Published : 04 Mar 2021 05:16 PM
Last Updated : 04 Mar 2021 05:16 PM
'சதுர பிரபஞ்சம்' எனும் கோ.வசந்தகுமாரனின் கவிதைப் புத்தகத்தை முன்பே வாசித்து அவரது புன்னகை மொழியில் குதூகலித்திருந்த நான்... இப்போது படித்து பரவசமானது - அவரது 'முறிந்த வானவில்' எனும் புத்தகத்தை.
முன் பக்கத்தில் -
'வணக்கம் வசந்தகுமாரன்
எப்போதுமே உங்கள் கவிதைகள்
இனியனதானே?
நிலாவை மீன் கிழித்தாலும் கூட'-
- என அண்ணன் கல்யாண்ஜி (வண்ணதாசன்) முன்மொழிந்திருப்பது இந்நூலுக்கான ஐ.எஸ்.ஓ. தரச் சான்று.
'முறிந்த வானவில்' முழுக்கவும் குறுங்கவிதைகளைக் கொண்டு தன்னை மினுக்கிக் கொள்கிறது. அத்தனையும் மீனாட்சி அம்மையின் மூக்குத்திகள். உரு சிறிது… ஜொலிப்பு கூடுதல்!
'எப்போதும் உன்னைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறேன்
என்னிடம்'.
- இக்கவிதை பேரன்பின் பாடசாலை, இதழாராய்ச்சிக் கூடமாகவும் தரிசனம் தருகிறது.
***
குழந்தைகள் வரையும்
ஓவியங்களில்
டைனோசர்களைத் துரத்துகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்'
- எனும் கவிதையில் குழந்தைமை மொழித் தூளி கட்டி... வானத்தைத் தாலாட்டுகிறது.
***
'நீ முகம் பார்த்த
நிலைக் கண்ணாடியில்
இறகைப் போல்
மிதந்து கொண்டிருக்கிறது
உன் பிம்பம்'.
- வசந்தகுமாரன். இக்கவிதைக்குள் காதலின் வளையல் வீட்டைக் கட்டி முடித்து…கொலுசின் புகுமனை புகுவிழா நடத்துகிறார்.
***
'பார்வை இழந்தவளின்
விலகியிருந்த
மாராப்புச் சேலையை
என் கண்கள் மூடிச்
சரிசெய்தேன்'
என்றெழுதும்போது கவிஞரின் ஒழுக்கமைதி நம்முன் தலை வாழை விரிக்கிறது.
***
நம் அழைப்பைக் கடவுள் ஏன் ஏற்க மறுக்கிறான் என்பதற்கும்… எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் இருப்பதற்கும் நிஜக் காரணத்தையும் சொல்கிறது இக்கவிதை:
'மனிதனைப் படைத்த
குற்றத்தைச் செய்துவிட்டு
தலைமறைவாகி விட்டான்
கடவுள்’
***
'என்னை
அவளுக்கு விற்றுவிட்டேன்
திரும்பவும்
வாங்க முடியாத விலைக்கு'
- எனும் வரிகளில் அர்ப்பண வண்ணத்துப்பூச்சிகள் வந்தமர்ந்துள்ளன. இதில் நிபந்தனையற்ற பேரன்பு நிகழ்ந்து கலையாகிவிடுகிறது.
***
சமீபத்தில் ரெமொ என்பவர் எழுதியிருந்த
'மணலில் இறங்கினார்
கள்ளழகர்' - என்கிற சமகாலக் கவிதையைப் படித்துவிட்டு பூரித்துக் கிடந்த எனக்கு...
நதி என்பது வினையாலனையும் பெயர் என்பதைப் புரியவைக்கிறது வசந்தகுமாரனின் ஒரு கவிதை:
'ஒரு கூழாங்கல்லை
மணலாக
செதுக்கும்வரை
ஓய்வதில்லை
நதி'
இக்கவிதையை வாசித்து முடித்தபோது… ’இருக்கிறோம் என்பது செய்தி… இயங்குகிறோம் என்பது தலைப்புச் செய்தி’ என்று யாரோ சொன்ன இயங்கியல் தத்துவம் நினைவில் சர்க்கரை தூவியது.
***
'மரம் – மனிதனின் முதல் நண்பன்…
மனிதன் – மரத்தின் முதல் எதிரி'
என்பார் வைரமுத்து.
மரங்களின் தாயார் சந்நிதியாக விளங்கிய வங்காரி மத்தாயின் ஆவி புகுந்து கொண்டுதான் வசந்தகுமாரனை, கீழுள்ள கவிதையை இப்படி எழுத வைத்திருக்கிறது என்பேன்.
'குழி பறிப்பதொன்றும்
தவறில்லை
மரம் நடுவதாக இருந்தால்.'
- உண்மையில் இது வசந்தகுமாரனின் ’மண்’ கி பாத்.
இன்னொரு கவிதையில் வசந்தகுமாரனின் இரக்கம் சமரச சுத்த சன்மார்க்கத்தை விதைக்கிறது:
'ஒரு பறவையை
வரைவதற்கு முன்பு
ஒரு கூட்டை வரைந்துவிடு
பாவம் எங்கு போய்
தங்கும் அவை?”
***
'பேசிப் பார்த்தேன்
பார்த்துப் பேசு
என்கிறாள்'
- இது அண்மைக்கால அக 400. இன்னொரு கவிதை மன்மதம் பேசுகிறது,
இப்படி:
'யாருக்கும் தெரியாமல்
வரச் சொன்னாய்
நான்
எனக்குத் தெரியாமல்
வந்துவிட்டேன்'
காதலின் சந்நிதானத்தில் ஆடிக் கூழ் ஊற்றுகிறது இக்கவிதை. கூடவே- மொழியின் முருங்கைக் கீரை துவட்டல்.
***
'விற்கப்படாத வாழ்த்து அட்டை
யாரை வாழ்த்தும்.?
- என்பது வசந்தகுமாரனின் கேள்வியல்ல... நம் அன்றாடங்களின் சிறுகுறிப்பு. புன்னகை விடை.
***
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிற கணியன் பூங்குன்றனத்துவம் தெரிகிறது இக்கவிதையில்..
'முகம் பார்க்கும்
நிலைக்கண்ணாடியில்
எனக்கு எதிரே
நிற்கிறான்
என் முதல் எதிரி
தன்னை உணரும் சுய வேதி வினைபுரிதலை விளக்கும் நியான் வெளிச்சமே இக்கவிதை.
***
'சிலைகளைத் திருடு
கடவுளை விட்டுவிடு'
-எனும் கவிதை நம்மின் அடுத்த இருக்கையில் வந்தமர்கிறது. இதில் ஏகப்பட்ட உள் அறைகளைக் கொண்ட மஞ்சள் வண்ணக் கூட்டை கட்டும் தேனீயாகியிருக்கிறார் கவிஞர். உள்புக... உள்புக வெவ்வேறு இனிப்பு அர்த்தங்கள் தருகிறது.
***
'என்னை வழியில்
கண்டால்
நான் தேடுவதாகச்
சொல்லுங்கள்'
- இக்கவிதையில் சொல்லப்படும் 'நான்' நாம் எல்லோரும்தான்.
'முறிந்த வானவில்' எனும் கோ.வசந்தகுமாரனின் இக்கவிதைத் தொகுப்பை வாசித்த நிமிடங்கள்... சமையலறை அலமாரிக் கதவு திறந்து ஜீனி ஜாடி எடுத்து சர்க்கரை எடுத்து எறும்புகளுக்குத் தூவுகின்றன.
இப்புத்தகத்தை 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்றே பாடத் தோன்றுகிறது. அம்மாவின் சமையலைப் போல பக்கத்துக்குப் பக்கம் கமகமக்கிறது தமிழ் வாசம்.
இந்நூலை ‘தமிழ் அலை’ இசாக் வெளியிட்டுள்ளார்.
***
முறிந்த வானவில்’
தமிழ் அலை வெளியீடு
8/24. பார்த்தசாரதி தெரு,
தேனாம்பேட்டை/ சென்னை – 600 086
***
பக்கம்: 144 விலை ரூ:100
**
இப்புத்தகம் தற்போது சென்னை – புத்தகக் காட்சியில் அரங்கு எண்: 278-ல் தமிழ் அலை அரங்கில் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT