Published : 28 Jun 2014 09:00 AM
Last Updated : 28 Jun 2014 09:00 AM
கவிஞராக அறிமுகம் பெற்றுள்ள அ. வெண்ணிலா, சிறுகதை ஆசிரியராகவும் தன்னை நிலைப் படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது, ‘பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்’என்னும் தொகுப்பு.
யாரும் பேசாப் பொருளை இவர் கையில் எடுக்கவில்லை. அவசியம் பேசியே ஆக வேண்டியதைத்தான் கதைகளின் வாயிலாகச் சொல்லி யிருக்கிறார். கிட்டத்தட்ட எண்பது சதவீதம் பெண்கள், தங்கள் சிறு வயதில் நேரடியான அல்லது மறை முகமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதைத் தான் அழுத்தமாகப் பதிவுசெய் கின்றன முதல் நான்கு கதைகளும்.
அறிமுகமான நபர்களால் நிகழ்த் தப்படுகிற பெண் மீதான வன் முறையைத் தோலுரிக்கின்றன சிறு கதைகள். பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் விக்கித்து நிற்கிற இடத்தில் உண்மை ஓங்கி அறைகிறது. வெளியே சொன் னால் திட்டோ, தண்டனையோ கிடைக்கக்கூடும் என்ற அச்சமே அவர்களை அப்படி வாயடைக்கச் செய்துவிடுகிறது.
உடல் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறை மட்டுமே பெண்ணுக்கு எதிரான கொடுமையல்ல. பெண் ணுக்கு மறுக்கப்படுகிற அடிப்படை உரிமைகளில் தொடங்கி, கணவன், மனைவிக்குள் இருக்க வேண்டிய இடைவெளி மறுக்கப்படுவதுவரை எல்லாமே பெண் மீதான வன்முறை தான் என்பதையும் கதைகளின் ஊடாகப் பதிவுசெய்திருக்கிறார் வெண்ணிலா.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் சித்திரிக்கப்பட்டிருக்கும் பெண் வளர்கிறாள்; வேலைக்குப் போகி றாள்; முதிர்கன்னியாகிறாள்; துணைவியாகிறாள்; தாயாகிறாள்; கிழப் பருவம் எய்துகிறாள். ஒவ் வொரு பருவத்திலும் அவள்மீது பல இடங்களில் இருந்தும் ஏவப் படும் கண்ணுக்குத் தெரியாத வன் முறை அவளை வீழ்த்துகிறது.
எளிய சொற்களால், நேர்த்தி யாகச் சம்பவங்களை வெண்ணிலா தொகுத்திருக்கிறார். சில கதை களின் முடிவு ஊகிக்கக்கூடியதாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதிகம் அறியப்படாத வட ஆர்க் காடு, தென்னார்க்காடு வட்டார மொழியில் கதை பயணிக்கிறது. அந்த வட்டார மொழியின் புதுப் புதுச் சொற்களை அறிந்துகொள்ள முடிகிறது.
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
அ. வெண்ணிலா
வெளியீடு: விகடன் பிரசுரம்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
விலை: ரூ.100
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT