Published : 17 Nov 2015 10:39 AM
Last Updated : 17 Nov 2015 10:39 AM
மரங்களோடு மனுசனுக்கு உள்ள தொந்தங்கள் பிரிக்க முடியாதவை. அது பற்றி திரும்பத் திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
மரம்தான் மனிதனுடைய முதல் வீடு. அதன் நிழலின் கீழே வசித்து, பிறகு அந்த மரத்தின் மேல் பரண் அமைத்து அதில் படுத்துத் தூங்கி (மிருக பயங் களுக்காக) இப்படியெல்லாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நாட்டார் சொல் கதைகள் கதைக் கதையாக நிறைய சொல்லியிருக்கின்றன.
ஒரு அந்தி நேரம், திக்குத் திசை தெரி யாத காட்டில் சிக்கிய ஒருவனுக்கு அந்த மலங்காட்டில் வேட்டையாடிப் பிழைக் கும் வேட்டுவ தம்பதியர் அடைக்கலம் தருகிறார்கள். தங்கள் இரவு உணவில் பங்கு தருகிறார்கள். பிறகு, மரத்தின் மேலே அவர்களுடைய பரணுக்கு வந்து படுத்துக்கொள்கிறார்கள். வந்த விருந்தாடி, ‘‘இருவருக்கான பரணில் மூவர் எப்படிப் படுக்கிறது? நான் கீழே தரையில் படுத்துக்கொள்கிறேன்’’ என்று சொல்ல, ‘‘ராத்திரி மிருகங்கள் வந்து நம்மைத் தின்றுவிடும். ஒரு ராத்திரிதானே எப்படியாவது நெருக்கமாக இருந்து கொள்ளலாம்’’ என்று வேட்டுவன் சொல்ல, இவனும் சரீ என்று ஒரு ஓர மாகப் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னபோது, வேட்டுவன் சொன்னான்: ‘‘ஓரமாகப் படுத்தால் தூக்கக் கலக் கத்தில் புரண்டு படுக்கும்போது கட் டாயம் கீழே விழுந்துவிடுவாய்’’ என்று சொல்லி அவனை இவர்கள் இருவருக்கும் நடுவில் படுக்க வைத்துக்கொண்டான்.
நடு சாமத்தில் ஓரமாகப் படுத்துக் கொண்டிருந்த வேட்டுவன், அசந்த தூக் கத்தில் புரண்டு படுக்கும்போது கீழே விழுந்து மிருகத்துக்கு இறையாகி விடுகிறான்.
இந்தக் கதையில் இந்த இடம்தான் எந்தப் பக்கமும் கிளைவிட வசதி.
‘‘டேய் பாவி! எம் புருசனைக் கொன் னுட்டியேடா’’ என்று தொடரலாம் கதையை.
‘‘நல்ல காரியம் செய்தே; வா கிளம்பலாம் நாம்’’ என்றும் தொடரலாம்.
ஆனால், இங்கு இந்தக் கதை வேற விதமாகக் கிளைவிடுகிறது. அந்த வேட்டு வன் ஒரு ராஜகுமாரனாகப் பிறக்கிறான் என்று. ஏன்? வந்த விருந்தினனை உபசரித்த விதத்துக்காக.
கதை என்பது கருணைக்கிழங்கு. அந்தக் கிழங்கின் எந்தப் பகுதியில் இருந்தும் துளிர் கிளைக்கும்.
மரங்கள் கிளைகள் விடுவதும் இப்படித்தான். கிளைவிடாத மரங்களும் உண்டு. பனை, தென்னையைப் போல. அவையும் கூட அதிசயப்படவைக்க, அபூர்வமாகக் கிளைத்து வேடிக்கை காட்டுவதும் உண்டு.
இசை உலகத்துக்கும் மரங்களின் பங்களிப்புகள் இருக்கின்றன.
நாயனத்துக்கு ஆச்சா மரம். புல்லாங்குழலுக்கு மூங்கில். வீணை, மிருதங்கம் மற்றும் தவிலுக்கு பலா மரம். பிடில் (வயலின்) வாத்தியத்துக்குக் கள்ளிமரம் இப்படி இப்படி.
வீடுகள் கட்டுவதற்கு என்றால் சொல்லவே வேண்டாம். மற்றதெல்லாம் வீட்டுக்குள் அடக்கம்; எரிப்பது வரை!
முதல்முதலில் மரங்கள் பிறந்து வளர்ந்து நின்றபோது அசையாமல்தான் நின்று கொண்டிருந்தனவாம். மரங் களைத் தொடாமல் காற்று விலகி விலகித் தான் போய்க் கொண்டிருந்ததாம். பிறகு மரம்தான் சொன்னதாம் இப்படி:
‘‘என்ன இது, இப்படிப் பண்றே? எவ் வளவு நாட்கள்தான் நான் அசையாமல் நின்று கொண்டிருப்பேன்? என்னைத் தொட்டுப் பிடித்து ஆட்டக் கூடாதா?’’ என்று கேட்டதாம்.
“அப்படியா? உனக்கு ஆசையானால் செய்கிறேன்’’ என்று தொட்டவுடனே மரத்துக்கும் ரொம்பப் பிடிச்சிப் போச் சாம். விடமுடியலை காத்துக்கும். கிடைச்சுது… கிடைச்சுது… என்று பிடித்து ஆட்டிக்கொண்டே இருக்கிறதாம்.
நாம நினைக்கிறது போல ‘மரம் சும்மா இருந்தாலும் காற்றுதான் அதை அசைத்துக்கொண்டே இருக்கிறது’ என்று சொல்றதெல்லாம் சும்மா!
காற்று எங்கே நுழைந்து போய் வந்தாலும் நமக்கென்னெ என்றுதான் இருப்போம்.
நாயனத்துக்குள்ளும் புல்லாங்குழ லுக்குள்ளும் போய் வரும்போதுதான் சொக்க வைக்கிறது. ‘ஆஹா! அடே யப்பா…’ என்று இருக்கிறது கேட்க.
மரங்களை வெளியே நிற்க வைத்து விட்டு வீட்டுக்குள் வந்து மனுஷன் முடங்கிக் கொள்கிறது அநியாயம்தான்.
பகலெல்லம் மரங்களுக்குக் கீழேயே இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தை விட்டபிறகுதான் மனுஷனுக்கு சீண்றம் பிடிக்க ஆரம்பித்தது.
அந்த ஊரில் வேலைக்குப் போக முடியாத வயசாளிகள் எல்லாம் கம்மாய்க்கரை மரங்களுக்குக் கீழேதான் உட்கார்ந்தும் படுத்தும் கிடக்கிறது.
நடமாட்டம் குறைந்த பிறகும் காலமெல்லாம் உழைத்து, முடியாத போதுதான் கிழவனார்கள் மரத்தடியில் வந்து தஞ்சம் புகுகிறார்கள்.
‘ஒவ்வொரு தொட்டிக்கட்டு வீடுகளின் தொட்டிக்குள்ளும் ஒரு நிழல்தரும் மரம் இருந்தால் எப்படி இருக்கும்!’ என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் ஒரு மரம் இருக்கிறதே; இருந்ததே தலவிருட்சம் என்று.
ஒவ்வொரு வீட்டினுள்ளும் ஒரு நிழல் தரும் மரம் இருந்தால் அந்த வீட்டின் பாட்டிமார்களுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் கொண்டாட்டம்தான்!
மரம் இருக்கும் வீட்டில் மருத்துவ ருக்கு வேலை இருக்காதுதானே? ‘வீட் டடிக்கு வேம்படி சுகம்’ என்ற பழமொழி இருக்கே.
தென்னந்தோப்பு மாந்தோப்பு போன்ற மரங்கள் சூழ்ந்த தோப்புகளின் நடுவே வீடுகள் அமைந்தவர்கள் பாக்கிய சாலிகள்!
மானாவாரிக் கருப்பு மண்காரர் களுக்கு வேப்பமரம் ஒன்றே கதிமோட்சம். அவன் வாழும் தலத்தின் விருட்சம் அதுதான்.
ஊருக்கு மத்தியிலும் ஊரைச் சுற் றிலும் எங்கெங்கே இடம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் வேப்ப மரங்கள் வைத்து உண்டாக்கினார் தாத்தா.
அகலமான தொடிக்கட்டு இருந்தால் வேப்பமரம் வைக்கலாம். கட்டிடங் களைப் பாதிக்காது.
என்னுடைய தீரவாசத்து நண்பருக்கு தென்னந்தோப்புகள் நாலைந்து இடங் களில்இருந்தன. ஒரே ஒரு தோப்பில் மட்டும் தென்னைகள் பார்க்க ஆரோக் கியமாகத் தெரியும். காய்ப்பும் அதிக மாகக் கிடைக்கும். உரமிடுதல், தண்ணீர்ப் பாய்ச்சுதல் போன்ற பராமரிப்புகள் ஐந்து தோப்புகளுக்கும் ஒன்றுபோலத்தான் நடந்தன. ‘ஏன் இந்தத் தோப்பு மட்டும் இப்படி?’ என்று ஒருநாள் தனது வீட்டுக் கணக்கப்பிள்ளையிடம் கேட்டாராம்.
‘‘அது வேறு ஒரு காரணமும் கிடை யாதய்யா. இந்தத் தோப்புக்கு நடுவில் ரெண்டு வேப்பமரங்கள் இருக்கும், அவ் வளவுதாம்’’ என்றாராம். உண்மையும் அதுதான்.
இங்கே நாங்கள் இப்போது குடி யிருக்கும் புதுச்சேரி ‘க்யூ 13’-ல் உள்ள புறவாசல் தோட்டத்தில் துளசிச் செடி வைத்து வளர்ந்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர் ஏழெட்டு மிளகாய் நாற்று கொண்டுவந்து நட்டினார். எல்லா நாற்று களும் பிழைத்து வளர ஆரம்பித்தன. துளசிச் செடியை அண்டியுள்ள மிள காய்ச் செடிகள் மட்டும் குதியாளம் போட் டுக் கொண்டு, வேகமாயும் ஆரோக்கிய மாகவும் வளர்ந்து பூக்கள் விட ஆரம்பித்து விட்டன. மற்றச் செடிகள் சவலைப் பிள்ளைகள்போல சம்பிவிட்டன.
பார்த்துக் கொண்டே இருக்கும் போதே பிஞ்சுகள் இறங்கி காய்கள் ஆகின. வழக்கமாக மிளகாய்ச் செடிகள் ரொம்பத்தான் செல்லங் கொஞ்சும்; மருந்து மாத்திரைகள் அது இது என்று செலவை இழுத்து வைத்தும்கூட சுருட்டை, தேமல், உதிரி நோய் என்று ரொம்பவே வம்பு பண்ணும்.
ஆனால், அதனை எதுவுமே அண்டாமல் பாதுகாத்தது துளசிச் செடிதான் என்று தெரிந்துவிட்டது.
தாவரங்களில் நட்புச் செடி, விரோதிச் செடி என்று இருக்கும்போல.
கத்தரிக்காய்ச் செடிக்குப் பக்கத்தில் வெண்டைக்காய்ச் செடி வைத்தால் தொலைந்தது. மருந்துக்குக்கூட ஒரு கத்தரிக்காய் கிடைக்காது!
- இன்னும் வருவாங்க…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT