Published : 06 Mar 2021 02:32 PM
Last Updated : 06 Mar 2021 02:32 PM
சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் 44-வது புத்தகக் காட்சியில் தடபுடலாய் ஓடியாடிக் கொண்டிருந்த… டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மற்றும் பதிப்பாளர். மு.வேடியப்பனைச் சந்தித்தேன்.
இன்றைய தேதியில், வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ், படைப்பாளிகளின் நிலவரைக் கூடமாகத் திகழ்கிறது. விதவிதமான புத்தகங்களை வெளியிடுகிறது இப்பதிப்பகம்.
முன்னணி எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளிகள், இளைய கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சிறுவர் இலக்கியங்கள் என மொழியின் எல்லா திசைகளிலும் சுற்றிச் சுழல்கிறது இவரது மின் விசிறியின் மூவிலைகள்.
இந்த ஆண்டு மட்டும் சென்னை புத்தகக் காட்சியில், பிரத்தியேகமாக ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேலான தலைப்புகளில், வெவ்வேறு 'ஜானர்'களில் புத்தம் புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
அழகு மிதக்கும் வண்ண அட்டைப் படங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, கஞ்சத்தனம் இல்லாத காகிதம், சுத்தமான அச்சு... என டிஸ்கவரி புக் பேலஸின் புத்தகம் ஒவ்வொன்றும் பதிப்புலகத்தின் சொர்க்க வாசலாகத் திகழ்கிறது.
"எனது டிஸ்கவரி புக் பேலஸில் இருந்து வெளியாகிற ஒவ்வொரு புத்தகமும் அனைத்து வாசகர்களின் கண்களில் படாமல் ஒளிந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறேன். அதனால்தான், அட்டைப் படம், வடிவமைப்பு, அச்சிடல் அனைத்திலும் மிகுதியான கவனம் செலுத்துகிறேன். வாசகனுக்கு நான் விலையின்றிப் புத்தகத்தைக் கொடுக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைக்கிறேன். வாசகனும் காசு கொடுத்துதான் அப்புத்தகத்தை வாங்குகிறான். அப்படிப் புத்தகத்தை வாங்குகிற வாசகன் அதன் வெளியீட்டு முறையிலும், உள்ளடக்கத்திலும் திருப்தி அடைய வேண்டும். அதுதான் ஒரு பதிப்பக வெற்றியின் முதல் தொடக்கப் புள்ளி. அந்தத் தொடக்கப் புள்ளியை அழகுணர்வோடு இன்றுவரை இட்டு வருகிறேன்.
என்னையும், எனது டிஸ்கவரி புக் பேலஸையும் தேடிவரும் ஒரு படைப்பாளியின் புத்தகத்தின் முதல் வாசகன் நான்தான். என்னை மகிழ்ச்சியுற வைக்கும், என்னைத் திருப்தியுற வைக்கும் படைப்பை மட்டுமே நான் பிரியமுடன் பிரசுரிப்பேன்" என்கிறார், புன்னகையுடன் வேடியப்பன்.
நிறைய இளைய படைப்பாளிகளின் முதல் நூலை எந்த நம்பிக்கையில் வெளியிட முன்வருகிறீர்கள்?
''அவர்களுடைய படைப்புகள் என்னைத் திருப்தி அடைய வைக்கிற நம்பிக்கையில்தான் அதை வெளியிடத் துணிகிறேன். அவர்களின் மொழி என்னோடு பேச வேண்டும். என் யோசனையில் தித்திப்பு தூவ வேண்டும். அவர் யாராக இருந்தாலும் அவரது புத்தகப் பறவைக்கு டிஸ்கவரி புக் பேலஸ் கூடு கட்டித் தரும்.
பெருமைக்காக நான் சொல்லவில்லை. இன்று, இப்போது, இந்தத் தேதியில் நான் வெளியிட்டுள்ள சில இளைஞர்களின் முதல் புத்தகம், அவர்களுக்குப் புதிய அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் எதிர்காலத்தில் பெரும் படைப்பாளிகளாக மிளிர்வார்கள். உள்ளடக்கத்தையும் அப்புத்தகங்களின் விற்பனையையும் வைத்துத்தான் இதனை நான் பெருமையாகக் கருதுகிறேன்" என்கிற பதிப்பாளரின் கண்களில் நம்பிக்கைக் கொடி பறந்தது.
சரி, தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் டிஸ்கவரி புக் பேலஸின் எல்லாப் புத்தகங்களும் எளிதில் கிடைக்கின்றனவே... எப்படி இது சாத்தியம்? உங்கள் விற்பனை மேலாண்மையின் ரகசியம் என்ன?
"நல்ல கேள்வி. இதுவொன்றும் ரகசியம் அல்ல. விற்பனை தந்திரமும் அல்ல. இன்றைய நவீன யுகத்தின் பின்னலமைப்பு (Network) முறையையும் எங்களது உள்ளமைப்புக் கட்டமைப்புப் பணிகளையும் ஒருங்கிணைத்து எங்கள் விநியோக திட்டத்தை நாங்கள் மேலாண்மை செய்து வருகிறோம். கடைக்கோடி தமிழனுக்கும் எங்கள் புத்தகம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது செயல் திட்டம்.
அஞ்சல் வழி வேண்டுதல், சமூக ஊடகங்கள் வழிப் பரவல், கூரியர் சேவை, சிற்றூரில் கூட இருக்கும் புத்தகக் கடை மூலம், அனைத்து ஊர்களிலும் நடைபெறும் புத்தகக் காட்சி மூலம் எங்கள் விற்பனை பின்னலமைப்பைத் தெளிவுறச் செயல்படுத்துகிறோம். 'கேட்டவுடன் கிடைக்கும்' என்கிற உத்தரவாதத்தை வாங்குபவரிடத்தில் பெரும் பாடுபட்டுச் சேர்த்துவிட்டோம். அந்த உறுதி எங்களைப் பின்னிருந்து முன் செலுத்துகிறது" என்கிறார் பதிப்பாளர் வேடியப்பன்,
க.நா.சுவின் - 'அவதூதர்’, 'ஆட்சொல்லி’, எம்.வி.வெங்கட் ராமின் 'என் இலக்கிய நண்பர்கள்', சி.சு.செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்', பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்', பூமணியின் 'வெக்கை', 'வாய்க்கால், லா.ச.ராவின் 'கல் சிரிக்கிறது', 'அபிதா’, 'புத்ர’, தஞ்சை ப்ரகாஷின் 'கரமுண்டார் வீடு' உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் புத்தகங்கள் பலவற்றைத் தேடித் தேடி வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, வாழ்ந்து கொண்டிருக்கும் பல படைப்பாளிகளின் புத்தகங்களையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார் வேடியப்பன்.
கபிலன் வைரமுத்துவின் 'அம்பறாத்துணி', சக்தி ஜோதியின் 'இப்பொழுது வளர்ந்துவிட்டாள்', நா.முத்துக்குமாரின் அனைத்து புத்தகங்கள், கோ.வசந்தகுமாரின் 'சதுர பிரபஞ்சம்', அ.உமர் பாரூக்கின் 'ஆதுரகாலை', வேல.ராமமூர்த்தியின் 'குருதி ஆட்டம்' உள்ளிட்ட ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.
இப்பணிகளுக்கு இடையில் கரோனா பெருந்தொற்று நாட்களில், பொதுமக்கள் வீடடங்கி இருந்த அந்தத் துயர் பொழுதுகளில் தள்ளுபடி விலையில், அனுப்பு கூலியைத் தானே ஏற்றுக்கொண்டு உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழுமிடங்களுக்கு எல்லாம், தனது பதிப்பக வெளியீடுகளைக் கொண்டு சேர்த்து பெரும் வாசகப் பரப்பை உருவாக்கியிருக்கிறார் வேடியப்பன்.
சென்னையில், டிஸ்கவரி புக் பேலஸ், 6 - மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்கிற முகவரியில் கடலாக விரிந்து நிற்கிறது.
படைப்பாளிகளின் நிழல்தரு விருட்சமாக, வேடந்தாங்கலாக விளங்கும் வேடியப்பன், தற்போது ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், அரங்கு எண் F19-ல் தனது புத்தக சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார்.
'தனியாக நடக்கும்போது வேகமாய் நடப்பாய்; சேர்ந்து நடக்கும்போது நீண்ட தூரம் நடப்பாய்' - என்கிற பொன்மொழிக்கு ஏற்ப, படைப்பாளிகள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களோடு அன்பின் நிழல் மெழுகிப் பயணிக்கும் பதிப்பாளர் வேடியப்பனின் விலாசத்தை வெற்றி தேவதை நிமிடந்தோறும் விசாரித்துக் கொண்டே இருக்கிறாள் இப்போது.
வண்ண வாழ்த்துகள்... வேடியப்பன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT