம் பெற்றது. இந்த நாவல் கேரள அரசின் சாகித்திய அகாடமி விருதையும் பெற்றுள்ளது. தன் வாழ்க்கை மாற்றமடையப் போகிறது என்ற நம்பிக்கையுடன் நவ்ஜீப் என்னும் இளைஞன் சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் போய் இறங்குகிறான். அங்கே ஆள் அரவமற்ற பாலைவனத்தில் ஆடுகளுடன், ஒட்டகங்களுடன் அடைக்கப்படுகிறான். வெளியுலகத் தொடர்பற்று அவனது வாழ்க்கை ஆடுகளுடன் ஆனதாக மாறுகிறது. ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை பென்யாமின் எழுதியுள்ளார். இந்த நாவலை வாசித்த முன்னணி மலையாள இயக்குநர் பிளஸ்ஸி இதை 3டி படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் பிருத்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த நாவல் தமிழில் என்.ராமன் மொழிபெயர்ப்பில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் ஜந்து!
இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த படைப்புகளில் ஒன்று ஃபிரன்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ (ஆங்கிலத்தில் ‘Metamorphosis’). எண்பது பக்கங்களுக்குள் முடிந்துவிடும் இந்த நீள்கதையால் தாக்கத்துக்குள்ளாகாத படைப்பாளிகள் குறைவு. இந்தக் கதை வெளியாகி இந்த ஆண்டுடன் நூறு ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன.
உலகெங்கும் உள்ள படைப்பாளிகளும் இலக்கிய வட்டங்களும் இந்த தருணத்தில் காஃப்காவை உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார்கள். ‘ஒருநாள் கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு கண்விழித்த கிரகோர் சாம்சா, தான் ஒரு பூதாகரமான ஜந்துவாக உருமாறியிருப்பதைக் கண்டுகொண்டான்’ என்று ஆரம்பிக்கும் கதையின் தொடக்க வரிகளே இருபதாம் நூற்றாண்டுக்குக் கொடுக்கப்பட்ட முகப்புரை போன்று பின்னால் ஆனது. “மாறுபட்ட வகையில் எழுதுவது சாத்தியம் என்பதை ‘உருமாற்றம்’ கதையைப் படித்த பிறகே நான் தெரிந்துகொண்டேன்” என்று காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் கூறியிருக்கிறார். இன்னும் விளாதிமிர் நபக்கோவ் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களை காஃப்காவின் ஜந்து விட்டுவைக்கவில்லை. ஜெர்மானிய மொழியின் ஆர்ப்பாட்டமில்லாத இளவரசன் என்று அழைக்கப்பட்ட காஃப்காவின் படைப்புகள் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டிருந்தன என்பது காஃப்காவின் எழுத்து வல்லமைக்கு ஓர் உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT